சென்னை, மேட்டூர் நீர்த்தேக்க பகுதிகளில் அரசு உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தருமபுரி மாவட்டம் எரியூர் அருகேயுள்ள மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியானது, ரசாயனக் கழிவுகள் கலந்து நிறம் மாறி பச்சை பசேலென்று காட்சியளிப்பதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் வைரல் காய்ச்சல் பரவி வருவதாகவும் வெளியாகியுள்ள செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது. மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் தேங்கி நிற்கும் தண்ணீர், அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீராகவும், விளை நிலங்களுக்கு பாசன நீராகவும் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இத்தகைய சுகாதார சீர்கேடு அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பெருமளவில் பாதிக்கும். அதுமட்டுமன்றி, ஏற்கனவே சரியான நேரத்திற்கு கர்நாடக அரசு காவிரி நீர் திறந்துவிடாததால், தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் எல்லாம் வறண்டு வருகின்றன. விளைநிலங்கள் எல்லாம் பாளம் பாளமாக வெடித்து நிற்கின்றன. பயிர்கள் காய்ந்து, சருகாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், கைவசம் இருக்கும் தண்ணீரை பத்திரப்படுத்தி பாதுகாப்பதுதான் ஒரு நல்ல அரசுக்கு அழகு. எனவே, மேட்டூர் நீர்த்தேக்கப் பகுதிகளில் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வுகள் மேற்கொண்டு, தண்ணீர் அசுத்தம் அடைதலுக்கான காரணங்களை கண்டறிவதோடு, தமிழகத்தின் அனைத்து நீர்நிலைகளும் மக்கள் பயன்பாட்டிற்கு உகந்த வகையில் முறையாகப் பராமரிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டுமென முதல்வர் விஜய்யை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/government-must-immediately-inspect-mettur-reservoir-areas-nainar-nagendran




