சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கால்நடை காப்பகங்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து கால்நடை காப்பகங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொது சுகாதார சீர்கேடு பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்த 2024ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி, சுமார் 22,875 மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பான்மையான மாடுகள் உரிய இடவசதி இன்றி, தொழுவங்களுக்குள் வைத்து பராமரிக்கப்படாமல் சாலைகள் மற்றும் பொது இடங்களில் சுற்றித்திரிந்து வருகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு, பொது சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் சில நேரங்களில் பொதுமக்கள் மாடுகளால் தாக்கப்படும் சம்பவங்களும் ஏற்பட்டு வருகின்றன. இவ்வாறு தெருக்களில் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு மாடு பிடிக்கும் வாகனம் ஒதுக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா 5 மாடு பிடிக்கும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பிடிக்கப்படும் மாடுகள் புதுப்பேட்டையில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவத்தில் அடைக்கப்பட்டு, மாட்டின் உரிமையாளர்களிடமிருந்து அபராதத் தொகை வசூலிக்கப்பட்டு மீண்டும் சாலைகளில் விடக்கூடாது என்ற நிபந்தனையுடன் அந்த மாடுகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. அபராதம் கடந்த 2 ஆண்டுகளில் சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 2,718 எண்ணிக்கையிலான மாடுகள் பிடிக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களிடமிருந்து ரூ.1,24,03,000/- அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மாடுகள் காப்பகங்கள் இந்நிலையில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை முறையாகப் பராமரித்திடவும், பாதசாரிகள் மற்றும் வாகனத்தில் செல்வோருக்கு அச்சுறுத்தல் மற்றும் இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்கவும், பொது இடங்களில் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதைத் தவிர்த்து ஒழுங்குபடுத்தவும், கால்நடை வளர்ப்போர்களது வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகாமல் இருப்பதை ஊர்ஜிதம் செய்யும் வகையிலும் சேவை மனப்பான்மையுடன் 1 முதல் 15 வரை உள்ள மண்டலங்களில் 18 இடங்களில் மாடுகள் காப்பகங்கள் அமைக்கப்படும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் தற்போது 11 நவீன மாடுகள் காப்பகங்கள் அமைக்கப்பட்டு, அதில் 980 மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு வசதிகள் இந்த கால்நடை காப்பகங்களில் கால்நடை மருத்துவர் அறை, பராமரிப்பாளர் அறை, கட்டுப்பாட்டு அறை, மருந்துகள் வைப்பு அறை, கண்காணிப்புக் கேமராக்கள், மின் வசதி, மின் விசிறி வசதி, தண்ணீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு கால்நடைக்கு நாளொன்றுக்கு ரூ.10/- பராமரிப்புக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செயல்பாட்டில் உள்ள நவீன மாடுகள் காப்பகங்களின் விவரங்கள் பின்வருமாறு:- 1. திருவொற்றியூர், 7 டி.பி.பி சாலை. 2. மணலி, 17 அரியலூர், தீயம்பாக்கம். 3. மணலி, 20 காமராஜர் சாலை. 4. மாதவரம். 25 சி. எம். டி. ஏ. டெர்மினல், 5. இராயபுரம், 53 பேசின் பிரிட்ஜ் சாலை. 6. அண்ணாநகர், 95 சிவசக்தி நகர், பாடி பிர்ட்ஜ் அருகில். 7. தேனாம்பேட்டை, 115 பீட்டர்ஸ் சாலை,இராயப்பேட்டை. 8. ஆலந்தூர், 158 எம். ஜி. ஆர் சாலை, நந்தம்பாக்கம். 9. ஆலந்தூர், 158 எம். ஜி. ஆர் சாலை, நந்தம்பாக்கம். 10. பெருங்குடி, 184 வீரபாண்டிய கட்டபொம்மன் குறுக்குத் தெரு. 11. சோழிங்கநல்லூர், 194 பயோ சி.என்.ஜி. பிளான்ட் அருகில். கட்டப்பட்டு வரும் மாடுகள் காப்பகங்களின் விவரங்கள் பின்வருமாறு:- 1. திருவொற்றியூர், 7 டி.பி.பி. சாலை. 2. இராயபுரம், 58 மூர் மார்க்கெட். 3. அம்பத்தூர், என். ஆர். எஸ். சாலை. 4. தேனாம்பேட்டை, கிருஷ்ணாம்பேட்டை. 5. பெருங்குடி, 184 வீரபாண்டிய கட்டபொம்மன் குறுக்குத் தெரு. 6. பெருங்குடி,188 தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலை. 7. சோழிங்கநல்லூர், 194 இஸ்கான் கோயில் அருகில். பெருநகர சென்னை மாநகராட்சி எனவே, மாடுகளின் உரிமையாளர்கள் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தங்கள் மாடுகளை சாலைகளில் சுற்றித்திரிய விடாமல், மாநகராட்சியின் சார்பில் பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கால்நடை காப்பகங்களில் தங்கள் மாடுகளை வைத்துப் பராமரித்திடவும், மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/980-cows-being-maintained-in-11-modern-cow-shelters-chennai-corporation




