மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் 10-ம் நாள் விழாவில் விறகு விற்ற லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர் காட்சி அளித்தார். ஆவணி மூலத்திருவிழா மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி மூலத்திருவிழாவில் திருவிளையாடல் லீலை நடைபெறும் முக்கிய உற்சவம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு லீலை தொடர்பான அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர் அருள்பாலிக்கிறார். கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை, நாரைக்கு முக்தி கொடுத்தல், மாணிக்கம் விற்ற லீலை, தருமிக்கு பொற்கிழி வழங்கிய லீலை, உலவாக்கோட்டை அருளிய லீலை, பாணனுக்கு அங்கம் வெட்டுதல் லீலை, வளையல் விற்ற லீலை, நரியை பரியாக்கிய லீலை, பிட்டுக்கு மண் சுமந்த லீலை ஆகிய நிகழ்வுகளைத் தொடர்ந்து 10-ம் நாளான நேற்று விறகு விற்ற லீலை நடைபெற்றது. விறகு விற்ற திருவிளையாடலை சித்தரிக்கும் வகையில், நேற்று மாலையில் சுந்தரேஸ்வரரின் தலையில் தங்க விறகு கட்டு வைத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விறகு விற்ற திருக்கோலத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் காட்சி அளித்தார். மீனாட்சி அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். விறகு விற்ற திருவிளையாடல் பற்றி பட்டர்கள் நடித்து காண்பித்தனர். அதை தொடர்ந்து சுவாமி, அம்மன் தங்க சப்பரங்களில் எழுந்தருளி ஆவணி வீதிகளை வலம் வந்தனர். திருவிளையாடல் லீலை சிவபெருமான் விறகு விற்பவர் போன்று வந்தது பற்றிய புராண வரலாறு வருமாறு:- வரகுணன் என்ற பாண்டிய மன்னன் மதுரையை ஆட்சி செய்த காலத்தில் ஏமநாதன் என்னும் புலவன் பாண்டிய நாட்டுக்கு வந்தான். யாழ் வாசிப்பதில் வல்லவனான அவன், அரசன் முன் யாழ் மீட்டி பாடினான். அவனது இசையில் மயங்கிய மன்னர், புலவர் ஏமநாதனை பாராட்டினார். இதனால் ஏமநாதனும், அவனது சீடர்களும் மிகவும் கர்வம் அடைந்தார்கள். மேலும் பாண்டிய நாட்டில் என்னுடன் போட்டியிட்டு பாட யாராவது உள்ளார்களா என ஆணவத்துடன் ஏமநாதன் சவால் விட்டான். அவனை எதிர்த்து போட்டியிட அரசவை புலவர்கள் யாரும் முன்வரவில்லை. எனவே, பாண்டிய மன்னன், பக்தி பாடல்களை பாடி சிவத்தொண்டு புரிந்த பாணபத்திரர் என்ற புலவரை அழைத்து ஏமநாதனுடன் போட்டியிட்டு பாட பணித்தார். பாட்டுப்போட்டியில் தோற்றால் பாண்டியநாடு ஏமநாதன் இசைக்கு அடிமை என்ற இழிச்சொல் தன்னால் வந்துவிடக்கூடாது என பாணபத்திரர் கலங்கினார். தெருவெங்கும் ஏமநாதனின் சீடர்கள் நடத்திய யாழிசையை கேட்ட பாண பத்திரர், ஏமநாதனை வெல்லும் வழி அறியாமல் சோமசுந்தரரை வேண்டி நின்றார். புலவரின் கர்வத்தை அடக்கிய சிவபெருமான் இறைவனும் அவரது கலக்கத்தை போக்குவதற்காக விறகு விற்பவராக ஒரு யாழை எடுத்துக்கொண்டு ஏமநாதன் தங்கியிருந்த மாளிகையின் திண்ணையில் அமர்ந்து யாழ் வாசித்து பாடினார். அந்த தெய்வ கானத்தை கேட்ட ஏமநாதன், வெளியே வந்து விறகு விற்பவரை பார்த்து நீ யார் என்று கேட்டார். அதற்கு, பாணபத்திரரால் பாட்டு வரவில்லை என்று ஒதுக்கப்பட்ட சீடர்களில் ஒருவர் என்று கூறினார் இறைவன். ஒதுக்கப்பட்ட சீடருக்கே இவ்வளவு திறமை என்றால் தன்னால் பாணபத்திரரை வெல்ல முடியாது என அஞ்சிய ஏமநாதன், இரவோடு இரவாக மதுரையை விட்டே சென்றதாகவும், அவரது கர்வம் அழிந்ததாகவும் புராண வரலாறு கூறுகிறது. விழாவில் இன்று சட்டத்தேர் வீதி உலாவும், இரவு சப்தாவரணத்தில் சுவாமியும் அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்வும் நடைபெறும். நாளை தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/devotional/madurai-meenakshi-amman-temple-aavani-moolam-festival-viragu-vitra-leelai




