சென்னை, சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- சம்பந்தமில்லாத அதிகாரிகளை அழைத்துச் சென்று தொழில் முதலீடுகளை ஈர்த்ததாக தவெக அரசு கூறியுள்ளது. லண்டனில் முதலீடுகளை ஈர்க்க தொழில்துறை அமைச்சர், அதிகாரிகளை அழைத்துச் செல்லாதது ஏன்?; முதல்-அமைச்சர் விஜய் லண்டன் சென்றது முதலீடுகளை ஈர்க்கவா? அல்லது இன்பச் சுற்றுலாவா? என மக்கள் கேள்வி கேட்கும் நிலை உள்ளது. தமிழ்நாட்டில் இருக்கும் நிறுவனங்களுடன் லண்டனில் சென்று எதற்காக ஒப்பந்தம் போடுகிறீர்கள்? தமிழ்நாட்டில் எங்கேயும் மின்வெட்டு இல்லை என்று சொல்லிவிட்டு, மின் பற்றாக்குறை இருப்பதாகவும் வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்க இருப்பதாகவும் அந்தத் துறையின் அமைச்சர் கூறுகிறார். மின் வெட்டே இல்லை என்றால், எதற்காக வெளிச் சந்தையில் மின்சாரத்தை அரசு வாங்க வேண்டும்? ஆனால் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேசும் நிகழ்ச்சியிலேயே மின்வெட்டு நேரிடுகிறது. தமிழக அமைச்சர் பேட்டி அளிக்கும்போதே மின்வெட்டு ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் மின்சார உற்பத்தியை பெருக்கி அண்டை மாநிலங்களுக்கு உபரி மின்சாரத்தை வழங்கினோம். இந்த அரசுக்கு நிர்வாகத் திறமை இல்லாததால் மின் கொள்முதலில் திட்டமிடல் இல்லாமல் இருக்கிறது. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு நான்கே மாதங்களில் பல்வேறு போராட்டங்கள் நடைபெறுகின்றன. தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு பிறகு தான் அதிக ஊழல் நடைபெறுகிறது. முன்பு கொடுத்ததை வாங்கினார்கள், இப்போது டிமாண்ட் செய்து வாங்குகிறார்கள். லஞ்சம் வாங்கவில்லை என்றால் அரசு அலுவலகங்களில் சோதனை நடத்தும்போது பணம் எப்படி கைப்பற்றப்படுகிறது? தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது, அடியோடு சீர்குலைந்துவிட்டது. கொலை, கொள்ளை, பாலியல் சீண்டல் என குற்றம் நடக்காத நாளே இல்லை. தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்டவற்றின் விலை உயர்வை தவெக அரசு கட்டுப்படுத்தவில்லை. ரீல்ஸ் போடுவது, ரீல் விடுவது தான் த.வெ.க அரசின் சாதனையாக உள்ளது. தவெக கட்சி தொடங்கி 3 ஆண்டுகள்தான் ஆகிறது; அவர்களுக்கு எந்த அனுபவமும் கிடையாது. தமிழக அரசுக்கு கடன் சுமை இருக்கும்போது புதிய தலைமைச் செயலகம் தேவைதானா? கடன் சுமை சீரானதும் கட்டிக் கொள்ளலாமே, அதுவும் மீனவர்கள் அதிகம் வாழும் பகுதி, குடியிருப்புகள், பள்ளிகள் இருக்கும் பகுதியில் அமையக் கூடாது. தவெக அரசு இதுவரை ரூ.40,000 கோடி கடன் வாங்கியுள்ளது. நெரிசல் இல்லாமல், அனைவரும் வந்து செல்லக்கூடிய நல்ல இடத்தில் புதிய தலைமைச் செயலகத்தை கட்ட வேண்டும். நடுநிலையாக இருப்பதாக சபாநாயகர்தான் கூறுகிறார், நேரலையில் பார்த்தால் மக்களுக்கு தெரியும். அதிமுக நிர்வாகிகள் இல்லத்தில் சோதனை நடத்தினால் ஒன்றும் கிடைக்காது. எங்கள் வீட்டில் எதுவும் இல்லை, அரசிடம் இருந்துதான் நாங்கள் நிவாரணம் பெற வேண்டிய நிலை உள்ளது. மிசா, சர்க்காரியா கமிஷன் பிரச்சினை பற்றி தற்போது பேசி என்ன பயன்? இதனால் மக்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது? மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக விரைவில் ஆதரவு தருவார்கள். தவெக ஆட்சிக்கு துணை நிற்கும் இடதுசாரிகளே இடைத்தேர்தலை திணிக்கப்பட்டவை என கூறுகின்றனர். மக்கள் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். இடைத்தேர்தலில் தவெகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/is-vijays-london-trip-a-pleasure-tour-or-for-attracting-investments-edappadi-palaniswami-asks




