சென்னை லலித் கலா அகாடமியில் நடைபெற்ற பனை மற்றும் கடல் சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வைப் பற்றி எடுத்துறைக்கும் புகைப்படக் கண்காட்சி! பனைத் தொழிலாளர்களின் வலி. பனை என்றதும் நுங்கும், கள்ளும் தான் பலரின் நினைவில் தோன்றும். ஆனால், அந்தப் பனை மரத்தின் உச்சியில் தினமும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் பனைத் தொழிலாளர்களின் வலிகளையும், அவர்களின் வாழ்வாதாரப் போராட்டங்களையும் அறிந்தவர்கள் மிகக் குறைவு. அந்தச் சமூகத்தின் வலியை வெளியில் இருந்து பார்ப்பவர்கள் விவரிப்பதைவிட, அதற்குள் பிறந்து வளர்ந்த பிள்ளைகளின் பார்வையில் அந்தக் கதை சொல்லப்படும்போது, அது அனைவரின் மனதையும் நேரடியாகத் தொட்டுச் செல்கிறது. அரசு பள்ளி மாணவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் கன்னிகா புரி, நரிப்பையூர் மற்றும் கீழ அல்லிக்குளம் பகுதிகளில் வசித்து வரும் அரசு பள்ளி மாணவர்கள், அவர்கள் பகுதியில் செய்யும் தொழிலான பனை மற்றும் கடல் சார்ந்த தொழில்களில் மக்கள் எவ்வாறெல்லாம் சிரமப்படுகிறார்கள் என்பதை புகைப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தியிருக்கின்றனர். 250 புகைப்படங்கள் இடம்பெற்றுள்ள இந்தப் புகைப்படக் காட்சியானது, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித் கலா அகாடமியில் பனை மற்றும் கடல் சார்ந்த தொழில்கள் குறித்த உணர்வுபூர்வ புரிதலை ஏற்படுத்தியது. ஆவணப் புகைப்படக் கலைஞரும், மக்களுக்கான புகைப்படக் கலைஞர்கள் குழுமத்தின் (People's Photographers Collective - PPC) நிறுவனருமான எம்.பழனி குமார் தலைமையில், கிராமப்புற இந்தியாவின் மக்கள் காப்பகம் (The People's Archive of Rural India - PARI) ஆதரவுடனும், ஊரகத் தொழிலாளர் மேம்பாட்டுச் சங்கத்துடனும் (Rural Workers Development Society - RWDS) இணைந்து, இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது. உழைக்கும் மக்களின் குழந்தைகளும் புகைப்படக் கலையின் மூலம் தங்கள் வாழ்க்கையைப் பதிவு செய்யும் வாய்ப்பைப் பெற வேண்டும் என்ற நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, சாயல்குடி மாணவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் புகைப்படப் பயிற்சிப் பட்டறை அளிக்கப்பட்டது. பனை & கடல் சார் தொழிலாளர்களின் வாழ்வு; வலியையும் உணர்ச்சியையும் ஆவணப்படுத்திய இளைஞர்கள் |Photo Album தங்கள் வாழ்க்கையை மற்றவர்கள் சொல்லக் காத்திருக்காமல், புகைப்படக் கலையை ஒரு சக்திவாய்ந்த வெளிப்பாட்டுக் கருவியாக மாற்றி, பனை மற்றும் கடல் சார்ந்த சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள் தங்களின் வாழ்வியல், உழைப்பு, நிலப்பரப்புகள் மற்றும் அன்றாட அனுபவங்களைப் பதிவு செய்யும் வாய்ப்பை பீப்பிள்ஸ் போட்டோகிராபர்ஸ் கலெக்டிவ் உருவாக்கிக் கொடுத்தது. மாணவ புகைப்படக் கலைஞர்கள் புகைப்படங்களாக ஆவணம் பனைக்காடுகளுக்குள் குடும்பங்களின் பருவகால இடம்பெயர்வு, கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனை வெல்லம் தயாரித்தல், பனை சார்ந்த கைவினைப் பொருள்கள், கரி உற்பத்தி, உப்பளத் தொழிலாளர்களின் உழைப்பு, தண்ணீர் பற்றாக்குறை, காலநிலை மாற்றம் போன்ற அன்றாட வாழ்வியல் சவால்களை, அந்தச் சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளே கேமரா மூலம் புகைப்படங்களாக ஆவணப்படுத்தி பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்தக் கண்காட்சியின் முக்கிய நோக்கமாகும். மாணவர்களின் நெகிழ்வு அனுபவம். சாயல்குடியைச் சேர்ந்த முனீஸ் பிரபா (16), மோனிகா (15), பொண்ணு லக்ஷ்மி (15), ஜெபமாலை தங்கம் (16), ஜனனி (16), சக்தி முனீஸ்வரி (16), ஆத்தி செல்வம் (16) ஆகிய ஏழு மாணவர்களின் பார்வையில் பதிவு செய்யப்பட்ட பனை மற்றும் கடல் சார்ந்த தொழில் சமூகங்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் புகைப்படக் கண்காட்சி. மாணவி முனீஸ் பிரபா நம்மிடம் பேசுகையில், ``என்னுடைய தாய் உப்பளத் தொழிலாளியாக உள்ளார். அம்மா எப்போதும் வேலைக்குச் சென்றுவிட்டு வருவார்கள். ஆனால் அவர்கள் வேலை செய்யும் இடத்திற்கு கேமராவுடன் சென்று பார்க்கும் போதுதான், அவர்கள் எவ்வளவு சிறமப்படுகிறார்கள் என்பதை அறிந்து கொண்டேன், புகைப்படம் மூலம் அவர்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி உள்ளேன்" என்று கூறினார். 10 ஆம் வகுப்பில் இருந்தே புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் கொண்ட முனீஸ் பிரபா, ``வருங்காலத்தில் பத்திரிகையாளராக வந்து எங்கள் ஊரில் உள்ள பிரச்னைகளை வெளிப்படுத்தி மக்களுக்கு உதவ வேண்டும்" என்றார். மேலும், ``போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் சில சமயங்களில் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. உப்பளத் தொழிலாளிகள் பெரும்பாலும் பெண்கள்தான். ஆனால் வேலை செய்யும் இடத்தில் கழிவறை வசதிகள் இல்லாததால், வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பின்புதான் கழிவறையைப் பயன்படுத்துகிறார்கள். இதற்கு அரசு நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு கழிவறை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்" எனக் கோரிக்கை வைத்தார். ஆத்தி செல்வம், ராமநாதபுரம் மாவட்டம், நரிப்பையூர் கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவர். கடல்சார் தொழிலாளர்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தி உள்ளார். இவரிடம் பேசியபோது, கடல்சார் தொழிலின் மதிப்பையும் அதன் கடினமான வாழ்வியலையும் ஆழமாக உணரச் செய்த இந்த ஆவணப் பணி, கடலை நம்பி வாழும் மக்களின் சொல்லப்படாத வாழ்க்கைக் கதைகளை சமூகத்தின் பார்வைக்கு கொண்டு சேர்ப்பதையே தனது நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறினார். பனை, கடல் சார் தொழில்கள் குறித்து இந்த மாணவர்கள் காட்சிப்படுத்திய விதம், அங்கு வந்திருந்தோரின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://cinema.vikatan.com/arts/palms-sea-life-and-struggle-photo-documentary




