"த.வெ.க-வுக்கு தி.மு.க-வோ, அ.தி.மு.க-வோ எதிரிகள் இல்லை, த.வெ.க-வினரேதான்" என்று மக்கள் பேசும் அளவுக்கு மாவட்டம் தோறும் அட்ராசிட்டி தொடர்கிறது! தினமும் பிரேக்கிங் நியூஸ் போடும் அளவுக்கு தவெக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், மாவட்ட நிர்வாகிகள் பல்வேறு புகார்களிலும், சர்ச்சைகளிலும் சிக்கி வருவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வரிசையில் சமீபத்தில் பென்னாகரம் தொகுதியில் நடந்த அரசுப் போக்குவரத்துக் கழக நிகழ்ச்சியில் த.வெ.க எம்.எல்.ஏ-வை புறக்கணித்து த.வெ.க மாவட்டச் செயலாளர் தலைமையில் நடந்ததாக எழுந்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பேருந்தை தொடங்கி வைத்த மாவட்டச் செயலாளர் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதிக்கு உட்பட்ட வட்டுவனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பவளந்தூர் கிராமத்தில், 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறார்கள். இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை சேதமடைந்ததால், சில ஆண்டுகளாக பென்னாகரத்திலிருந்து வரும் நகரப் பேருந்துகள் மருக்காரம்பட்டியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் பவளந்தூரிலிருந்து வேலைக்கும், பள்ளி, கல்லூரிக்கும் செல்பவர்கள் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து மருக்காரம்பட்டிக்கு செல்ல வேண்டியிருந்ததால், மீண்டும் தங்கள் கிராமத்திற்கு பேருந்து இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில்தான் அதிகாரிகள் உத்தரவின் பேரில் கடந்த ஜூலை 1 ஆம் தேதி பேருந்து சேவையை மீண்டும் தொடங்கி வைக்க பென்னாகரம் அரசுப் போக்குவரத்துக் கழக கிளை அலுவலர்கள் பவளந்தூருக்கு வந்துள்ளனர். அப்போது த.வெ.க நிர்வாகிகள் பேருந்துக்கு மாலை அணிவித்து, பூ தூவ., தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளர் சிவன் கொடியசைத்து பேருந்து சேவையை தொடங்கி வைத்து நிர்வாகிகளுடன் பயணச்சீட்டு எடுத்து பயணித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதுதான் சர்ச்சையாகி உள்ளது. சிவன் - கஜேந்திரன் இதுகுறித்து பென்னாகரம் எம்.எல்.ஏ கஜேந்திரன் ஆதரவாளர்களோ, "பவளந்தூர் மக்கள் எம்.எல்.ஏ-விடம் கோரிக்கை வைத்தார்கள். பேருந்தை மீண்டும் இயக்க அவர்தான் காரணம். ஆனால், இந்த நிகழ்வுக்கு அவரை அழைக்கவில்லை. எம்.எல்.ஏ-வை புறக்கணித்தது மட்டுமின்றி, மாவட்டச் செயலாளர் மூலம் தொடங்கி வைத்தது எப்படி சரியாகும்? சொந்தக் கட்சியினரே எம்.எல்.ஏ-வை மதிக்கவில்லையென்றால், எதிர்க்கட்சியினர் எப்படி மதிப்பார்கள்?" என்று புகார் வாசிக்க. மாவட்டச் செயலாளர் சிவன் ஆதரவாளர்களோ, "மாவட்டச் செயலாளர் சிவன் கட்சியில் எல்லோரையும் மதிப்பவர். அப்படி செய்பவர் அல்ல, சொந்த பணத்தை செலவழித்து கட்சியை வளர்த்து வருபவர். கடந்த தேர்தலில் தருமபுரியில் பாமக சௌமியாவை எதிர்த்து போட்டியிட்டு இரண்டாமிடம் வந்தவர். ஆனால், மக்களுக்கு மட்டுமல்ல, கட்சியினருக்கே தெரியாத அளவுக்கு ஒன்றிய பொறுப்பில் இருந்த கஜேந்திரன் இவரால்தான் சீட் பெற்ற பென்னாகரத்தில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றபின் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளை மதிப்பதில்லை, தொகுதி மக்களின் பிரச்னைகளை கேட்பதில்லை, இந்த நிலையில்தான் பவளந்தூர் மக்கள் மாவட்டச் செயலாளரிடம் கோரிக்கை வைத்ததால், போக்குவரத்துத் துறை அமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று உடனே உத்தரவு போட வைத்தார். அப்பகுதி த.வெ.க நிர்வாகிகளும், கிராம மக்களும் அழைத்ததால்தான் அன்று கலந்துகொண்டார், இந்த விஷயத்தை எம்.எல்.ஏ தரப்பில் சர்ச்சையாக்கி வருகிறார்கள்" என்றனர். பேருந்து சேவை தொடங்கி வைத்த நிகழ்ச்சி தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளர் சிவனிடம் கேட்டோம். "பவளந்தூர் மக்கள் தங்கள் ஊருக்கு பேருந்து வராததால் சிரமத்துக்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்க, நான் போக்குவரத்து அமைச்சரிடம் வலியுறுத்த, அவர் உடனே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு பேருந்து மீண்டும் இயக்கப்பட்டது. அன்றைய தினம் நான் சென்னைக்கு சென்று கொண்டிருந்தேன். ஊர் மக்கள்தான் நீங்கள் வந்தே ஆகவேண்டும் என்று போனில் வற்புறுத்தியதால் வேறு வழியில்லாமல் கலந்து கொண்டேன். போக்குவரத்துக் கழகம் சார்பில் விழாவெல்லாம் ஏற்பாடு செய்யவில்லை. அப்பகுதியிலுள்ள எங்கள் கட்சியினர்தான் விழாபோல நடத்தினார்கள். இதில் எம்.எல்.ஏ-வை புறக்கணிக்கும் எண்ணமெல்லாம் எனக்கு இல்லை, அதிகாரிகள் அவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர் ஊரில் இல்லாததால் கலந்துகொள்ளவில்லை, இதுதான் நடந்தது. பாரபட்சம் பார்ப்பவனல்ல, நான்தான் அவருக்கு சீட் பெற்று கொடுத்தேன், அதையெல்லாம் மறந்துவிட்டு, இந்த விஷயத்தில் என் மேல் குற்றம் சொல்லி அவர் தரப்பில் ஊடகங்களில் பரப்பி வருவது ஏனென்று தெரியவில்லை. எல்லாவற்றையும் கட்சித் தலைமை பார்த்துக் கொண்டிருக்கிறது" என்றார். எம்.எல்.ஏ கஜேந்திரனிடம் கேட்டபோது "பவளந்தூர் மக்கள் என்னிடம் கோரிக்கை வைத்ததால் அதிகாரிகளிடம் பேசி மீண்டும் பேருந்து இயக்கப்பட்டது. ஆனால், நிகழ்ச்சிக்கு என்னை அழைக்கவில்லை. அன்று ஊரில்தான் இருந்தேன், போக்குவரத்துக் கழக கிளை மேலாளரிடம் கேட்டதற்கு, மாவட்டச் செயலாளர் உங்களுக்கு தகவல் தெரிவித்திருப்பார் என்று நினைத்தோம் என்று ஏதேதோ சொல்கிறார். நான் மாவட்டச் செயலாளரையும், கட்சி தொண்டர்களையும் எப்போதும் மதிப்பவன். தொகுதி முழுக்க சுற்றி வருகிறேன், அரசு நிகழ்ச்சியில் என்னை புறக்கணிப்பதால் கட்சிக்குதான் கெட்ட பெயர் உண்டாகும். இதை நான் ஊடகங்களுக்கு பரப்பவில்லை, நடந்த சம்பவம் எல்லோருக்கும் தெரியும்" என்றார். சிவன் - கஜேந்திரன் அரசு போக்குவரத்துக் கழக அலுவலர்களோ, "நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்கத்தான் அங்கு சென்றோம். விழாவெல்லாம் எடுக்கவில்லை, எம்.எல்.ஏ வந்திருப்பார் என்று நினைத்தோம், அவர்கள் கட்சி கோஷ்டிப் பிரச்னையில் எங்கள் தலையை போட்டு உருட்டிக் கொண்டிருக்கிறார்கள்" என்றனர். என்னதான் விளக்கம் சொன்னாலும், அரசு நிகழ்ச்சிக்கு தொகுதி எம்.எல்.ஏ புறக்கணிக்கப்பட்டதும், அதிகாரிகள் முன்னிலையில் மாவட்டச் செயலாளர் பேருந்தை தொடங்கி வைத்ததும் மக்கள் மத்தியில் பேச்சாக உள்ளது! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/dharmapuri-district-tvk-interpolitics




