சென்னை, பகவான் கிருஷ்ணரின் அவதார தினம் கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்ற பெயர்களில் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி, ரோகிணி நட்சத்திரம் கூடிய தினத்தில் பகவான் கிருஷ்ணர் அவதரித்ததாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. இதனால் அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்த நாளிலேயே கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் வழக்கம் உள்ளது. இந்நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- சீமான் வாழ்த்து “மாயோன் மேய காடுறை யுலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே” என்று பகுத்துப் பாடிய தொல்காப்பியர் கூற்றிற்கேற்ப, தமிழினத்தினுடைய, முல்லை நிலத்தின் இறைவனாகவும், ஆயர் குலத்தின் தலைவனாகவும் இருக்கிற எம்மின இறை மாயோனுடைய பெரும்புகழைப் போற்றுகிற நாள் இன்று. முதல் திணையான குறிஞ்சி நிலத்திற்கும், மூன்றாம் திணையான மருத நிலத்திற்கும் இடையில் முல்லை நிலத்தில் வாழ்ந்ததால் நாங்கள் ‘இடையர்கள்’ என்று அழைக்கப்பெற்றோம். அது காரணப்பெயர் தானே தவிர, எங்களின் குடிப்பெயர் ‘கோன்’, ‘ஆயர்’ என்பது தான். முதலில் ‘கோன்’ என்பது முல்லை நிலத்தின் தலைவன் கையில் பெரிய கோலை ஏந்தி நின்றதால் நாங்கள் ‘கோன்’ என்று அழைக்கப்பெற்றோம். பிற்காலத்தில் அது அரசன் கையில் செங்கோலாக மாறியது. ‘வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோல் உயரும், கோல் உயரக் கோன் உயர்வான்’ என்று பாடலே உள்ளது. ‘கோன்’ என்றால் மன்னன் என்று பொருள். ஆடு, மாடுகளை மேய்க்கும் வேலையை செய்ததால், நாங்கள் ‘மேய்ப்பர்கள்’, ‘ஆயர்கள்’ என்று அழைக்கப்பெற்றோம். முதன்முதலாக தோன்றியது எழுத்தல்ல, எண் தான். ஆடு, மாடுகளை எண்ணுவதற்காக நாங்கள் எண்களை கண்டுபிடித்தோம். எங்கள் தமிழர் மறை, வள்ளுவப் பெருமகனார் தந்தருளிய வாழ்க்கை நன்னெறியில் கூட, ‘எழுத்தென்ப ஏனை எண்ணென்ப’ என்று பாடாமல் “எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு” என்று எண்ணை முதலில் வைத்து தான் பாடுகிறது. அப்படி பெருமைப்பட வாழ்ந்த ஒரு இனத்தின் மக்கள் நாங்கள்.” ‘மாயோன் பெருவிழா’ “எங்கள் மாயோன் பிற்காலத்தில் ‘கண்ணன்’,’திருமால்’, ‘பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார். அதில் ‘மால்’ என்றால் ‘கருப்பு’ என்று பொருள். கருகருவென்று மேகம் கூடி மழையை பொழிந்துவிட்டு மாயமாக மறைந்துவிடுவதனால், மாயவன், மாயோன் என்று அழைத்து நாங்கள் வணங்கத் தொடங்கினோம். எனவே, நாங்கள் வணங்கும் தெய்வத்தை மரியாதையோடு அழைக்க வேண்டும் என்று கருதியதனால் ‘திருமால்’ என்றும், பின்னாட்களில் அதுவே ’பெருமாள்’ என்றெல்லாம் அழைக்க காரணம். ஆரியர்களின் வருகைக்கு பிறகு அதுவே கிருஷ்ணராகி, கிருஷ்ண பரமாத்மாவாக மாறிவிட்டது. ஆனாலும், தமிழ் பிள்ளைகள் நாங்கள் வரலாற்றின் தொன்மத்திலிருந்து தழைக்க விரும்புவதால், ‘மாயோன் பெருவிழா’ என்று கொண்டாடி வருகிறோம். உலகத்தமிழர்கள் அனைவருக்கும் மாயோன் பெருவிழா வாழ்த்துகளைத் தெரிவித்துகொள்கிறேன். எங்கள் இறைவன், ஆயர்குல தலைவன், ‘மாயோன்' பெரும்புகழ் போற்றி! போற்றி!’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/mayon-grand-festival-greetings-to-all-tamils-across-the-world-seeman




