சென்னை, நாட்டிலே உள்ள சமூகநோய்க்கும் மருந்து கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்தார். இது தொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் நடைபெற்ற கலைஞர் தொலைக்காட்சி செய்தி பிரிவு தலைவர் - எழுத்தாளர் திருமாவேலன் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி ஆற்றிய உரையில் தெரிவித்ததாவது:- மணவிழா நிகழ்ச்சி அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்! தமிழே வாழ்வு என தொண்டாற்றி வரும் புலவர் படிக்கராமுவின் குடும்பத்தில், அதுவும் குறிப்பாக திருக்குறள் முறைப்படி - நெறிப்படி, நம்முடைய அன்பான வாழ்த்துகளோடு இந்த மணவிழா நிகழ்ச்சி நிறைவேறியிருக்கிறது. திருமாவேலன் புலவர் மு. படிக்கராமு - ப. முத்துலக்குமி அம்மாள், சு. கிருஷ்ணன் - கி. அழகம்மாள் ஆகியோரின் பேத்தியும், கலைஞர் தொலைக்காட்சி செய்திகள் பிரிவு தலைவர் நம்முடைய புரட்சி எழுத்தாளர் – திராவிட இயக்க எழுத்தாளர் இனிய சகோதரர் திருமாவேலன் - ரேணுகா திருமாவேலன் இணையரின் அன்பு மகளுமான டாக்டர் அமிர்தாவுக்கும். மகிழ்ச்சியடைகிறேன் கா. சுந்தரம் - சு. இலட்சுமி அம்மாள், இரா. பாண்டியராஜன் - பா. ரமணி அம்மாள் ஆகியோரின் பேரனும், டாக்டர் பாலசுப்பிரமணியன் - சுதா பாலசுப்ரமணியன் இணையரின் அன்பு மகனுமான டாக்டர் ரவிந்திரனுக்கும் நடைபெற்றிருக்கும் இந்த திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துவதில், உங்களோடு சேர்ந்து நானும் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன். தமிழர்களின் நெறி இந்த இனிய மணவிழா திருக்குறள் நெறிப்படி நடந்தேறியிருக்கிறது. இதுதான் தமிழர்களின் நெறி! இதுதான் தமிழர்களின் பண்பாடு! இதைத்தான் திராவிட இயக்கம் நூறாண்டு காலமாக வலியுறுத்தி, தொடர்ந்து நிறைவேற்றி செயல்படுத்தி காட்டி கொண்டிருக்கிறது. மூன்று திட்டங்கள் இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், இது போன்ற சுயமரியாதை திருமணங்கள் 1967-க்கு முன்பு நடைபெறும் என்று சொன்னால், அந்த திருமணங்கள் சட்டப்படி முறைப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை அன்றைக்கு நாம் பெற்றிருக்கவில்லை. ஆனால், முதன்முதலில் ஒரு மாநில கட்சி நம்முடைய தமிழ்நாட்டிலே ஆட்சி பொறுப்பேற்று, திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி உதயமாகி, 1967-இல் அண்ணா முதன்முதலாக முதல்-அமைச்சராக பொறுப்பேற்று சட்டமன்றத்திற்குள்ளே சென்று, நம்முடைய தமிழ்நாட்டிற்காக முத்தான மூன்று திட்டங்களை நிறைவேற்றி தந்தார்கள். சுயமரியாதை திருமண சட்டம் ஒன்று, இருமொழி கொள்கை. இன்னொன்று, தமிழ்நாட்டிற்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டக்கூடிய நிகழ்வு. அடுத்து, சுயமரியாதை திருமணங்கள் செல்லுபடியாவதற்கான சட்டம். அண்ணாவால் சட்டமன்றத்திலே சுயமரியாதை திருமணங்கள் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்று நிறைவேற்றி தந்திருக்கும் அந்த திருமணம்தான், இன்றைக்கு இங்கே நடந்தேறியிருக்கிறது. இதுபோன்ற திருமணங்களை நம்முடைய தலைவர் கலைஞரும், இனமான பேராசிரியரும், இந்த இயக்கத்தின் முன்னோடிகளும் ஆயிரக்கணக்கான அளவில் நடத்தி வைத்திருக்கிறார்கள். தொடர்ந்து நாமும் அதை நடத்தி வருகிறோம். திருவள்ளுவர் விருது இல்வாழ்க்கையை பற்றி வள்ளுவர் சொல்கிறபோது, இல்வாழ்க்கை என்பது அன்பும் அறனும் கொண்டதாக அமைந்திட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். நம்முடைய திருமாவேலன் அவர்களுடைய தந்தை புலவர் படிக்கராமு, திருக்குறளை பரப்புகிற பணியிலே தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, அதற்காகவே அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய பணியை பாராட்டி, கடந்த திராவிட மாடல் ஆட்சியில் அவருக்கு திருவள்ளுவர் விருது வழங்கி சிறப்பித்திருக்கிறோம். தலைமுறைகளை கடந்தும் இன்றும் இந்த பணியை நம்முடைய திருமாவேலனுடைய குடும்பத்தார் தொடர்ந்து செய்து கொண்டிருப்பது பாராட்டுக்குரியது, மகிழ்ச்சிக்குரியது, பெருமைக்குரியது, போற்றுதலுக்குரியது! கலைஞர் தொலைக்காட்சி நம்முடைய திருமாவேலனிடம் எந்த பணியை கொடுத்தாலும், அதை நேர்த்தியாக, சிறப்பாக, அனைவரும் பாராட்டும் வகையில் நிறைவேற்றி காட்டும் ஆற்றலை பெற்றவர் அவர். இன்றைக்கு கலைஞர் தொலைக்காட்சியில் செய்தி பிரிவிலே தலைவராக பொறுப்பேற்று சிறப்பாக தன்னுடைய கடமையை நிறைவேற்றி வருகிறார். முரசொலி நாளிதழ் அதுமட்டுமல்ல, திராவிட முன்னேற்ற கழகத்தின் போர்முரசாக விளங்கி கொண்டிருக்கும், கலைஞரின் மூத்த பிள்ளையாக விளங்கி கொண்டிருக்கும் 'முரசொலி' நாளிதழின் தலையங்கத்தை தினமும் நீங்கள் படித்து கொண்டிருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். அந்த தலையங்கத்தை நம்முடைய திருமாவேலன் தான் தொடர்ந்து எழுதி வருகிறார். அரசியல் சூழ்நிலை குறிப்பாக இளைஞர்களுக்கு, இளைய சமுதாயத்தினருக்கு நம்முடைய திராவிட முன்னேற்ற கழகத்தின் வரலாறு மட்டுமல்லாது, நம்முடைய திராவிட இயக்கத்தின் வரலாற்றையும், அவர்கள் ஆற்ற வேண்டிய பணிகளையும், அதிலும் குறிப்பாக இன்றைக்கு இருக்கும் அரசியல் சூழ்நிலைகளையெல்லாம் தெளிவாக எடுத்து சொல்லி, அந்த பணியை அவர் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார். கடமைப்பட்டிருக்கிறேன் நான் இந்த நேரத்தில் உங்களையெல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புவது, திருமாவேலன் முரசொலியில் எழுதும் தலையங்கத்தை தொடர்ந்து இங்கே வந்திருக்கும் அனைவரும் படித்தாக வேண்டும். படிப்பது மட்டுமல்லாமல், மக்களிடம் கொண்டு சேர்த்தாக வேண்டும் என்ற அந்த வேண்டுகோளை இந்த நேரத்திலே நான் எடுத்து வைக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். முப்பெரும் விழா அவருடைய பணியை பாராட்டி - திராவிட முன்னேற்ற கழகத்தின் முப்பெரும் விழா நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது என்பது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும். அந்த வகையில் இந்த மாதம் 15-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள முப்பெரும் விழாவில், தமிழறிஞர்களுக்கு, சான்றோர்களுக்கு, திராவிட இயக்கத்தின் முன்னோடிகளுக்கு விருதுகளை வழங்கி நாம் தொடர்ந்து பெருமைப்படுத்தி வருகிறோம். முரசொலி செல்வம் விருது அந்த வகையில் இந்த ஆண்டு முரசொலி அறக்கட்டளையின் சார்பில், நம்முடைய 'முரசொலி செல்வம் விருது' நம்முடைய திருமாவேலனுக்கு வழங்கப்பட இருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை நீங்கள் ஏற்கனவே பத்திரிகையில் பார்த்திருப்பீர்கள். அதனை நான் மகிழ்ச்சியோடு இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, அவருடைய இல்லத்தில் நடைபெறும் இந்த மணவிழாவில் அவரை பாராட்டும் வாய்ப்பு எனக்கு கிடைத்தமைக்காக நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். சமூக நோய் இங்கே மணமகன், மணமகள் இரண்டு பேருமே மருத்துவர்கள். மருத்துவர்களாக இருக்கும் அவர்களிடம் நான் கேட்டு கொள்ள விரும்புவது, மனிதர்களின் நோய்க்கு இன்றைக்கு நீங்கள் எப்படி மருந்துகளை கண்டுபிடித்து சிகிச்சை வழங்கி வருகிறீர்களோ, அதுபோல இன்றைக்கு நாட்டிலே உள்ள 'சமூக நோய்க்கும்' மருந்து கண்டுபிடித்து, அதற்கும் நீங்கள் சிகிச்சை அளிக்க வேண்டும். அந்த பணியை நிறைவேற்றும் கடமையை நீங்கள் நிறைவேற்றி தர வேண்டும் என்பது என்னுடைய அன்பான வேண்டுகோள். தமிழ் பெயர்கள் அடுத்து, உங்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகள் ஆண் குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தையாக இருந்தாலும், அந்த குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள் என்ற வேண்டுகோளை வைத்து விடைபெறுகிறேன். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எடுத்து சொல்லியிருக்கும், "வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்கு தொண்டராய்" மணமக்கள் வாழ்க! வாழ்க! வாழ்க! என வாழ்த்தி விடைபெறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalin-urges-cure-and-treatment-for-indias-social-diseases



