Full Article
புனேவின் புகழ்பெற்ற லோகாகட் கோட்டையில் புகைப்படம் எடுக்கும்போது தவறி விழுந்து இளம் தொழிலதிபர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட சம்பவம், தற்போது திட்டமிட்ட கொலை எனத் தெரிய வந்துள்ளது. இந்த அதிர்ச்சி வழக்கில், அவரது வருங்கால மனைவியும், அவரின் காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் உதய்பூர் அரண்மனையில் பிரம்மாண்ட திருமணத்திற்கு ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், இந்த சதிச்செயல் அம்பலமாகியுள்ளது. கேத்தன் அகர்வால் புனே மாவட்டம், ககுஞ்சே பகுதியைச் சேர்ந்தவர் கேத்தன் அகர்வால் (26). இவர் தனது குடும்பத்திற்குச் சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் இயக்குநராக இருந்தார். கடந்த ஜூன் 18-ம் தேதி, லோனாவாலா அருகே உள்ள லோகாகட் கோட்டைக்கு தனது வருங்கால மனைவி சியா கோயல் மற்றும் நண்பர்களுடன் மலையேற்றத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, கோட்டையின் உயரமான பகுதியிலிருந்து சுமார் 400 அடி பள்ளத்தில் விழுந்து கேத்தன் உயிரிழந்தார். பலத்த காற்று வீசியபோது புகைப்படம் எடுக்க முயன்றபோது கேத்தன் தவறி விழுந்துவிட்டதாக சியா கோயல் லோனாவாலா ஊரகக் காவல்துறையிடம் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, இது ஒரு விபத்து மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், மரணத்தைச் சுற்றியிருந்த சூழ்நிலைகள் சந்தேகத்திற்குரியதாக இருந்ததால், புனே ஊரகக் காவல் கண்காணிப்பாளர் சந்திப் கில் தலைமையிலான குழுவினர் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இதுகுறித்து காவல்துறை கூறுகையில், "நிதிப் பிரச்னைகள், தனிப்பட்ட உறவுகள் எனப் பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, சியா கோயலுக்கு, புனேவின் கோந்த்வா பகுதியைச் சேர்ந்த சேத்தன் சௌத்ரி (22) என்பவருடன் பழக்கம் இருந்தது தெரியவந்தது," என்றனர். விசாரணையில், கேத்தனை திருமணம் செய்துகொள்ள சியாவுக்கு விருப்பமில்லை என்பதும், சேத்தனுடனான தனது உறவுக்கு கேத்தன் ஒரு தடையாக இருப்பதாக அவர் கருதியதும் அம்பலமானது. இதனால், கேத்தனை தீர்த்துக்கட்ட சியாவும், சேத்தனும் சதித்திட்டம் தீட்டியுள்ளனர். திட்டத்தின்படி, ஜூன் 18 அன்று சியா, கேத்தனை லோகாகட் கோட்டைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், அங்கு வரவழைக்கப்பட்ட சேத்தனுடன் சேர்ந்து, கோட்டையின் உச்சியிலிருந்து கேத்தனை கீழே தள்ளி கொலை செய்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது சியா கோயல் மேலும், இது அவர்களின் இரண்டாவது கொலை முயற்சி என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு, ஜூன் 14-ம் தேதி, பாம்பு தாக்குதல் குறித்த போலியான பயத்தை உருவாக்கி கேத்தனை பள்ளத்தில் தள்ள முயன்றதாகவும், ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்ததாகவும் கூறப்படுகிறது. கேத்தனின் குடும்பத்தினர் இந்த சம்பவத்தால் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். கேத்தன்-சியா திருமணத்தை இந்த ஆண்டு இறுதியில் உதய்பூரில் உள்ள ஒரு பிரம்மாண்ட அரண்மனையில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. திருமணத்திற்கு முன்பு இந்த ஜோடி பாலிக்கு சுற்றுலா செல்லவும் திட்டமிட்டிருந்தது. ஆனால், பயணத்தின்போது சியா தனது பாஸ்போர்ட்டைத் தொலைத்துவிட்டதாகக் கூறியதால் அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது. ஆனால், அவர் வேண்டுமென்றே தனது பாஸ்போர்ட்டைக் கிழித்து எறிந்தது பின்னர் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில், சந்தேகத்தின் அடிப்படையில் சேத்தன் சௌத்ரியை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சியா கோயலும் கைது செய்யப்பட்டார். கேத்தனின் தந்தை விஷால் அகர்வால் அளித்த புகாரின் பேரில், லோனாவாலா ஊரகக் காவல்துறையினர் கொலை மற்றும் குற்றவியல் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சதியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது. திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருந்த 6 வயது சிறுவன் கொலை; தாய், ஆண் நண்பருக்கு ஆயுள் தண்டனை முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Full article — see link below



