நாகர்கோவில், நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் அதிநவீன ரெயில் பெட்டி உணவகம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உணவு வசதிகள் குமரி மாவட்டத்தின் மிக முக்கியமான ரெயில் நிலையமாக நாகர்கோவில் சந்திப்பு திகழ்கிறது. ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கும் அதிகமாக வருவாய் ஈட்டித்தரும் இந்த நிலையமானது ரெயில்வே நிர்வாகத்தால் 'என்.எஸ்.ஜி.-3' பிரிவு நிலையமாக வரையறுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் கோட்டத்தில் குறைந்த அளவிலான ரெயில்களை இயக்கினாலும், அதிக வருவாய் ஈட்டித்தரும் முதன்மை நிலையங்களில் ஒன்று என்ற பெருமையை பெற்றது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர் பயணிகள், ஆன்மிக சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிமாநில பயணிகள் பயன்படுத்தும் இந்த நிலையத்தில் தற்போது ஒரே ஒரு உணவகம் மட்டுமே இயங்கி வருகிறது. இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் நிலவுவதோடு, பயணிகள் சரியான நேரத்தில் உணவு, தேநீர் மற்றும் சிற்றுண்டிகளை பெற முடியாமல் அவதியுற்று வருகிறார்கள். எனவே இந்த சிரமங்களை போக்கும் வகையில் உணவு வசதிகளை நவீனப்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக குமரி மாவட்ட ரெயில் பயணிகள் சங்கம் சார்பில் தென்னக ரெயில்வேக்கு மனுவும் அளிக்கப்பட்டது. ரெயில் பெட்டி உணவகம் இந்த நிலையில் உணவு வசதியை மேம்படுத்த நாகர்கோவில் சந்திப்பு நிலையத்தில் ரெயில் பெட்டி உணவகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது திருச்சி மற்றும் ராமேசுவரம் ஆகிய ரெயில் நிலையங்களில் இருப்பதுபோல பயன்பாட்டில் இருந்து விலக்கப்பட்ட பழைய ரெயில் பெட்டியை அதிநவீன வடிவில் புதுப்பித்து, கவர்ச்சிகரமான விளக்குகள் மற்றும் சொகுசு இருக்கைகளுடன் கூடிய 'ரெயில் பெட்டி உணவகம்' அமைப்பதற்கான ஒப்பந்தம் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது. இதற்கான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதால் விரைவில் இது பயணிகளின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. 'பிரீமியம் பிராண்ட் உணவகம்' இதே போல நடைமேடையில் தரமான காபி, தேநீர் மற்றும் பானங்களை வழங்கும் 'பிரீமியம் பிராண்ட் உணவகம்' அமைப்பதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதற்கான ஏலம் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்புதிய உள்கட்டமைப்பு வசதிகள் மூலம் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் நவீன வசதிகளுடன் மிளிர்வதோடு, பயணிகள் உணவிற்காக காத்திருக்கும் நேரமும் கணிசமாக குறையும் என்று திருவனந்தபுரம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/rail-box-restaurant-attracts-passengers-at-nagercoil-railway-station




