சென்னை, புதிய தலைமைச் செயலகத்தில் தமிழர் கட்டிடக்கலைக்கு இடம் உண்டா? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- புதிய தலைமைச் செயலகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை வழக்காடு மொழியாகக் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருப்பதையும், தற்போதைய இடநெருக்கடி மற்றும் எதிர்கால நிர்வாகத் தேவைகளை கருத்தில் கொண்டு 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் வரவேற்கிறோம். தமிழ் என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாறு, பண்பாடு, அறிவு மற்றும் தமிழர்களின் அடையாளத்தைத் தாங்கி நிற்கும் செம்மொழியாகும். எனவே, தமிழ்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவதற்கான முழுமையான உரிமை நிலைநாட்டப்படுவது அவசியமானதாகும். அதேபோல், இந்தப் புதிய தலைமைச் செயலக வளாகம் குறித்து தமிழக மக்களின் எதிர்பார்ப்பையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். அடையாளமாக திகழ வேண்டும் புதிய தலைமைச் செயலகம் நவீன நிர்வாகத்திற்கான வசதிகளை மட்டுமே கொண்ட ஒரு கட்டடமாக அமைந்துவிடக் கூடாது. தமிழர் நாகரிகத்தின் தொன்மையையும், தமிழ்நாட்டின் தனித்துவமான கட்டிடக்கலை மரபையும் உலகிற்கு எடுத்துக்காட்டும் நிரந்தர அடையாளமாக அது திகழ வேண்டும். தஞ்சைப் பெருவுடையார் கோவில், மாமல்லபுரம் சிற்பக் கலை, செட்டிநாட்டு கட்டிடக்கலை உள்ளிட்ட நமது பாரம்பரியச் சின்னங்களின் தனித்துவமான கூறுகளை ஆய்வு செய்து, அவற்றின் சிறப்புகளை நவீன கட்டுமானத் தொழில்நுட்பத்துடன் இணைத்து, உருவாக்கப்பட வேண்டும். வளாகத்தின் நுழைவாயில் முதல் சட்டப்பேரவை அரங்கம் வரை, தூண்கள், மண்டபங்கள், சிற்பங்கள், கலைப்பொருட்கள், உள்கட்டமைப்பு மற்றும் அலங்கார வடிவமைப்புகளில் தமிழ்நாட்டின் வரலாறும் கலைப்பண்பாடும் வெளிப்படும் வகையில் திட்டமிடப்பட வேண்டும். உலகத் தரத்தில் இருக்கட்டும் நவீன வசதிகள் உலகத் தரத்தில் இருக்கட்டும். அதன் வடிவமும் அடையாளமும் தமிழாக இருக்கட்டும். புனித ஜார்ஜ் கோட்டை தமிழ்நாட்டின் நிர்வாக வரலாற்றில் ஒரு முக்கியமான அடையாளமாக விளங்குவது போன்று, புதிதாக உருவாக்கப்படும் தலைமைச் செயலகமும் எதிர்காலத் தலைமுறைகள் பெருமையுடன் அடையாளம் காணும் வகையில் அமைய வேண்டும். இதற்காக, கட்டிட வடிவமைப்பை இறுதி செய்வதற்கு முன் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னணி கட்டிடக் கலைஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியல் வல்லுநர்கள், தமிழ் அறிஞர்கள் மற்றும் கலைத்துறையினரைக் கொண்ட வல்லுநர் குழுவை அமைத்து, அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று திட்டத்தை வடிவமைக்க வேண்டும். தமிழுக்கான உரிமையை நிலைநாட்டும் வகையிலும், தமிழ்நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பை நவீனப்படுத்தும் வகையிலும் அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. அதேவேளையில், புதிய தலைமைச் செயலகம் தமிழ்நாட்டின் ஆட்சி மையமாக மட்டுமின்றி, தமிழர் வரலாறு, பண்பாடு, கலை மற்றும் தொன்மையான கட்டிடக்கலைப் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் அடையாளச் சின்னமாக அமைய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/is-there-a-place-for-tamil-architecture-in-the-new-secretariat-velmurugan



