சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சியில் 1 முதல் 15 வரையிலான அனைத்து மண்டலங்களிலும் உள்ள பகுதிகளில் கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 3,597 பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுகாதாரப் பணிகள் குறித்து ஆய்வு இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- இன்று (19.09.2026) பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் அனைத்து மண்டலங்களிலும் மேற்கொள்ளப்பட்டுவரும் கொசு ஒழிப்பு, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதாரப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை ஆணையாளர் (சுகாதாரம்) தாக்கரே சுகம் ஞானதேவராவ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம் இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் பேசும்போது தெரிவித்ததாவது:- பெருநகர சென்னை மாநகராட்சியில் அனைத்து மண்டலங்களிலும் கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இப்பணிகளை மேற்கொண்டு தொடர் கண்காணிப்பினை மேற்கொள்ள வேண்டும். மக்களை பாதுகாப்பதில் அலுவலர்கள் முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பெருநகர சென்னை மாநகராட்சியில் 1 முதல் 15 வரையிலான அனைத்து மண்டலங்களிலும் உள்ள பகுதிகளில் கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வணிக வளாகங்களுக்கு அபராதம் கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்புப் பணியில் மொத்தம் 3,597 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தச் செயல்பாட்டை மேலும் தீவிரப்படுத்த உள்நாட்டுக் கொசு உற்பத்தி தடுப்பாளர்கள் (Domestic Breeding Checkers) உட்பட அனைத்து பொது சுகாதாரத் துறை ஊழியர்களும் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு அவர்களது களப்பணி நடவடிக்கைகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டும் வருகிறது. மாநகராட்சி அலுவலர்கள் மூலமாக ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தப்பட்டு, கொசு ஒழிப்புப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பயிற்சிகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பணியாளரும் தினமும் 80 முதல் 100 வீடுகளைப் பார்வையிடுகின்றனர். மண்டலம் 1 முதல் 15 வரையிலான அனைத்து மண்டலங்களிலும் வார்டு வாரியாக அனைத்து இடங்களிலும் காலியாக உள்ள நிலங்கள், வணிக வளாகங்கள், புதிய கட்டுமான இடங்கள், கல்வி நிறுவனங்கள், விடுதிகள், மருத்துவமனைகள், அரசு கட்டடங்கள், வீட்டிற்குள்ளும் மற்றும் சுற்றப்புறப் பகுதிகளிலும் கொசு உற்பத்தியாகும் இடங்கள் மற்றும் தேங்காய் மட்டை, ஓடுகள், கண்ணாடிப் பொருட்கள், டயர் உள்ளிட்ட கொசுப்புழு உருவாக வாய்ப்புள்ள தேவையற்ற பொருட்கள் மாநகராட்சிப் பணியாளர்கள் மூலம் கண்டறியப்பட்டு அவற்றை அழிக்கும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொசு உற்பத்தி கண்டறியப்படும் வணிக வளாகங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. புகைப் பரப்பும் பணி தீவிரம் தண்ணீர் தொட்டிகள் மற்றும் வீடுகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் அபேட் (Abate) எனும் கொசுப்புழு நாசினி மருந்து தெளிக்கப்பட்டும், கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்களில் கொசு லார்வாக்களை அழிக்கும் (MLO) எண்ணெய் பயன்படுத்தி கொசுப் புழுக்களைக் கட்டுப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. கொசுப் புழுக்களை அழிக்கும் பணியும், வளர்ந்த கொசுக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் தெரு வாரியாக வீட்டிற்குள்ளும், வெளியிலும் புகைப் பரப்பும் பணியும் (Fogging) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் (UPHC), நகர்ப்புற சமுதாய சுகாதார நிலையங்கள் (UCHC) மற்றும் சுகாதார மையங்களின் (HWC) மருத்துவ அலுவலர்களுக்கு காய்ச்சல் மேலாண்மை குறித்த மறுபயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவ மையங்களிலும் காய்ச்சல் மேலாண்மைக்கான மருந்துகள் இருப்பு உள்ளது. 48 சிறப்பு மருத்துவ முகாம் மருத்துவமனைகள், கிளினிக்குகள், ஆய்வகங்கள், பயிற்சி மையங்கள், வீடுகள் மற்றும் அரசு மையங்களில் இருந்து புகாரளிக்கப்பட்ட காய்ச்சல் விவரங்களை சேகரிப்பதன் மூலம் காய்ச்சல் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பிய அனைத்து காய்ச்சல் நோயாளிகளும் 3 நாட்களுக்கு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள். காய்ச்சல் அதிக பாதிப்புள்ள பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு நிலவேம்பு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. மேலும் கொசுக்களால் பரவும் நோய்கள் மற்றும் சுகாதாரம் குறித்த சுகாதாரக் கல்வியும் வழங்கப்படுகிறது. இன்று (19.09.2026) 15 மண்டலங்களிலும் 48 காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 1,108 நபர்கள் பயன்பெற்றுள்ளனர். அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் 3 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 161 நபர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மேலும், மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும், மருத்துவமனைகளுக்கு வருகைதரும் பொதுமக்களுக்கும், வீடுகள்தோறும் சென்று பொதுமக்களுக்கும், கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் உரிமையாளர்கள் ஆகியோருக்கு கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/3597-workers-intensify-mosquito-eradication-efforts-in-chennai




