தமிழ்நாட்டில் பிக்கிள்பால் (Pickleball) விளையாட்டைத் தொழில்முறை அளவில் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் நோக்கில், 'Cavin's Tamil Nadu Pickleball Premier League (TNPPL) – Season 2'-ன் தொடக்க விழாவும், வீரர்கள் ஏலமும் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. நடிகர் விக்ரம், லீக் இயக்குநர் கே.யோகேஷ், தமிழ்நாடு பிக்கிள்பால் சங்கத் தலைவர் கே.மோகித் குமார், செயலாளர் டாக்டர் காவ்யா சோமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், லீக்கின் கோப்பை, அதிகாரபூர்வ இணையதளம், கீதம் ஆகியவை வெளியிடப்பட்டன. மேலும், 12 அணிகளுக்கான வீரர்களும் ஏலத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். பிக்கிள்பால்: அறிமுகமும் எழுச்சியும் டென்னிஸ், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளின் அம்சங்களை ஒருங்கிணைத்து, சிறிய மைதானத்தில் பேடிலும் துளைகளைக் கொண்ட பிளாஸ்டிக் பந்தையும் பயன்படுத்தி விளையாடப்படும் பிக்கிள்பால், உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் விளையாட்டுகளில் ஒன்றாகும். இந்தியாவிலும் கடந்த சில ஆண்டுகளாக இதற்கு வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் அந்த வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாக TNPPL நடத்தப்பட்டு வருகிறது. TNPPL சீசன் 2 சிறப்பாக நடந்த தொடக்க விழா! தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நடிகர் சியான் விக்ரம், கே.யோகேஷ், கே.மோகித் குமார், டாக்டர் காவ்யா சோமேஷ் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கிவைத்தனர். தொடர்ந்து வரவேற்புரை மற்றும் விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து TNPPL சீசன் 2-க்கான அதிகாரபூர்வ கோப்பை அறிமுகப்படுத்தப்பட்டது. இணையதளமும், லீக்கின் அதிகாரபூர்வ கீதமும் வெளியிடப்பட்டதை அடுத்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 12 அணிகளும், அவற்றின் உரிமையாளர்களும் மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டனர். தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் குரல்! நிகழ்ச்சியில் பேசிய லீக் இயக்குநர் கே.யோகேஷ், "தமிழ்நாட்டில் பிக்கிள்பால் விளையாட்டின் வளர்ச்சியில் TNPPL சீசன் 2 ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும். வீரர்களின் அதிகரித்து வரும் பங்கேற்பு, அணிகளின் வலுவான ஆதரவு மற்றும் ரசிகர்களின் வரவேற்பு ஆகியவை தமிழ்நாட்டை இந்தியாவின் முக்கிய பிக்கிள்பால் மையமாக மாற்றும்" என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார். TNPPL சீசன் 2 தொடர்ந்து பேசிய தமிழ்நாடு பிக்கிள்பால் சங்கத் தலைவர் கே.மோகித் குமார், ``இந்த லீக் திறமையான வீரர்களுக்குத் தொழில்முறை தளத்தை உருவாக்குவதோடு, அடிமட்டத்தில் பிக்கிள்பால் விளையாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும்" என்றார். சிறப்பு விருந்தினர் நடிகர் சியான் விக்ரம் பேசுகையில், உலகம் முழுவதும் பிக்கிள்பால் விளையாட்டு பெற்றுவரும் வரவேற்பைப் பாராட்டியதுடன், தமிழ்நாட்டிலும் இது மேலும் வளர வேண்டும் என்றும், போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர்களுக்கும் தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார். திரைப்பிரபலங்களின் அணி உரிமையாளர்கள்! இந்த சீசனில் பங்கேற்கும் 12 அணிகளில், நடிகர் சியான் விக்ரம், நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகை கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் அணி உரிமையாளர்களாக இருப்பது இந்த லீக்கின் மீதான கவனத்தை மேலும் அதிகரித்துள்ளது. TNPPL சீசன் 2 விறுவிறுப்பான வீரர்கள் ஏலம்! விழாவைத் தொடர்ந்து நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில், 168 வீரர்கள் பல்வேறு அணிகளால் தேர்வு செய்யப்பட்டனர். ஒவ்வொரு அணியும் 14 வீரர்களைக் கொண்டதாக அமைக்கப்பட வேண்டும் என்ற விதியின்படி ஏலம் நடைபெற்ற நிலையில், 51 வீரர்கள் unsold (தேர்வாகவில்லை) ஆயினர். இந்த ஏலத்தில் அதிகபட்சமாக ₹1.25 லட்சத்திற்கு அனிஷ் ஃப்ரோய்லன்-ஐ கோயம்புத்தூர் ஸ்மாஷர்ஸ் அணி தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது. களமிறங்கத் தயாராகும் அணிகள்! செப்டம்பர் 17 முதல் 20 வரை, சென்னையின் எக்ஸ்பிரஸ் அவென்யூ ஏட்ரியம் (Express Avenue Atrium) வளாகத்தில் நடைபெறவுள்ள TNPPL சீசன் 2 போட்டிகளில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 12 அணிகள் சாம்பியன் பட்டத்திற்காக பலப்பீட்சை நடத்தவுள்ளன. பிரபலங்களின் பங்கேற்பு, தொழில்முறை லீக் அமைப்பு, விறுவிறுப்பான வீரர்கள் ஏலம் என TNPPL சீசன் 2, தமிழ்நாட்டில் பிக்கிள்பால் விளையாட்டின் வரலாற்றில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறது! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://sports.vikatan.com/tnppl-pickleball-season-2-begins-in-tamil-nadu




