இந்து மதத்தில் மிக உயர்ந்ததாக காயத்ரி மந்திரம் கருதப்படுகிறது. வேதத்தில் இருந்து வந்த, அனைவருக்கும் பொதுவான மந்திரம் காயத்ரி மந்திரம். இந்த மந்திரமானது, விஸ்வாமித்திர மகரிஷியால் கண்டறியப்பட்டது. மற்ற ரிஷிகளைப் போலன்றி, க்ஷத்திரிய குலத்தில் பிறந்து, தனது கடும் தவத்தால் பிரம்மரிஷி அந்தஸ்தைப் பெற்றவர் விஸ்வாமித்திரர். இவர் சூரிய பகவானை நோக்கித் தவம் புரிந்து, உலக நன்மைக்காக இந்த காயத்ரி மந்திரத்தை வெளிப்படுத்தினார். காயத்ரி மந்திரம் மிக அதிக சக்தி கொண்டது. அதிர்வுகள் மூலம் ஆக்கப்பூர்வ சக்தியினை ஏற்படுத்தும் திறன் கொண்டது. வேதங்களின் தாய்தான் காயத்ரி தேவி. இம்மந்திரம் சொல்லப்படும் இடங்களில் எல்லாம் இந்த காயத்ரி தேவி இருப்பாள். அறிவுக்கண்ணை திறந்து ஞானம், புத்தி கூர்மை, மன அமைதி மற்றும் ஆன்மீக ஆற்றலைத் தரக்கூடிய சக்தி கொண்ட காயத்ரி மந்திரத்தை ஒருமுகப்பட்ட மனதுடன் உச்சரித்து வழிபடும் ஆன்மிக பயிற்சியானது காயத்ரி ஜெபம் எனப்படுகிறது. காயத்ரி மந்திரத்தின் மகிமை குறித்து சமஸ்கிருதத்தில் "காயந்தம் த்ராயதே இதி காயத்ரி" என்ற வாசகம் உள்ளது. அதாவது, தன்னை உச்சரிப்பவரைப் பாதுகாப்பது காயத்ரி எனப்படும். காயத்ரி மந்திரம்: “ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ நஹ் ப்ரசோதயாத்” பொருள்: பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைத்த, ஒளிவீசும் சூரிய பகவானின் பரம்பொருளை நாங்கள் தியானிக்கிறோம். அவர் எங்களது புத்தியை நல்வழியில் செலுத்துவாராக. ஜெபம் செய்யும் நேரம் மற்றும் திசை காயத்ரி ஜெபத்தை 'திரிகால சந்தியா' வேளைகளில் (மூன்று சந்திப்புகளில்) செய்வது சிறந்தது. 1. காலை (பிரம்ம முகூர்த்தம்): சூரிய உதயத்திற்கு முன் கிழக்கு நோக்கி அமர்ந்து செய்ய வேண்டும். 2. மதியம்: உச்சி வேளையில் (நண்பகல்) வடக்கு நோக்கி அமர்ந்து செய்ய வேண்டும். 3. மாலை: சூரிய அஸ்தமனத்திற்கு முன் மேற்கு நோக்கி அமர்ந்து செய்ய வேண்டும். காயத்ரி ஜெபம் செய்யும் முறை குளித்து முடித்து, தூய்மையான ஆடை அணிந்து, பாய் அல்லது கம்பளத்தின் மீது பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமர வேண்டும். உடலையும் மனதையும் தூய்மைப்படுத்த ஆசமனம் செய்து, எளிய மூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) மூலம் மனதை ஒருமுகப்படுத்த வேண்டும். மன அமைதி, புத்தி தெளிவு மற்றும் ஆன்மீக நலனுக்காக இந்த ஜெபத்தைச் செய்வதாக மனதில் உறுதி ஏற்க வேண்டும். அதன்பின் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கவேண்டும். பொதுவாக 108 முறை அல்லது குறைந்தபட்சம் 28 முறை உச்சரிப்பது வழக்கம். ஆவணி அவிட்டம் போன்ற சிறப்பு நாட்களில் 1008 முறை காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பார்கள். உச்சரிக்கும் முறை மந்திரத்தை உரக்கக் கத்தாமல், உதடுகள் லேசாக அசையும் வகையில் மிக மெதுவாகவும், தியான நிலைக்குச் செல்லும்போது மனதிற்குள்ளேயே சொல்வதும் (மானஸிக ஜபம்) மிக உன்னதமான பலனைத் தரும். எண்ணும் முறை கை விரல் ரேகை மற்றும் கணுக்களைப் பயன்படுத்தியோ (கர மாலை) அல்லது துளசி/ருத்ராட்ச மாலையைப் பயன்படுத்தியோ எண்ணிக்கையை சரியாக கணக்கிடலாம். காயத்ரி ஜெபத்தின் நன்மைகள் மன அழுத்தம் நீங்கி மன அமைதியும், ஆழ்ந்த கவனமும் உண்டாகும். நேர்மறை எண்ணங்கள் பெருகும்; தீய எண்ணங்கள் அழியும். முகத்தில் ஒரு தேஜஸும் (வசீகரமும்), பேச்சில் தெளிவும் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றலும், கற்கும் திறனும் கூடும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/devotional/the-gayatri-mantra-that-bestows-immense-power




