சென்னை, நிறைமாத கர்ப்பிணியான தேன்மொழிக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது, கடனை அடைக்காமல் வெளியே செல்லக் கூடாது எனக் கூறி தடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு மிகவும் கொடூரமானது. இந்தக் குற்றச்சாட்டு உண்மையெனில், ஒரு மனித உயிரைவிட ரூ.20 ஆயிரம் கடன் பெரிதா? என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- தாய் சேய் உயிரிழப்பு காஞ்சிபுரம் மாவட்டம், சிங்காடிவாக்கத்தில் இருளர் பழங்குடியினப் பெண் தேன்மொழியும், அவர் பெற்ற பச்சிளம் குழந்தையும் உரிய மருத்துவ உதவி கிடைக்காமல் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. விறகு வியாபாரி ஆறுமுகத்திடம் ரூ.20 ஆயிரம் முன்பணம் பெற்றிருந்த குடும்பம், கடந்த சில மாதங்களாக விறகு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்ததாகவும், பணியிடத்தில் தார்ப்பாய் கூடாரத்தில் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது. நிறைமாத கர்ப்பிணியான தேன்மொழிக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது, கடனை அடைக்காமல் வெளியே செல்லக் கூடாது எனக் கூறி மருத்துவமனைக்குச் செல்லத் தடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு மிகவும் கொடூரமானது. இந்தக் குற்றச்சாட்டு உண்மையெனில், ஒரு மனித உயிரைவிட ரூ.20 ஆயிரம் கடன் பெரிதா? என்ற கேள்வி எழுகிறது. இது மரணமா? மறைந்திருக்கும் கொத்தடிமை முறையின் அடையாளமா? முன்பணம் அல்லது கடன் கொடுத்து, அதற்குப் பதிலாகத் தொழிலாளர்களின் உழைப்பையும் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்துவது சட்டவிரோதமானது. கைது செய்ய வேண்டும் எனவே தமிழ்நாடு அரசு, இந்தச் சம்பவத்தை வெறும் சந்தேக மரணமாகக் கருதாமல், மருத்துவ உதவி மறுக்கப்பட்டதற்கான காரணம், கடன் ஊதியக் கணக்கு, பணியிடத்தில் தங்க வைக்கப்பட்ட விதம், தொழிலாளர்களின் சுதந்திரம் உள்ளிட்ட அனைத்தையும் முழுமையாக விசாரிக்க வேண்டும். குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், தொடர்புடையவர்கள் மீது கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பு சட்டம், பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், கொலைப்பிரிவு உள்ளிட்ட பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்து உடனடியாகக் கைது செய்ய வேண்டும். காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் உள்ள விறகுக் கிடங்குகள், கரி உற்பத்தி மையங்கள், செங்கல் சூளைகள் உள்ளிட்ட தொழிலிடங்களில் பழங்குடியின மக்கள் கொத்தடிமைகளாகப் பயன்படுத்தப்படுகிறார்களா? என்பதைச் சிறப்புக் குழு அமைத்து அரசு ஆய்வு செய்ய வேண்டும். ஆழ்ந்த இரங்கல் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உடனடி நிவாரணம் வழங்குவதுடன், வீட்டு மனை, பாதுகாப்பான குடியிருப்பு, வாழ்வாதார உதவி, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை அரசு உறுதி செய்ய வேண்டும். கொத்தடிமை நிலை உறுதி செய்யப்பட்டால், சட்டப்படி விடுதலைச் சான்றிதழும் மறுவாழ்வு உதவிகளும் வழங்கப்பட வேண்டும். தேன்மொழிக்கும், உலகைக் காணும் முன்பே உயிரிழந்த அந்தப் பச்சிளம் குழந்தைக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் செவ்வணக்கத்தையும் உரித்தாக்குகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/must-a-mother-and-child-lose-their-lives-over-a-20000-loan-velmurugan-asks




