Article complet
பெரிய கனவு, கைநிறைய சம்பளம், பிரகாசமான எதிர்காலம்... இவை அனைத்தையும் ஒரு நொடியில் உதறிவிட்டு, சொந்தக்காலில் நிற்கும் ஒரு தொழில்முனைவோர் கனவோடு புறப்பட்ட பலரின் பிரதிநிதியாக நிற்கிறது இந்தக் கதை. இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றில் படித்து, ஆண்டுக்கு 45 லட்சம் ரூபாய் சம்பளத்தில் இருந்த ஒருவர், தனது வேலையை விட்டுவிட்டு இரண்டு 'ஸ்டார்ட்அப்' நிறுவனங்களைத் தொடங்கியுள்ளார். ஆனால், கடின உழைப்பு மட்டும் வெற்றியைத் தீர்மானிப்பதில்லை என்ற நிஜத்தின் முகத்தில் அறைபட்டு, தனது சேமிப்பு முழுவதையும் இழந்து, இன்று பூஜ்ஜியத்தில் நிற்கிறார். சமூக வலைதளமான ‘ரெட்டிட்’-ல் அவர் பகிர்ந்துகொண்ட பதிவு, ஸ்டார்ட்அப் உலகின் இருண்ட பக்கத்தையும், அது ஒரு தனிநபர் மீது ஏற்படுத்தும் உளவியல் தாக்கத்தையும் அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. "கடந்த ஆண்டு, நல்ல சம்பளத்துடன் இருந்த வேலையை விட்டுவிட்டு, ஒரு பைத்தியக்காரத்தனமான கனவைத் துரத்த ஆரம்பித்தேன். ஒன்று அல்ல, இரண்டு நிறுவனங்களைத் தொடங்கினேன். இரண்டுமே தோல்வியில் முடிந்தன," என்று அந்தப் பதிவில் அவர் குறிப்பிடுகிறார். ஸ்டார்ட்அப் இன்று அவர் எதிர்கொள்ளும் சவால் பண இழப்பு மட்டுமல்ல. அதைவிடக் கொடியது, தன் மீதான நம்பிக்கையின் சரிவு. "சேமிப்பு இல்லை, நிறுவனம் இல்லை, எனது பயணத்தைக் காட்டிக்கொள்ள சமூக வலைதளங்களில் எந்த அடையாளமும் இல்லை. பூஜ்ஜியத்தில் மீண்டும் நிற்கிறேன்," என்று கூறும் அவர், இந்த அனுபவத்தில் தன்னை மிகவும் பாதித்தது நிதி இழப்பு அல்ல, சிதைந்துபோன தனது தன்னம்பிக்கைதான் என்கிறார். "இந்த பயணத்தில் எங்கோ ஒரு புள்ளியில், என் மீது எனக்கிருந்த நம்பிக்கையை நான் இழந்துவிட்டேன். நான் உண்மையிலேயே கடினமாக உழைத்தேனா என்றுகூட சந்தேகப்படத் தொடங்கிவிட்டேன்," என அவர் குறிப்பிடும்போது, ஒரு தொழில்முனைவோரின் மனப் போராட்டத்தின் ஆழத்தை நம்மால் உணர முடிகிறது. கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள அவர், மீண்டும் ஒரு வேலைக்குத் திரும்ப முடிவெடுத்துள்ளார். ஆனால், அந்த முயற்சியிலும் ஒரு மாபெரும் மனத்தடை அவரை பின்னுக்கு இழுக்கிறது. நேர்காணல்களுக்குத் தயாராக வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு முறையும், ஒற்றைக் கேள்வி அவரை முடக்கிப்போடுகிறது. "தோல்வியடைந்த என்னை எந்த நிறுவனம் வேலைக்கு எடுக்கும்? இந்த ஒரு சிந்தனையே, என்னை அடுத்தகட்டத்திற்குத் தயாராக விடாமல் தடுக்கிறது," என்று அவர் தவிக்கும் தவிப்பு, பல இளைஞர்களின் குரலாகவே ஒலிக்கிறது. இந்தப் பதிவு வைரலானதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவுக் குரல்கள் குவிந்துவருகின்றன. பலர் தங்களது சொந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு, அவருக்கு நம்பிக்கை ஊட்டி வருகின்றனர். ஒரு பயனர், "நானும் இதேபோன்ற ஒரு நிலையில் இருந்திருக்கிறேன். ஐஐடி-யில் படித்து, அதிக சம்பள வேலையை விட்டு ஸ்டார்ட்அப் தொடங்கினேன். அது தோல்வியில் முடிந்தது. உலகம் முடிந்துவிட்டதுபோலத் தோன்றியது. ஆனால், என்னை நம்புங்கள், எல்லாம் சரியாகிவிடும்," என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், "உங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டதே பெரிய விஷயம். 10-ல் 9 ஸ்டார்ட்அப்கள் தோல்வியடைவது இயல்பு. இதில் உங்கள் தவறு ஏதுமில்லை," என ஆறுதல் கூறியுள்ளார். ஸ்டார்ட்அப் மற்றொரு பயனர் இன்னும் ஒரு படி மேலே சென்று, " உங்களால் நீங்கள் நினைக்கும் வேலையைச் செய்ய முடியுமா? முடியும் என்றால், நிச்சயம் உங்களுக்கு வேலை கிடைக்கும்," என்று நடைமுறை யதார்த்தத்தை விளக்கியுள்ளார். துணிந்து ரிஸ்க் எடுத்ததே ஒரு பெரிய தகுதி எனப் பலரும் பாராட்டியுள்ளனர். "இரண்டு நிறுவனங்களைத் தொடங்கி, அதைத் தொடர்ந்து நடத்தியதே உங்கள் திறமைக்குச் சான்று. தோல்வி என்பது நீங்கள் கடினமாக உழைக்கவில்லை என்பதற்கான அடையாளம் அல்ல; பலரும் எடுக்கப் பயப்படும் ஒரு முயற்சியை நீங்கள் எடுத்திருக்கிறீர்கள் என்பதற்கான அடையாளம்," என்ற கருத்துகள், நம்பிக்கை இழந்த அந்த இளைஞருக்கு மட்டுமல்ல, இதேபோன்ற சூழலில் தவிக்கும் பலருக்கும் ஒரு பெரும் உந்துதலாக அமைந்துள்ளது.! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Article complet — lien ci-dessous




