புதுடெல்லி, தேசிய பாடலான வந்தே மாதரத்தை முழுமையாக பாடாவிட்டால் வழக்குப்பதிவு வேண்டாம் என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளார். வந்தே மாதரம் பாடலின் ஆறு சரணங்களையும் கட்டாயம் பாட வேண்டும் என்று மத்திய அரசு பிறப்பித்த சுற்றறிக்கை மற்றும் அந்த பாடலுக்கு தேசிய கீதத்துக்கு இணையான அந்தஸ்து வழங்கும் சமீபத்திய சட்டத் திருத்தம் ஆகியவற்றை எதிர்த்து டி.எம்.கிருஷ்ணா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “வந்தே மாதரம் பாடலின் நான்கு சரணங்கள் இந்து தெய்வங்கள் மீதான பக்தி உணர்வை வெளிப்படையாக வலியுறுத்துகின்றன. எனவே, அப்பகுதிகளைக் கட்டாயம் பாட வேண்டும் என்று உத்தரவிடுவது நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு முரணானது. தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் வந்தே மாதரம் பாடலையும் கொண்டு வருவதற்கான இந்த திருத்தம் தன்னிச்சையானது. இது தனிநபர் சுதந்திரத்தை மீறுவதுடன் பெரும்பான்மைவாத மதச் செய்தியையும் முன்னிறுத்துகிறது. பொதுமக்களின் கருத்துகளை கேட்காமல் இது போன்ற சட்டங்களை இயற்றக்கூடாது என அதில் தெரிவித்துள்ளார். கிருஷ்ணா சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.முரளிதர் மனுவை தாக்கல் செய்தார். தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு, மூத்த வழக்கறிஞர் முரளிதர் தாக்கல் செய்துள்ள மனுவை கவனத்தில் கொண்டு சட்டத்தின் தண்டனை அம்சத்தை ஆராயலாம் என்று தெரிவித்துள்ளது. இந்த மனு மீது மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பாத சுப்ரீம் கோர்ட்டு, வந்தே மாதரம் தேசிய பாடல் என்பதில் சந்தேகம் இல்லை என்றும், மத சுதந்திரத்தை உத்தரவாதப்படுத்தும் அரசியலமைப்புச் சட்டத்தின் 25 மற்றும் 26-ஆவது பிரிவுகளின் கீழ் அடிப்படை உரிமைகள் குறித்து ஆராயலாம் என்றும் கூறியுள்ளது. விசாரணையின்போது நீதிபதி ஜாய்மால்யா பாக்சி, “வந்தே மாதரம் பாடலின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சரணங்களை பாட வேண்டாம் என நினைத்து பாடாமல் இருப்பவர்கள் கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்ளும் நிலை இருக்கக் கூடாது. பிஜோ இம்மானுவேல் வழக்கில் தேசிய கீதம் பாடாத நபர்களை பாதுகாக்கும் சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய தீர்ப்பு இன்னமும் அப்படியே இருக்கிறது. பிஜோ இம்மானுவேல் வழக்கில் இந்த கோர்ட்டு அறிவித்த நாட்டின் சட்டமே, இந்த சட்ட விவகாரத்திலும் பொருந்தும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். பிஜோ இம்மானுவேல் வழக்கில் அளிக்கப்பட்ட அந்த சட்ட அறிவிப்பு, இதுவரை கேள்விக்குள்ளாக்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/if-vande-mataram-is-not-sung-in-full-no-case-should-be-registered-supreme-court




