சென்னை, எச்.வினோத் இயக்கத்தில் முதல்-அமைச்சர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம், தணிக்கை சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை கடந்து உலகம் முழுவதும் நேற்று (வியாழக்கிழமை) வெளியானது. இந்தப்படம் ஏற்கனவே சட்டவிரோதமாக இணையத்தில் வெளியாகி இருந்தாலும், விஜய் ரசிகர்கள் இந்தப்படத்தை பார்க்க பெரும் ஆவலுடன் இருந்தனர். இதனால் நேற்று முன்தினம் இரவு முதலே கொண்டாட்டத்தில் களமிறங்கினர். சென்னையில் இந்த படம் வெளியான திரையரங்குகள் அனைத்தும் திருவிழாக்கோலம் கண்டிருந்தன. பல அடி உயர பிரமாண்ட கட்-அவுட்கள், பேனர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. தியேட்டர்கள் முன்பு குவிந்த ரசிகர்கள், விஜய்யின் புகைப்படங்களுக்கு மலர் தூவி, கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். சட்டமன்றத்தில் விஜய் காட்டும் சைகையை மையப்படுத்தி பெரும்பாலான தியேட்டர்களில் கட்-அவுட் வைக்கப்பட்டிருந்தது. படம் திரையிடப்பட்டிருந்த அண்ணாநகர், வடபழனி, வேளச் சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் இருக்கும் மால்களிலும் ரசிகர்கள் கூட்டம் நிறைந்திருந்தது. அமைச்சர்கள்-பிரபலங்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் தியேட்டரில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் 'ஜன நாயகன்' படத்தை பார்த்தார். கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டரில் அமைச்சர்கள் என்.ஆனந்த், அருண்ராஜ் ஆகியோர் படத்தை பார்த்து ரசித்தனர். இது விஜய்யின் கடைசி படம் என்பதால், படத்தின் இறுதியில் விஜய்யின் திரையுலக பயணம் பற்றிய சிறுகுறிப்பு காட்டப்பட்டது. இந்த காட்சியை பார்த்து அமைச்சர் என்.ஆனந்த் உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார். அதேபோல படம் பார்த்த ரசிகர்கள் அத்தனை பேரும் உணர்ச்சி வசப்பட்டனர். இதே தியேட்டரில் நடிகை திரிஷா, தனது தாயார் உமாவுடன் ‘ஜனநாயகன்' படம் பார்த்தார். நடிகைகள் சனம் ஷெட்டி, சஞ்சனா உள்ளிட்டோரும் அங்கு படம் பார்த்தனர். குரோம்பேட் டையில் உள்ள வெற்றி தியேட்டரில் நடிகைகள் கீர்த்தி சுரேஷ், மமிதா பைஜூ, இசையமைப் பாளர் அனிருத் உள்ளிட்டோர் படம் பார்த்தனர். இதுபோல சினிமா பிரபலங்கள் பலரும் ஆங்காங்கே தியேட்டர்களில் 'ஜனநாயகன்' படத்தை பார்த்து ரசித்தனர். 'ஜனநாயகன்' படத்தின் தொடக்கத்திலேயே 'மாண்புமிகு தமிழக முதல்-அமைச்சர் தளபதி விஜய்' என்று டைட்டில் கார்டு போடும்போதே ரசிகர்களின் உற்சாகம் பறக்க தொடங்கி விடு கிறது. அதே நேரம் இந்த படம் விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் கண்ணீர் சிந்தினர். இந்தநிலையில், ‘ஜனநாயகன்' படக்குழுவுடன் நாளை (ஜூலை 25) காலை 11.30 மணியளவில் மீண்டும் படத்தைப் பார்த்து ரசிக்கவுள்ளார் முதல்-அமைச்சர் விஜய். ஏற்கனவே அரசு அதிகாரிகளுடன் சிறப்புக் காட்சி பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை வார விடுமுறையொட்டி சினிமா தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே உலகம் முழுவதும் 'ஜனநாயகன்' திரைப்படம் 7,400 தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. இந்தியாவில் மட்டும் 5,300 தியேட்டர்களில் வெளிவந்தது. குறிப்பாக, தமிழகத்தில் 1,250 தியேட்டர்களில், 2,700 திரைகளில் வெளியிடப்பட்டது. ஆக்சன் அதிரடியில் ரசிகர்களை திருப்திபடுத்திய 'ஜனநாயகன்' திரைப்படம், முதல் நாளில் உலக அளவில் ரூ.78 கோடி முதல் ரூ.80 கோடி வரை வசூல் சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் மட்டும் ரூ.41 கோடியை வாரி குவித்துள்ளது. தமிழ்நாட்டில், ரூ.36.50 கோடி வசூலித்துள்ள இப்படம், தெலுங்கில் ரூ.2.75 கோடியும், இந்தியில் ரூ.1.75 கோடியும் ஈட்டியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-will-watch-the-film-jananayagan-again-tomorrow




