காத்மாண்டு, நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,127ஆக அதிகரித்துள்ளது. நேபாளம் பெருவெள்ளம் திபெத்தின் இமயமலை பகுதியில் கடந்த 26-ந்தேதி பனிச்சரிவு காரணமாக போடே கோஷி ஆற்றில் வெள்ளப்பெருக்கு உண்டானது. இந்த வெள்ளம், நேபாளத்தின் வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்களை தாக்கியது. பாறைகள் மண், சேறு-சகதிகளுடன் சீறிப்பாய்ந்து வந்த வெள்ளம் பெரும் பேரழிவை ஏற்படுத்தியது. சுற்றுலா பயணிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். நேபாளத்தில் 2-வது வாரமாக மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதேபோல் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட உடல்களை நேபாள ராணுவத்தினர் படகுகளில் சென்று மீட்டு வருகிறார்கள். பலி எண்ணிக்கை 1,000-ஐ கடந்தது நேற்று காலை நுவாகோட்டின் பெத்ராபதி பகுதியில் சேற்றில் புதையுண்ட ஒரு வீட்டில் இருந்து 23 பேரின் உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டனர். அதே போல் பல வீடுகளில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் இந்த பேரிடருக்கு 903 பேர் பலியாகி இருந்தநிலையில் நேற்று மட்டும் 100 பேர் உடல்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில் மேலும் சில உடல்கள் மீட்கப்பட்டுள்ளநிலையில், நேபாள பேரிடர் பலி எண்ணிக்கை 1,127 ஆக அதிகரித்துள்ளது. போடே கோஷி மற்றும் திரிசூலி நதிப்படுகைகளில் உள்ள 11 நீர்மின் திட்டப் பகுதிகளில் பணியாற்றிய 894 பேரின் கதி என்ன என்பது இன்னும் தெரியவில்லை. இவர்களில் சுமார் 500 பேர் சுரங்கங்களில் சிக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களை மீட்கும் பணிகளில் பேரிடர் மீட்புத்துறையினர் சுரங்கங்களுள் களம் இறங்கி உள்ளனர். தோண்டத் தோண்ட கிடைக்கும் சடலங்களால் அதிர்ச்சி நிலவும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. புதிய வெள்ள எச்சரிக்கை நேபாள தேசிய பேரிடர் ஆபத்து குறைப்பு மற்றும் மேலாண்மை முகமை தகவலின்படி, 583 வெளிநாட்டினர் உள்பட சுமார் 4 ஆயிரம் பேர் மாயமாகியுள்ளனர். இதுவரை 12 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணியில் 21,300-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினரும், ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில் நேபாளத்தில் கிழக்கு, மத்தி மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள பல மாவட்டங்களில் வெள்ள அபாயத்தை குறித்து ஆற்றங்கரையோர மக்களுக்கு மீண்டும் புதிய வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நதிகளின் நிலையைக் கண்காணிக்க ரசுவா பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சாலைகள் சேதமடைந்ததால் காத்மாண்டுவை இணைக்கும் நெடுஞ்சாலைகளில் ஒருவழிப் போக்குவரத்து அமல்படுத்தப்பட்டுள்ளது. 163 இந்தியர்கள் மீட்பு நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளில் 163 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேபாள அதிகாரிகளுடன் இணைந்து இந்தியா தனது நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அந்நாட்டில் 275-க்கும் மேற்பட்ட இந்தியர்களும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 128 பேரும் இன்னும் காணாமல் போயுள்ளனர் அல்லது அவர்களுடன் தொடர்புகொள்ள முடியாத நிலை உள்ளது. நேபாள அதிகாரிகளுக்குத் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் உதவ சுரங்கப்பாதை மீட்புக் குழு ஒன்று அனுப்பப்பட்டுள்ளதோடு, இந்தியாவிலிருந்து 19 பேர் கொண்ட சிறப்பு தடயவியல் நிபுணர் குழு ஒன்றும் காத்மாண்டுவில் தனது பணிகளை தொடங்கியுள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/world/nepal-tibet-floods-death-toll-rises-to-1050-163-indian-nationals-successfully-evacuated




