சென்னை, டாஸ்மாக் மது வகைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் திட்டம் மிகவும் ஆபத்தானது. எனவே இந்த கேடான முடிவை அரசு கைவிட வேண்டும். இது குறித்து பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் கூறுயதாவது:- தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுவகைகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் முறை நாளை முதல் நடைமுறைக்கு வரவிருப்பதாகவும், அதற்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மதுவை ஒழிப்பதற்கு பதிலாக மது வாங்குவதை மிகவும் எளிதானதாக மாற்றும் முயற்சி மிகவும் பிற்போக்கானது ஆகும். மதுவகைகளை முன்பதிவு செய்வதற்காக டாஸ்மாக் நிறுவனத்தின் சார்பில் என்ற இணையதளம் நாளை முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இந்த இணையதளத்தின் வாயிலாக தமிழ்நாட்டின் எந்த மூலையிலிருந்தும் மொத்தமுள்ள 4048 மதுக்கடைகளிலும் என்னென்ன மதுவகைகள் உள்ளன? அவற்றின் விலை எவ்வளவு என்பதைக் கண்டறிந்து முன்பதிவு செய்ய முடியும். அவ்வாறு முன்பதிவு செய்து பணம் செலுத்தியவர்களுக்கு கியூ.ஆர் கோடுடன் கூடிய கூடிய ரசீது வழங்கப்படும். எந்தக் கடையில் மது வாங்க முன்பதிவு செய்தார்களோ, அந்த கடைக்கு செல்வதற்கான வழிகாட்டும் வரைபடமும் அவர்களுக்கு வழங்கப்படும். அதன்பின் அந்தக் கடைக்கு சென்று கியூ.ஆர் கோடுடன் கூடிய கூடிய ரசீதைக் காட்டி மதுபாட்டிலை பெற்றுக்கொள்ள முடியும். மதுக்கடைகளில் வாடிக்கையாளர்கள் அதிக நேரம் வரிசையில் நிற்பதைத் தவிர்க்கும் வகையிலும், சில்லறை விற்பனைக் கடைகளில் அதிகபட்ச விற்பனை விலைக்கும் கூடுதலாக மது விற்கப்படுவதைத் தடுக்கும் வகையிலும் இந்த புதிய முறை அறிமுகம் செய்யப்படுவதாக டாஸ்மாக் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஓசையின்றி நாளை முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டம் மிகவும் ஆபத்தானது ஆகும். இது மது வணிகத்தையும், மதுப் புழக்கத்தையும் அதிகரிக்கச் செய்யும். தமிழ்நாட்டில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டிய துறைகள் ஏராளமான உள்ளன. கல்வி, மருத்துவம், வேளாண்மை, உணவுப் பொருள் வழங்கல், மின்சாரம் போன்ற துறைகள் சீர்திருத்தத்திற்காக ஏங்குகின்றன. ஆனால், அவற்றில் அக்கறை காட்டுவதற்கு பதிலாக மது வணிகத்தில் மட்டும் சீர்திருத்தம் என்ற பெயரில் சீரழிவுகளை செய்யத் துடிப்பது சரியல்ல. மது மனிதனுக்கு அடிப்படைத் தேவை அல்ல. மது வாங்குவதற்கு எளிதானதாக இருக்கக் கூடாது. அப்போது தான் மது வணிகம் குறையும். ஆனால், மதுவை ஆன்லைனில் முன்பதிவு செய்து மதுக்கடைகளுக்கு சென்று வரிசையில் நிற்காமல் வாங்க வசதி செய்து கொடுப்பது மது வணிகம் அதிகரிப்பதற்கு தான் வழிவகுக்கும். தமிழ்நாட்டில் உள்ள 35,039 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அந்தக் கடைகள் ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு நாளும் ஏராளமான மக்கள், குறிப்பாக பெண்கள் உணவுப் பொருள்களை வாங்குவதற்காக நீண்ட வரிசைகளில் நிற்கிறார்கள். அவர்களின் வாட்டத்தைப் போக்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, மது குடிப்பவர்களின் வசதிக்காக இத்தகைய திட்டங்களை செயல்படுத்துவது சமூகச் சீரழிவுக்கு தான் வகை செய்யும். டாஸ்மாக் இணையதளத்தில் பதிவு செய்வதற்கு 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும் என்பதால், அதற்கும் குறைவான வயதுப் பிரிவினர் மது வாங்குவது தடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் தரப்பில் கூறப்படுகிறது. இதுவும் ஏற்க முடியாத வாதம். 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்கக் கூடாது என்பது விதி. இது குறித்த அறிவிப்பு பலகைகளும் மதுக்கடைகளில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அதையும் மீறி அவர்களுக்கு மது விற்கப்படுகிறது. இப்போது ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முறை நடைமுறைக்கு வந்தால் ஒருவரின் கணக்கில் முன்பதிவு செய்து பலரும் மது வாங்கிச் செல்லும் நிலை உருவாகும். மாணவர்கள், இளம்பெண்கள் உள்ளிட்ட பலரும் குடிப்பழக்கத்திற்கு ஆளாவதை தடுத்து வருவது மதுக்கடைகளில் வரிசையில் நின்று மது வாங்கினால் பார்ப்பவர்கள் தவறாக நினைப்பார்கள் என்ற அச்சம் தான். அது தான் அவர்களை மதுக்கடைகளுக்கு செல்வதைத் தடுக்கிறது. இப்போது ஆன்லைனில் மதுவை முன்பதிவு செய்து மதுக்கடைகளில் சில வினாடிகள் மட்டுமே நின்று மதுவை வாங்கிச் செல்லலாம் என்ற நிலை உருவானால் அவர்கள் மதுப்பழக்கத்திற்கு எளிதில் அடிமையாகி விடுவார்கள். மதுக்கடைகளில் அதிக விலைக்கு மது விற்கப்படுவதைத் தடுக்கவே இந்தத் திட்டம் என்பதும் தவறான வாதம் ஆகும். மதுக்கடைகளில் ஊழலை ஒழிக்க முடியவில்லை என்ற அரசின் தோல்வியையே இது காட்டுகிறது. கள்ளச்சாராய வணிகத்தைத் தடுப்பதற்காகத் தான் மதுக்கடைகளை நடத்துகிறோம் என்று ஆட்சியாளர்கள் கூறுவது எந்த அளவுக்கு அபத்தமானதோ, அதே அளவுக்கு இந்த வாதமும் அபத்தமானது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் அவர்கள் பொறுப்பேற்ற சில நாள்களிலேயே தமிழ்நாட்டில் 717 மதுக்கடைகளை மூடுவதற்கு ஆணையிட்டார். அது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், அதை சிதைக்கும் வகையில் மதுக்கடைகளை தனியார் மயமாக்குதல், ரெஸ்டோ பார்களை அனுமதித்தல் போன்ற செய்திகள் வெளிவருவதும், ஆன்லைனில் மதுவை முன்பதிவு செய்வதை அனுமதிப்பதும் அரசுக்கு பெருமை சேர்க்காது. எனவே, மதுப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்யும் மது முன்பதிவு திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-should-abandon-the-plan-to-pre-book-tasmac-liquor-online-ramadoss




