நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1000 மெகாவட்டும் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் 4 அணு உலைகளுக்கான கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. ஆனாலும், அணு உலை அமைந்துள்ள வளாகத்துக்கு அருகிலேயே கல் குவாரிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. குவாரிகளுக்கு வைக்கப்படும் வெடிகள் வெடிக்கும் போது ஏற்படும் நில அதிர்வுகளால் ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் வாழ்கின்றனர். இந்த நிலையில், ராதாபுரம் கால்வாய் கடைமடை விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகனிடம் மனு அளித்தனர். அதில்,"கூடங்குளம் அணுமின் நிலையம் நாட்டின் மிக முக்கியமான பாதுகாப்பு அமைப்பாக இருப்பதால், அதன் அருகில் நடைபெறும் வெடிப்பு பணிகள் மற்றும் அவற்றால் ஏற்படும் நில அதிர்வுகள் குறித்து முழுமையான அறிவியல் ஆய்வு மேற்கொள்வது மிகவும் அவசியம். கூடங்குளம் அணு உலை மக்கள் பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். எனவே,, கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் குவாரி வெடிப்புகளின் தாக்கம் குறித்து உரிய நிபுணர் குழுவின் மூலம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அந்த ஆய்வு நிறைவடையும் வரை புதிய குவாரிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது" எனக் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து ராதாபுரம் கால்வாய் கடைமடை விவசாயிகள் சங்கத்தி செயலாளர் டோனி கூறுகையில், "ராதாபுரம் தொகுதிக்கு உள்பட்ட இருக்கன்துறை கிராமத்தில் தற்போது 17 குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இது தவிர புதிதாக 10 குவாரிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட உள்ளது. இந்த குவாரிகள் அனைத்தும் கூடங்குளம் அணு உலையிலிருந்து 5முதல் 7 கி.மீ தூரத்திலேயே இருக்கின்றன. விவசாயிகள் கோரிக்கை இந்தப் பகுதியில் ஏற்கெனவே இரண்டு முறை பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இங்குள்ள குவாரிகளில் வைக்கப்படும் வெடிகள் சக்தி வாய்ந்தவையாக இருப்பதால் கடுமையான நில அதிர்வு ஏற்படுகிறது. குவாரிகளில் வைக்கப்படும் வெடிகளால் கூடங்குளம் அணு உலைக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்கிற அச்சம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இருக்கன்துறை கிராம பஞ்சாயத்து சார்பாக புதிய குவாரிகள் மற்றும் கிரஷர்களுக்கு அனுமதி கொடுக்கக்கூடாது என கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், புதிய கல் குவாரிகளுக்கு அனுமதி கொடுக்கக்கூடாது என்பதை வலியுறுத்தினோம்" என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/kudankulam-nuclear-plant-at-risk-from-quarry-blasts-say-farmers




