சென்னை, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:- 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய-கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மத்திய மற்றும் அதனையொட்டிய மேற்கு வங்கக் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். அது நாளை (22-ந்தேதி) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறக்கூடும். வருகிற 23-ந்தேதி காலை அது வடக்கு ஆந்திரா தெற்கு ஒடிசா கடற்கரை பகுதியை நெருங்கும். இதன் காரணமாக தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை, கடலூர், திருப்பத்தூர், வேலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சூறாவளி காற்று வீசக்கூடும் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால், மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் இன்றும் நாளையும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இப்பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், சில நேரங்களில் 65 கிலோ மீட்டர் வேகம் வரையிலும் சூறாவளி காற்று வீசக்கூடும். சென்னை பாலவாக்கம் முதல் லட்சுமிபுரம் ஓடைக்குப்பம் வரையிலான கடற்கரை பகுதிகளில் நீரோட்டத்தின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், நாளை இரவு வரை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இரவு 10 மணியளவில் பெய்ய தொடங்கிய மழை சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக கொட்டித்தீர்த்தது. சென்னை கோயம்பேடு, திருமங்கலம், அண்ணாநகர், சூளைமேடு, நுங்கம்பாக்கம், தி.நகர், வடபழனி, வளசரவாக்கம், போரூர், மதுரவாயல் உள்ளிட்ட பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. இரவில் மழை பெய்தபோது போக்குவரத்து நெரிசலும் அதிகமாக காணப்பட்டது. சென்னையில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் இரவிலும் புழுக்கம் நீடித்து வந்தது. நேற்று பெய்த மழையால் இரவில் குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/heavy-rain-warning-for-21-districts




