சென்னை, குறைபாடுள்ள திருமண ஆடையை விற்பனை செய்த வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 3.46 லட்சம் ரூபாய் இழப்பீ டு வழங்க ஆடை வடிவமைப்பு நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் அழகு சஞ்சனா. இவர், சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், 'கடந்த 2024-ம் ஆண்டு தாய்லாந்தில் எனது திருமணம் நடைபெற இருந்த நிலையில், அதற்காக டெல்லியில் உள்ள 'ஓம் பை பாரதி அண்ட் ஆஷ்னா' என்ற ஆடை வடிவமைப்பகத்தில் ரூ.1.15 லட்சத்திற்கு முத்துக்களால் ஆன லெஹங்கா ஆடைக்கு ஆர்டர் செய்தேன். குறிப்பிட்ட தேதியில் ஆடை வழங்கப்படாததோடு, கூடுதல் கட்டணமாக ரூ.6,850-ம் கட்டாயப்படுத்தி வசூலித்தனர். திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு தான் அந்த ஆடை வழங்கப்பட்டது. அதுவும் தையல் மற்றும் வடிவமைப்பு குறைபாடுகளுடன் இருந்தது. இதுகுறித்து கேட்டபோது, உள்ளூர் தையல்காரரிடம் கொடுத்து சரி செய்து கொள்ளுமாறு அலட்சியமாக பதிலளித்தனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான நான், வேறு வழியின்றி அவசரமாக மாற்று ஆடையை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். எனவே, உரிய இழப்பீடு வழங்க ஆடை வடிவமைப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை ஆணையத்தின் தலைவர் டி.கோபிநாத் மற்றும் உறுப்பினர் கவிதா கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. ஆடை வடிவமைப்பு நிறுவனம் தரப்பில் வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை. வழக்கை விசாரித்த ஆணையம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- புகார்தாரர் சமர்ப்பித்த ஆதாரங்களின்படி, ஆடை வடிவமைப்பாளர்கள் உரிய நேரத்தில் ஆடையை வழங்காததும், குறைபாடுள்ள ஆடையை வழங்கிவிட்டு அதை உள்ளூர் தையல்காரரிடம் சரி செய்து கொள்ளுமாறு கூறியதும் சேவை குறைபாடு மற்றும் முறையற்ற வணிக நடைமுறையாகும். எனவே, புகார்தாரர் மாற்று ஆடை வாங்க செலவிட்ட தொகை ரூ.1,69,215 மற்றும் டெல்லி சென்று வந்ததற்கான போக்குவரத்து செலவு உள்ளிட்ட இதர செலவுகள் என மொத்தம் 2 லட்சத்து 91 ஆயிரம் ரூபாயை 9 சதவீத வட்டியுடன் ஆடை வடிவமைப்பு நிறுவனம் வழங்க வேண்டும். மேலும், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்காக ரூ.50 ஆயிரம் மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.3 லட்சத்து 46 ஆயிரம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/defect-in-ordered-wedding-lehenga-bride-shocked-fashion-house-fined-346-lakh




