சென்னை, 80-வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் மேயர் பிரியா தேசியக் கொடியினை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- சென்னை மாநகராட்சியில் இன்று (15.08.2026) 80-வது இந்திய சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் மேயர் பிரியா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, மூவர்ண பலூன்களை விண்ணில் பறக்க விட்டார். தொடர்ந்து, மேயர் தேசிய மாணவர் படையினர், சாரண, சாரணியர் மற்றும் பேண்டு, வாத்தியக்குழுவின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, சென்னை மாநகராட்சியின் சஞ்சீவராயன் தெரு, புழல், கிருஷ்ணாம்பேட்டை, பூத்தப்பேடு, கோயம்பேடு மற்றும் ஜல்லடியான்பேட்டை சென்னை நடுநிலைப்பள்ளிகளின் மாணவ, மாணவிகள், குரு வித்யாஷ்ரம் சிறப்புப் பள்ளியைச் சார்ந்த மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகளின் கண்கவரும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர், சென்னை மாநகராட்சிக்கு மிக அதிகமாக சொத்துவரி செலுத்திய 3 நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கும், வட்டாரங்கள் அளவில் உரிய காலங்களில் முறையாக தாமதமில்லாமல் சொத்துவரி செலுத்திய 3 சொத்து உரிமையாளர்களுக்கும் பாராட்டுக் கடிதங்களை (Letter of Appreciation) மேயர் பிரியா வழங்கிப் பாராட்டினார். தொடர்ந்து, மாவட்ட அளவிலான சிறந்த பகுதி கூட்டமைப்பு மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு “மணிமேகலை விருதுகள்” வழங்கிப் பாராட்டினார். தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சியில் சிறப்பாகப் பணியாற்றிய வடக்கு, தெற்கு மற்றும் மத்திய வட்டார துணை ஆணையாளர்கள் உள்ளிட்ட 180 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கிப் பாராட்டினார். மேலும், தேசிய மாணவர் படை, சாரண சாரணியர்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/80th-independence-day-mayor-priya-hoists-national-flag-ripon-building




