பெரம்பலூர், பெரம்பலூரில் உள்ள டீக்கடையில் சிலிண்டர் வெடித்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. சிலிண்டர் வெடித்தது பெரம்பலூர் காமராஜர் வளைவு போக்கு வரத்து சிக்னல் அருகே குறிஞ்சி நகரை சேர்ந்த அருணாச்சலம் என்பவர் நடத்தி வந்த டீக்கடையில் கடந்த 11-ந்தேதி கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 4 பெண்கள் உள்பட 16 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். மேலும், டீக்கடை அருகே நிறுத்தப்பட்டிருந்த 17 மோட்டார் சைக்கிள்களும் சேதம் அடைந்தன. படுகாயமடைந்தவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த பொம்மனப்பாடியை சேர்ந்த கார் டிரைவர் மணிகண்டன் கடந்த 13-ந்தேதியும், டீ மாஸ்டர் சிறுகுடலை சேர்ந்த தினேஷ்குமார், பெரம்பலூர் ரெங்கா நகரை சேர்ந்த சகாதேவன் ஆகியோர் கடந்த 15-ந்தேதியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். டீக்கடை ஊழியர் சாவு இந்த நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டீக்கடை ஊழியரான ஆலத்தூர் தாலுகா, கொட்டரை கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (வயது 50) நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் டீக்கடையில் சிலிண்டர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. மீதமுள்ள 12 பேருக்கு மருத்துவமனைகளில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/death-toll-rises-to-4-in-perambalur-tea-shop-cylinder-explosion




