சென்னை, பரந்தூர் விமான நிலையம் ரத்து! மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- பரந்தூர் விமான நிலையம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடுவதாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் அறிவித்திருப்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வரவேற்கிறேன். ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்களின் விடாப்பிடியான போராட்டம், அவர்களின் மண்ணையும் வாழ்வாதாரத்தையும் காப்பதற்கான நீண்ட நெடிய போராட்டம் இன்று வெற்றியைப் பெற்றிருக்கிறது. வாழ்த்துகள் வீடுகளையும், விளைநிலங்களையும், தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த வாழ்விடங்களையும் இழக்க மறுத்து, அதிகாரத்தின் அழுத்தங்களுக்கு அஞ்சாமல் களத்தில் நின்ற அந்த மக்களின் உறுதிதான் இந்த வெற்றியின் அடித்தளம். அதேபோல், பரந்தூர் மக்களின் நியாயமான கோரிக்கைக்கு துணைநின்று, களத்தில் குரல் கொடுத்து, போராட்டங்களுக்கு ஆதரவாக நின்ற அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் போராட்டத் தோழர்களுக்கும், எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு விமான நிலையத்திட்டம் கைவிடப்பட்ட வெற்றி மட்டுமல்ல. மக்களின் விருப்பத்திற்கு எதிராக எந்தத் திட்டத்தையும் திணிக்க முடியாது என்பதையும், மண்ணுக்காக மக்கள் ஒன்றுபட்டால் அதிகாரத்தையே பணிய வைக்க முடியும் என்பதையும் நிரூபித்துள்ள வெற்றி. திருப்பி ஒப்படைக்கப்பட வேண்டும் இந்த அறிவிப்போடு அரசின் பொறுப்பு முடிந்துவிடவில்லை. விமான நிலையம் அமைப்பதற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள், இனி வேறு எந்தத் திட்டத்திற்காகவும், குறிப்பாக சிப்காட் அமைக்கும் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படக் கூடாது. அந்த நிலங்கள் அவற்றின் உண்மையான உரிமையாளர்களான விவசாயிகளிடமே உடனடியாகவும் முழுமையாகவும் திருப்பி ஒப்படைக்கப்பட வேண்டும். பல ஆண்டுகளாக தங்களது நிலத்திற்காகப் போராடிய மக்களிடம், திட்டம் கைவிடப்பட்டது என்ற அறிவிப்பை மட்டும் கொடுத்துவிட்டு அரசு நின்றுவிடக்கூடாது. நிலத்தைப் பறிப்பது எவ்வளவு வேகமாக நடந்ததோ, அதே வேகத்தில் நிலத்தை மக்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையும் நடைபெற வேண்டும். வலியுறுத்தல் தமிழ்நாடு அரசு, கையகப்படுத்தப்பட்ட நிலங்களை வேறு எந்தத் திட்டத்திற்கும் மாற்றாமல், சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து முடித்து, உரிய உரிமையாளர்களிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். அத்துடன், கையகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து இது நாள் வரையிலும் இந்த விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து உரிய நிவாரணமும் வழங்கப்பட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/paranthur-airport-cancelled-a-victory-for-the-peoples-struggle-velmurugan



