சென்னை, கொத்தடிமை முறையின் கொடூரம்! பழங்குடியின தாயும், சேயும் பலி! மரவியாபாரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- வேதனை காஞ்சிபுரம் மாவட்டம், சிங்காடிவாக்கம் ஊராட்சியை சேர்ந்த இருளர் பழங்குடியின பெண் தேன்மொழி (35) மற்றும் அவரது பச்சிளம் குழந்தையுடன் கொடுரமான முறையில் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. விறகு வியாபாரி இருளர் சமூகத்தை சேர்ந்த ஆனந்தன் (40), தேன்மொழி (35) தம்பதியினர். அரக்கோணம் சாலையில் உள்ள வெள்ளை கேட் பகுதியில் ஆறுமுகம் என்ற விறகு வியாபாரியிடம் கடந்த 6 மாதங்களாக வேலை செய்து வந்துள்ளனர். அவர்களுடன் திருமணமான மகள் காவியா, மருமகன் முத்து குடும்பமும் வேலை செய்து வந்துள்ளனர். விறகு வியாபாரி அமைத்து கொடுத்த தார்ப்பாய் கூடாரத்திலேயே அவர்கள் தங்கி வேலை செய்து வந்துள்ளனர். பிரசவ வலி வேலைக்காக முன்பணமாக ஆறுமுகத்திடம் ஆனந்தன் தம்பதியினர் ரூ.20,000 கடன் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், 9 மாத கர்ப்பிணியான தேன்மொழிக்கு திடீரென கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய அவசர நிலையில் இருந்த அவரை, "வாங்கிய கடனை திருப்பி கொடுக்காமல் மரம் வெட்டும் இடத்தைவிட்டு செல்லக்கூடாது" என்று கூறி ஆறுமுகம் மருத்துவமனைக்கு செல்லவிடாமல் தடுத்து விட்டார். கொடூரம் மருத்துவ உதவியின்றி தேன்மொழிக்கு தார்ப்பாய் கூடாரத்திலேயே பிரசவம் தொடங்கியுள்ளது. குழந்தையின் உடல் பாதி வெளியே வந்த நிலையில், கடுமையான வலி மற்றும் அதிக ரத்தப்போக்கு காரணமாக தேன்மொழியும் அவரது பச்சிளம் குழந்தையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஒரு நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்ட நேரத்தில், வெறும் ரூ.20,000 கடனுக்காக அவரை மருத்துவமனைக்கு செல்லவிடாமல் தடுத்தது மிக மிக கொடூரமானதுமாகும். உழைப்பு சுரண்டல் பழங்குடியின மக்களின் வறுமையையும் கல்வியறிவின்மையையும் பயன்படுத்தி அவர்களை கடன் மற்றும் உழைப்பு சுரண்டலுக்குள் தள்ளும் நடைமுறைகளுக்கு இந்த கொடூர சம்பவம் மற்றுமொரு அதிர்ச்சிகரமான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. விசாரணை இந்த கொத்தடிமையின் கொடூரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தேன்மொழி மற்றும் அவரது பச்சிளம் குழந்தையின் மரணம் இயற்கை மரணம் என்று எளிதில் மூடிமறைக்கப்படாமல், முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். வன்கொடுமைகள் தடுப்பு சட்டம் மருத்துவமனைக்கு செல்லவிடாமல் தடுத்த விறகு வியாபாரி ஆறுமுகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் இரண்டு உயிர்கள் பறிக்கப்பட்டதற்கு இணையான வழக்கும் அத்துடன் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் படியும் வழக்குப் பதிவு செய்து நியாயமான மற்றும் விரைவான விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த தேன்மொழியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும், அரசின் அனைத்து நிவாரணங்களும் உடனடியாக வழங்கப்பட வேண்டும். இருளர் உள்ளிட்ட பழங்குடியின மக்களின் உழைப்பு சுரண்டலையும், கடன் கொத்தடிமைத்தனத்தையும் தடுத்து நிறுத்துவதற்கு தமிழ்நாடு அரசு உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/tribal-mother-and-child-sacrificed-cpm-urges-legal-action-against-tamil-nadu-government



