சென்னை, வாணியம்பாடியில் ஜீவானந்தம் சிலை குப்பையில் வீசப்பட்டுள்ளது, புதிய சிலையை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறுவ வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:- ஜீவானந்தம் வாணியம்பாடியில் பொதுவுடைமை பிதாமகன் ஐயா ஜீவானந்தம் மார்பளவு சிலை குப்பையில் வீசப்பட்டுள்ளது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. வாழ்நாள் முழுவதும் மண்ணுக்கும் மக்களுக்குமாக வாழ்ந்து மறைந்த மகத்தான தலைவரின் சிலையை அலட்சியமாக குப்பையில் வீசியுள்ள செயல் வன்மையான கண்டனத்துக்குரியது. நாட்டு விடுதலைக்கு போராடி சிறையில் வதைப்பட்ட வீரர், பொதுவுடைமை தத்துவத்தை தமிழ்நாடு முழுவதும் விதைத்த போற்றுதற்குரிய பெருமகன் நம்முடைய ஐயா ஜீவானந்தம். தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்த பெருந்தகை. சுடுகாட்டில் கூரையமைத்து, இடுப்பில் கட்டிய ஒற்றை வேட்டியோடு, ஒழுகும் குடிசையில் புத்தகங்களின் நடுவே உண்மையும், எளிமையும், நேர்மையுமாக வாழ்ந்து மக்கள் தொண்டாற்றிய பெருந்தமிழர். அப்பழுக்கற்ற பொதுவாழ்விற்கும், தூய அரசியல் மாண்பிற்கும் மறுவடிவமாக வாழ்ந்து மறைந்த ஐயா ஜீவானந்தம் சிலையை குப்பையில் வீசியுள்ளது ஏற்க முடியாத பெருங்கொடுமையாகும். தமிழ்நாடு அரசு இதனை வேடிக்கைப் பார்ப்பது வெட்கக்கேடானது. இதுதான் நாட்டிற்கு உழைத்த மாபெரும் தலைவருக்கு தவெக அரசு காட்டும் நன்றியா? செலுத்தும் மரியாதையா? புதிய சிலை நாட்டின் போற்றுதற்குரிய தலைவர் பெருமக்களில் ஒருவரான ஐயா ஜீவானந்தம் அவர்களின் 119வது பிறந்த நாள் வருகின்ற 21.08.2026 அன்று கொண்டாடப்படவுள்ள நிலையில், அவருடைய சிலையைக் குப்பையில் வீசியவர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதோடு, புதிய சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/jeevanandams-statue-dumped-in-the-trash-in-vaniyambadi-a-new-statue-must-be-installed-at-the-same-spot-seeman




