கர்நாடகாவில் உள்ள மலை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மேலும், குடகு மாவட்டத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. சிவமொக்கா மாவட்டம் ஹோசநகர் தாலுகாவில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள பத்ரா, துங்கா மற்றும் லிங்கனமக்கி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 185 அடி கொள்ளளவு கொண்ட பத்ரா நீர்த்தேக்கத்தில் அணையின் நீர்மட்டம் 142.8 அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சிவமொக்காவில் உள்ள துங்கபத்ரா ஆற்றில் அபாய அளவைத் தாண்டி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதேபோல், ஹாசன் மாவட்டம் சக்லேஷ்பூர் தாலுகாவிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து, ஹேமாவதி, யாகச்சி, வத்தேஹொளே அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மழையின் காரணமாக ஹாசன் தாலுகா பிட்டஹள்ளி கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியின் கூரை இடிந்து விழுந்தது. பள்ளி தொடங்குவதற்கு முன்பு இடிந்து விழுந்ததால் மாணவர்கள் தப்பினர். கபினி குடகு மாவட்டத்தில் மழையைவிட காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. குடகு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக விராஜ்பேட்டை தாலுகாவின் அம்மட்டி பகுதியில் காவேரி ஆற்றுப்படுகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல், கேரளாவின் வயநாடு பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக மைசூரு மாவட்டம் எச்.டி. கோட்டை தாலுகாவில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அதிகபட்சமாக நேற்று மாலை வினாடிக்கு 10 ஆயிரத்து 757 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 8 மணி நிலவரப்படி 14 ஆயிரத்து 574 கனஅடியாக அதிகரித்து வருகிறது. கபினி அணையின் மொத்த நீர்மட்டம் 84 அடியாகும். தற்போது அணையில் 64.53 அடி தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. இதேபோல், கிருஷ்ணராஜசாகர் அணையின் முழு நீர்மட்டம் 124.80 அடியாகும். தற்போது அணையில் 85.66 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரத்து 694 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 734 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அந்த அணைகள் நிரம்பியதும் தமிழகத்துக்கு காவிரியில் உபரி நீர் திறக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/monsoon-intensifies-water-inflow-to-karnataka-dams-increases




