புதுடெல்லி, தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவஹா் நவோதயா வித்யாலயா பள்ளியை நிறுவ வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்திரவிட கோரி குமரி மகா சபா என்ற அமைப்பு சாா்பில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை நவோதயா பள்ளிகளை திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்த நிலையில் மதுரை ஐகோர்ட்டு கிளையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் 15-ந்தேதி, இடைக்கால தடையை நீக்கிய சுப்ரீம் கோர்ட்டு, தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா வித்யாலயா பள்ளிகளை நிறுவுவதற்கு தேவையான நிலங்களை அடையாளம் காணுமாறு உத்தரவிட்டது. இந்த உத்தரவை திரும்ப பெறக்கோரி தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நீதிபதி பி.வி.நாகரத்னா, நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “தமிழ்நாடு அரசு தங்களின் மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு மண்ணில் இந்தி கற்பிக்கப்படாத நிலை இருக்கக் கூடாது. உங்கள் மாநிலத்தில் நீங்கள் செய்துவரும் நல்ல விஷயங்களுடன் கூடுதலாக ஒன்றைச் சேர்த்துக்கொள்வது உங்கள் தரத்தைக் குறைத்துவிடாது. டெல்லியில் இருந்து வரும் ஒரு விஷயம் சென்னையின் தரத்தைக் குறைத்துவிடாது. சென்னை மக்கள் டெல்லியை அந்நியப்படுத்தக்கூடாது. அதேபோல், டெல்லியும் சென்னையை அந்நியப்படுத்தக்கூடாது” என்று தெரிவித்தனர். தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், “இது மாநிலத்தின் கொள்கைக்கு எதிரானது. இது தமிழுக்கு மேலாக ஹிந்தியை முன்னிறுத்துகிறது. இத்தகைய ஒருங்கிணைப்பு அரசியலமைப்பின் நோக்கமல்ல. இது மத்திய அரசு நடத்தும் பள்ளி அல்ல. ஒரு சங்கத்தால் நடத்தப்படும் பள்ளி. இதில் ஹிந்திதான் மேலோங்கி இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதம் காட்டப்படுகிறது. ஒவ்வொரு விவகாரத்திலும் தனித்தனி கொள்கைகள் இருக்கின்றன, அதனடிப்படையிலேயே செயல்பட முடியும்” எனத் தெரிவித்தார். இருப்பினும், தமிழ்நாடு அரசின் வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், “ஹிந்திதான் பிரச்னை என்றால் மத்திய - மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தலாம். எங்கள் முந்தைய உத்தரவின்படி நவோதயா பள்ளிகளுக்கான இடத்தை தேர்வு செய்யுங்கள்” என்று தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் 15.12.2025 தேதியிட்ட சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால உத்தரவை 3 மாதத்துக்குள் செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/there-should-not-be-a-situation-where-hindi-is-not-taught-in-tamil-nadu-select-sites-for-navodaya-schools-supreme-court




