மும்பை, மகள்களின் உயர் கல்வி செலவிற்காகவும், புத்தகங்கள் வாங்குவதற்காகவும் 47 வயது தாய் ஒருவர், எந்தவிதப் பயிற்சியுமின்றி வெறும் கால்களுடன் மாரத்தான் போட்டியில் ஓடி முதலிடம் பிடித்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் மராட்டியத்தில் நடந்துள்ளது. வறுமையில் வாடிய குடும்பம் மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமாபாய் ரன்வீர் (வயது 47). அவரது கணவர் மறைந்துவிட்ட நிலையில், அங்குள்ள ஒரு தனியார் கல்வி அகாடமியில் சமையல் வேலை செய்து தனது 2 மகள்களை வளர்த்து வருகிறார். அவரது மூத்த மகள் பி.எஸ்சி படித்துக் கொண்டே போலீஸ் பணிக்கான தேர்விற்கும், இளைய மகள் வங்கித் தேர்விற்கும் தயாராகி வருகின்றனர். வறுமை காரணமாக மகள்களின் கல்விச் செலவிற்கும், புத்தகங்கள் வாங்கவும் ரமாபாய் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். மாரத்தான் போட்டி இந்நிலையில், அம்பாஜோகாய் பகுதியில் உள்ள அகாடமி சார்பில் 3 கிலோமீட்டர் தூரத்திற்கான 'அமிர்த ஓட்டம்' என்ற மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மகள்களின் படிப்பு செலவுக்கு பணம் கிடைக்கும் என்ற ஒரே நோக்கத்திற்காக, ரமாபாய் அந்த ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டார். வெறும் காலில் ஓட்டம் பாரம்பரிய புடவை அணிந்து கொண்டு அவர் போட்டியில் ஓடத் தொடங்கியபோது, அவரது செருப்பு அடிக்கடி கழன்று ஓடுவதற்குத் தடையாக இருந்தது. அதனால் சற்றும் யோசிக்காத ரமாபாய், தனது செருப்பைக் கழற்றி கையில் பிடித்துக் கொண்டு, கரடுமுரடான தார்ச்சாலையில் வெறும் கால்களோடு இலக்கை நோக்கி ஓட ஆரம்பித்தார். போட்டியில் முதலிடம் தன்னைவிட பாதியளவு வயதுடைய இளம்பெண்களுக்கு கடுமையான சவால் விடுத்து, வெறும் கால்களுடன் அதிவேகமாக ஓடிய ரமாபாய், இறுதியாக பந்தய எல்லையை அடைந்து முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்தார். அந்த ஓட்டப் பந்தயத்தில் அவரது மூத்த மகளும் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்தார். பொதுமக்கள் பாராட்டு போட்டியில் முதலிடம் பிடித்த ரமாபாய்க்கு முதல் பரிசான ரூ.3,000 ரொக்கப்பணமும், கோப்பையும் வழங்கப்பட்டது. "இந்த பரிசுத் தொகையை என் மகள்களின் படிப்பு செலவிற்கும், புத்தகங்கள் வாங்குவதற்கும் பயன்படுத்துவேன்" என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். வறுமையிலும் தன் மகள்களின் கல்விக்காக, காலில் செருப்புகூட இல்லாமல் ஓடி வென்ற இந்த தாயின் வீரம் மற்றும் தியாகம் குறித்த செய்திகளும் புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/mother-wins-marathon-running-barefoot-for-her-daughters-education-heartwarming-story-from-maharashtra




