நெல்லை, நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நாளை மறுநாள் (புதன்கிழமை) நடைபெற உள்ளது. திருவிழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தர உள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குடில்களில் தங்கி சாமி தரிசனம் செய்ய உள்ளனர். ஒரு நாள் மட்டும் அனுமதி சொரிமுத்து அய்யனார் கோவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளதால், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வனப்பகுதியை பாதுகாக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குடில்களில் தங்கும் பக்தர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்வதற்கு வசதியாக நேற்று ஒரு நாள் மட்டும் தனியார் வாகனங்களில் கோவில் பகுதிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து நூற்றுக்கணக்கான தனியார் வாகனங்களில் ஏராளமான பக்தர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களுடன் கோவிலை நோக்கி சென்றனர். அரசு பஸ்களில் மட்டுமே பயணம் இன்று முதல் வருகிற 12-ந்தேதி வரை அகஸ்தியர்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ்களில் மட்டுமே பக்தர்கள் கோவில் பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் நெல்லை மண்டல நிர்வாக இயக்குனர் செல்வம் உத்தரவின்பேரில், இன்று முதல் வருகிற 14-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நெல்லை, ஆலங்குளம், சுரண்டை, அம்பை, தென்காசி மற்றும் அகஸ்தியர்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து பக்தர்களின் வசதிக்காக மொத்தம் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வனச்சோதனை சாவடியில் தீவிர சோதனை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் பிளாஸ்டிக் பொருட்கள், கேரி பேக்குகள், போதைப்பொருட்கள், மதுபானங்கள் மற்றும் வனவிலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாபநாசம் வனச்சோதனை சாவடியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவிலுக்கு செல்லும் அரசு பஸ்களை நிறுத்தி, அதில் பயணம் செய்யும் பக்தர்களின் உடைமைகள் மற்றும் பொருட்களை சோதனை செய்த பின்னரே வனப்பகுதிக்குள் செல்ல அனுமதித்து வருகின்றனர். ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், வனத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்துத்துறை சார்பில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/aadi-amavasai-festival-150-special-buses-operated-to-sorimuthu-ayyanar-temple




