சேலம், சேலம் குகை மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழாவையொட்டி நடந்த வண்டி வேடிக்கை நிகழ்ச்சியில் கடவுள்களின் அவதாரங்களை பிரதிபலிக்கும் வகையில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. வண்டி வேடிக்கை சேலம் குகை மாரியம்மன், காளியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நடைபெறும் வண்டி வேடிக்கை நிகழ்ச்சியானது 120 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டின் ஆடித் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான வண்டி வேடிக்கை நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. இதனை காண சேலம் மாநகர் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திருச்சி பிரதான சாலையில் குவிந்தனர். வண்டி வேடிக்கை நிகழ்ச்சியில் பக்தர்கள் கடவுள்கள் போன்று வேடமிட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். அந்த வகையில் பெருமாள், சிவன், பார்வதி, அம்மன், முருகன், விநாயகர் உள்ளிட்ட தேவலோக கடவுள்களை போன்று மிகவும் தத்ரூபமாக வேடம் அணிந்தவர்கள் அலங்கார வாகனங்களில் அணிவகுத்து வந்த காட்சி பார்வையாளர்களை பரவசமடைய செய்தது. அஷ்டலட்சுமி மற்றும் விஷ்ணு அலங்காரத்தில் வேடமணிந்த பக்தர்கள் ஊர்வலம் சேலம் குகை அம்பலவாணர் சுவாமி கோவில் தெரு வண்டி வேடிக்கை கமிட்டி சார்பில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கலியுக கடவுள் அய்யப்பன், மாளிகைப்புரத்தம்மன் என்று அழைக்கப்படும் மஞ்ச மாதா மற்றும் காவல் தெய்வமாக கருதப்படும் கருப்பசாமி போன்று பக்தர்கள் வேடம் அணிந்து வண்டியில் ஊர்வலமாக வந்தனர். குகை ஆண்டி செட்டித்தெரு கமிட்டி சார்பில் 121-வது ஆண்டாக பராசக்தி அம்மன், தெனாலிராமன் மற்றும் கிருஷ்ணதேவராயருக்கு அருள்பாலிக்கும் காட்சி பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. பஞ்சதாங்கி ஏரி எம்.ஜி.ஆர். நகரில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சீனிவாச பெருமாள், குபேரன் மற்றும் கோட்டை மாரியம்மன் அலங்கார வண்டி வந்தது. மேலும் ஜோதி அலங்காரத்தில் அண்ணாமலையார், வராகமூர்த்தி, தாழம்பூ, பிரம்மா அலங்காரத்திலும், கருப்பசாமி, அய்யப்பன் அலங்காரத்திலும், செங்கல்பட்டி பகுதி மக்கள் சார்பில் சிவபெருமான், பார்வதி, அந்தணர், சுந்தரர் அலங்காரத்திலும் பக்தர்கள் வேடமணிந்து வாகனங்களில் ஊர்வலமாக வலம் வந்தனர். அஷ்டலட்சுமி அலங்காரம் இதேபோல், ஒரு அலங்கரிக்கப்பட்ட வண்டியில் அஷ்டலட்சுமி, நாராயணன் அலங்காரத்தில் பக்தர்கள் அமர்ந்து ஊர்வலமாக வந்தனர். அதாவது, தனலட்சுமி, ஆதிலட்சுமி, தானியலட்சுமி, வித்யாலட்சுமி, கஜலட்சுமி, வீரலட்சுமி, மகாலட்சுமி, சந்தானலட்சுமி ஆகிய எட்டு லட்சுமி அலங்காரத்தில் பெண் குழந்தைகளும், ஒரு பக்தர் விஷ்ணு பகவான் அலங்காரத்திலும் வேடமணிந்து ஊர்வலமாக வந்தனர். இந்த வாகனம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்ட வாகனங்கள் பிரபாத் தியேட்டர், திருச்சி பிரதான சாலை, குகை பாலம் வழியாக சென்று குகை மாரியம்மன் கோவிலை அடைந்தது. குறிப்பாக ஒவ்வொரு வண்டியிலும் இளைஞர்களை உற்சாகப்படுத்தும் வகையில் நவீன வண்ண விளக்குகளுடன் கூடிய ஸ்பீக்கர் அமைக்கப்பட்டு பாடல்கள் இசைக்கப்பட்டன. அப்போது, இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் சினிமா பாடலுக்கு ஏற்றவாறு உற்சாக நடனம் ஆடி மகிழ்ந்ததை காணமுடிந்தது. இந்த வண்டி வேடிக்கையில் விண்ணுலகத் தில் இருந்து கடவுள்கள் பல்வேறு அவதாரத்தில் தத்ரூபமாக மண்ணுலகத்திற்கு வந்ததை போன்று இருந்ததாக பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கையையொட்டி நேற்று இரவு 7 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் திருச்சி மெயின் ரோட்டில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/devotional/salem-gugai-mariamman-temple-aadi-festival-vandi-vedikkai-event




