தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உலகப் புகழ்பெற்ற ஆன்மிக தலமாக விளங்கி வருகிறது. இந்த கோயிலில் சுமார் 137 அடி உயரத்தில், 9 நிலைகள் கொண்ட கோயில் ராஜகோபுரம் உள்ளது. 9 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. 9வது நிலையில், கி.பி. 18-ம் நூற்றாண்டில் முருக பக்தரான பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய பித்தளையால் ஆன பிரமாண்ட மணி உள்ளது. ராஜகோபுரத்தில் ஒலிக்கப்பட்ட மணி அந்தக் காலத்தில் மூலவர் சுப்பிரமணியருக்கு 12 மணி உச்சிக்கால தீபாராதனையின்போது அந்த மணி ஒலிக்கப்படுமாம். அதன் தொடர்ச்சியாக திருச்செந்தூர் முதல் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வரை வரிசையாக அமைக்கப்பட்டிருந்த மணி மண்டபங்களில் அடுத்தடுத்து ஒலிக்கப்பட்டு இறுதியாக கோட்டையில் மணி ஒலிக்கப்படுமாம். அந்த மணியோசையைக் கேட்டபிறகே கட்டபொம்மன், சுப்பிரமணிய சுவாமி மற்றும் வீரசக்கதேவியை வணங்கிவிட்டு மதிய உணவு உண்பது வழக்கமாம். அந்த மணியை ஒலிக்கச் செய்வதற்காகவே தனியாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனராம். இத்திருக்கோயிலில் கடந்த ஆண்டு ஜூலை 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. 9 நிலைகள் கொண்ட ராஜகோபுரமும், மணியும் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. மேலும் இந்த மணி ஒலிக்கச் செய்ய நடவடிக்கையும் எடுக்கப்பட்டது இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த மணியை ஒலிக்க செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. மணியை ஒலிக்கச் செய்யும் திருக்கோயில் பணியாளர்கள் இதைத்தொடர்ந்து அனைத்து பணிகளும் நிறைவு பெற்ற நிலையில் இந்த மணியை ஒலிக்க செய்ய வேண்டுமென கோயில் நிர்வாகத்திடம் பக்தர்கள் தெரிவித்தனர். அத்துடன், வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய ஆலய மணியை வருகின்ற ஆவணித்திருவிழா நாள்களில் தினமும் ஒலிக்க வைக்க வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். நேற்று (28.8.2026) முதல் தினமும் உச்சிக்கால பூஜையின் போது மணி ஒலிக்கப்படும் என திருக்கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு மணி ஒலிக்கப்பட்டது. பூஜை முடியும் வரை சுமார் ஐந்து நிமிடத்திற்கும் மேலாக இந்த மணி ஒலிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/spiritual/temples/devotees-are-delighted-as-the-bell-donated-by-kattabomman-in-tiruchendur-has-begun-to-ring-again-after-many-years




