சென்னை, அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டது சரியான நடவடிக்கை என்று பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சர்ச்சை பேச்சு தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் கடந்த மாதம் 20-ந் தேதி நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் பேசும்போது தமிழக முதல்-அமைச்சர் சினிமா நடிகைகளோடு ஜாலியாக இருந்தார். அவரை கொண்டு வந்து சட்டசபையில் உட்கார வைத்த உடன் என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் என்று அவதூறு பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக த.வெ.க. கட்சி நிர்வாகிகள் ஆத்தூர் போலீ சில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மீது பி.என்.எஸ். 352 மற்றும் 353/2 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அனிதா ராதாகிருஷ்ணன் கைது இதற்கிடையே, முன் ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் அனிதா ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நேற்று காலை அவர் கைதுசெய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, எஸ்.பி. அலுவலகத்தில் அவரிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதன் பின்னர் அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம், மாஜிஸ்திரேட் ஒன்றரை மணிநேரம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, அவரை சொந்த ஜாமீனில் விடுவித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். ரூ.10 ஆயிரம் செலுத்தி விட்டு சொந்த ஜாமீனில் செல்லும்படி உத்தரவிட்ட அவர், 10 நாட்களுக்கு காவல் நிலையத்தில் கையெழுத்திடவும் உத்தரவு பிறப்பித்து உள்ளார். சரியான நடவடிக்கை இந்நிலையில், அனிதா ராதாகிருஷ்ணன் மீதான கைது நடவடிக்கை குறித்து பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;- “அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட வேண்டியவர். தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. பேசுகின்ற பேச்சா இது? என்று கோர்ட்டில் நீதிபதி கேள்வி கேட்டிருக்கிறார். வாய்க்கு வந்ததெல்லாம் பேசினால் எல்லோரும் பொறுத்து கொண்டிருப்பார்களா? தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தமிழக முதல்-அமைச்சரை மட்டுமின்றி, சமூக வலைதளங்களில் மற்ற அரசியல் தலைவர்கள் குறித்தும் அசிங்கமாக எழுதுகிறார்கள். அதை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இதுவரை கண்டிக்கவில்லை. அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டது சரியான நடவடிக்கை. நாகரிகமான பேச்சு இருக்க வேண்டும். எதிர்கட்சிகளை விமர்சனம் செய்யும்போது கூட வரம்பு மீறி இருக்க கூடாது. அவர் மீதான கைது நடவடிக்கை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். எதிர்குரல் கொடுத்தாலும் அதை நாகரிகமாக கொடுங்கள் என்பது எனது கருத்து.” இவ்வாறு அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/anita-radhakrishnan-ought-to-be-arrested-tamilisai-soundararajan-lashes-out




