சேலம், சேலம் ராஜகணபதி கோவில் கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக இன்று நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். ராஜகணபதி கோவில் சேலம் கடைவீதியில் பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சேலம் மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். இந்த கோவில் சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. சேலம் சுகவனேசுவரர் கோவிலின் உபகோவிலான இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் நிறைவு பெற்றதால், திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டு கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கின. ஜூன் மாதம் 5-ந் தேதி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முகூர்த்தகால் நடப்பட்டது. இதுதவிர கோவிலில் புதியதாக கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து கடந்த 24-ந் தேதி முதல் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்கின. கடந்த 25-ந் தேதி சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுமங்கலி பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜையும், 26-ந் தேதி சுகவனேசுவரர் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம் ஊர்வலமும் நடந்தது. பிரமாண்ட யாகசாலை கும்பாபிஷேகத்திற்காக கோவில் எதிரில் உள்ள மண்டபத்தில் 25 யாக குண்டங்கள், அருகிலுள்ள மற்றொரு இடத்தில் 21 யாக குண்டங்கள் என மொத்தம் 46 குண்டங்களுடன் பிரமாண்டமாக யாகசாலை அமைக்கப்பட்டு புனிதநீர் கலசங்கள் வைக்க பீடங்கள் கட்டி அதன் முன்பு சிறப்பு பூஜை தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை முதல் கால யாக பூஜை, தீபாராதனை நடைபெற்றது. நேற்று காலை 2-ம் கால யாகபூஜை, மாலையில் திருமுறை பாராயணம், மஞ்சள் சாத்துபடி, தொடர்ந்து 3-ம் கால யாகபூஜை, தீபாராதனை நடந்தது. கும்பாபிஷேகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை திருமுறை பாராயணம், விசேஷ சாந்தி, பாவனாபிஷேகம், வெள்ளை சாத்துப்படி, 4-ம் கால யாகபூஜை நடைபெற்றது. யாகசாலை பூஜை நிறைவுபெற்று, காலை 7.15 மணிக்கு கோபுரத்திற்கு கலச புறப்பாடு நடைபெற்றது. புனித நீர் கலசங்கள் கோபுரத்தை அடைந்ததும், காலை 8.10 மணிக்கு ராஜகணபதி விமானம், முகப்பு விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 8.35 மணிக்கு மூலஸ்தான ராஜகணபதிக்கு கும்பாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு 8 மணிக்கு 1,000 இசை கலைஞர்கள் மேளதாளம் முழங்க பாரம்பரிய நடனங்களுடன் சாமி புஷ்ப சத்தாபரண ஊர்வலமும் நடக்கிறது. விழாக்கோலம் சேலம் ராஜகணபதி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடைவீதி முழுவதும் பிரமாண்ட பந்தல்கள், மின்விளக்கு அலங்காரங்களால் விழாக்கோலம் பூண்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதால் ஏராளமானோர் தங்களது குடும்பத்தினருடன் கோவிலுக்கு வருகை தந்து தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக கடைவீதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, திருவள்ளுவர் சிலை அருகில் இருந்து பக்தர்கள் நடந்து செல்லலாம். மொபட் மற்றும் மோட்டார் சைக்கிள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/devotional/grand-consecration-ceremony-of-the-raja-ganapathi-temple-in-salem




