மதுரை, மதுரை-ராமேசுவரத்துக்கு இயக்கிய சிறப்பு ரெயில் கீழ்மதுரை ரெயில் நிலையத்தில் நிற்காமல் சென்றது தொடர்பாக என்ஜின் டிரைவர்கள். ரெயில்வே கார்டு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க மதுரை கோட்ட மேலாளர் உத்தரவிட்டார். சிறப்பு ரெயில் ராமேசுவரம் கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா நடந்து வருகிறது. மேலும் நேற்று ஆடி அமாவாசை என்பதால், பக்தர்களின் வசதிக்காக மதுரையில் இருந்து ராமேசுவரத்துக்கு நேற்று முன்தினம் இரவு முற்றிலும் பொதுப்பெட்டிகளை கொண்ட சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயில் (வ.எண்.06103) மதுரையில் இருந்து நள்ளிரவு 11 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 2.30 மணிக்கு ராமேசுவரம் சென்றடைந்தது. அதே போல, மறுமார்க்கத்தில் மற்றொரு ரெயில் (வ.எண்.06104) ராமேசுவரத்தில் இருந்து இயக்கப்பட்டது. இந்த ரெயில் நேற்று அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டு காலை 6 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைந்தது. இந்த ரெயில்கள் கீழ்மதுரை, திருப்புவனம், மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. நிற்காமல் சென்றது ரெயில்வே அறிவிப்பை தொடர்ந்து பயணிகள் மேற்கண்ட ரெயில் நிலையங்களில் ராமேசுவரம் செல்ல காத்திருந்தனர். இதற்கிடையே, மதுரையில் இருந்து ராமேசுவரம் புறப்பட்ட சிறப்பு ரெயில் கீழ்மதுரை ரெயில் நிலையத்தில் நிற்காமல் சென்று விட்டது. இதனால் அங்கிருந்த பயணிகள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தனர். கீழ்மதுரை ரெயில் நிலையத்தில் பணியில் இருந்த ஸ்டேஷன் மாஸ்டர் மதுரையில் உள்ள உயர் அதிகாரிகளிடம் பேசி, இந்த ரெயிலுக்கு டிக்கெட் வாங்கியிருந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட பயணிகளிடம் டிக்கெட்டை திரும்ப பெற்றுக்கொண்டு, அதற்கான கட்டணத்தை திரும்ப கொடுத்ததாக கூறப்படுகிறது. அத்துடன், அவர்கள் அனைவரையும் ஆட்டோ மூலம் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது. நடவடிக்கை நிறுத்தத்தில் ரெயில் நிற்காமல் சென்றதற்கான காரணம் குறித்து மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், மதுரையில் இருந்து செல்லும் ரெயிலுக்கு கீழ்மதுரை, திருப்புவனம் ரெயில் நிலையங்களில் நிறுத்தம் வழங்கப்பட்டு இருந்ததும், மறுமார்க்கத்தில் ராமேசுவரத்தில் இருந்து வரும் ரெயிலுக்கு அந்த நிலையங்களில் நிறுத்தங்கள் வழங்கவில்லை என்பதும் தெரியவந்தது. இதை சரிவர கவனிக்காமல் ரெயிலை இயக்கி, கீழ்மதுரையில் நிறுத்தாமல் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, மதுரையில் இருந்து சிறப்பு ரெயிலை இயக்கிய என்ஜின் டிரைவர், உதவி டிரைவர் மற்றும் ரெயில் கார்டு ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கைக்கு கோட்ட மேலாளர் உத்தரவிட்டார். இந்த நடவடிக்கை தென்னக ரெயில்வே வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-that-went-without-stopping-at-keelmadurai-railway-station-action-against-3-people-including-engine-drivers




