சென்னை, அணைகளில் வேகமாக தண்ணீர் குறைந்து வருவதால், தமிழகத்தில் இந்த ஆண்டு வறட்சி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 10 ஆண்டுகளில் இல்லாத அளவு தண்ணீர் குறைவு தமிழகத்தில் 90 அணைகளும், 14 ஆயிரத்து 141 பாசன ஏரிகளும் உள்ளன. நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அவை அனைத்திலும் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு தண்ணீர் குறைந்து காணப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 90 அணைகளின் மொத்த கொள்ளளவு 224 டி.எம்.சி. ஆகும். ஆனால், தற்போதைய நிலையில் 71.2 டி.எம்.சி. அளவு தண்ணீரே உள்ளது. 14 ஆயிரத்து 141 பாசன ஏரிகளில் ஏற்கனவே, 3,483 ஏரிகள் தண்ணீர் இல்லாமல் வறண்டுவிட்டன. 6,127 ஏரிகளில் சொற்ப அளவு தண்ணீரே உள்ளதால், அவைகளும் வறண்டுவிடும் நிலையில் இருக்கின்றன. விவசாயிகள் கவலை ஏற்கனவே, இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் குறைவான அளவே பெய்துள்ளது. அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவிலும் இது குறைவு என்பதால், காவிரி தண்ணீர் திறந்துவிட முடியாத நிலை கர்நாடக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த ஆண்டு மேட்டூர் அணை, குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ந் தேதி திறக்க முடியாமல் போய்விட்டது. டெல்டா மாவட்டங்களிலும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கவலையில் உள்ளனர். வறட்சி ஏற்படும் அபாயம் தமிழகத்தில் அக்டோபர் மாதம் இறுதியில்தான் வடகிழக்கு பருவமழை தொடங்கும். அதற்கு இன்னும் 3 மாதங்கள் இடைவெளி இருக்கிறது. அதுவரை, தமிழக அணை மற்றும் ஏரிகளில் உள்ள தண்ணீர் போதாது என்றே நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வடகிழக்கு பருவமழையும் எந்த அளவுக்கு பெய்யும் என்று உறுதியாக சொல்ல முடியவில்லை. இதனால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதைப்போல, தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தண்ணீர் இல்லாமல் கடுமையான அளவில் வறட்சி ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/rapidly-depleting-water-levels-in-dams-risk-of-drought-in-tamil-nadu




