சென்னை, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 11 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு, முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இன்று கடிதம் எழுதியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 இந்திய மீனவர்கள் கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது இன்று (6.8.2026) இலங்கைக் கடற்படையினர், மீனவர்களையும் அவர்களின் விசைப்படகையும் சிறைப்பிடித்துள்ள சம்பவம் குறித்து மத்திய வெளியுறவுத் துறை மந்திரியின் கவனத்திற்குக் கொண்டுவரவே தாம் இக்கடிதத்தை எழுதுவதாகக் குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர், இச்சம்பவத்தில், இயந்திரக் கோளாறு காரணமாக அப்படகு நெடுந்தீவு கரையை ஒட்டித் தரைதட்டி நின்ற நிலையில், சர்வதேச கடல் எல்லைக்கோட்டைத் (IMBL) தாண்டியதாகக் கூறி, அப்படகையும் அதில் இருந்த மீனவர்களையும் இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். நமது மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து கைதுசெய்து வருவது மீனவ சமூகத்தினரிடையே ஆழ்ந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்து, பாக் ஜலசந்தியை நம்பி வாழும் மீனவர்களின் மத்தியில் நிலையற்ற தன்மையை உருவாக்கியுள்ளது என்றும் முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே, உரிய தூதரக வழிமுறைகள் வாயிலாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஏற்கெனவே சிறைப்பிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களின் மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவித்து, பாதுகாப்பாக தாய்நாடு திரும்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தாம் அன்புடன் கேட்டுக்கொள்வதாகவும், இப்பிரச்சனை குறித்து கூட்டு செயல்பாட்டுக் குழு (JWG) மூலமாக இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை விரைவாக நடத்துவது மட்டுமே இதுபோன்ற பிரச்சனைகள் மீண்டும் மீண்டும் நிகழாவண்ணம் தீர்வுகாண உதவும் என்பதையும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் நலன்களையும் பாதுகாக்கும் வகையில், மத்திய வெளியுறவுத் துறை மந்திரியின் தனிப்பட்ட தலையீட்டையும் விரைவான பதிலையும் எதிர்பார்ப்பதாகத் தனது கடிதத்தில் முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/11-fishermen-arrested-chief-minister-vijay-writes-to-foreign-minister




