திருப்பரங்குன்றம் Files ஊடகவியலாளர் ‘அறக்கலகம்’ தவம் மற்றும் தமிழ்தாசன் இணைந்து தயாரித்து இயக்கிய ஆவணப்படம் 'திருப்பரங்குன்றம் Files'. திருப்பரங்குன்றம் மலை, முருகன் கோயில், தர்கா என ஆவணத்தில் இருக்கும் தகவல்களையும், இந்து - முஸ்லிம் ஒற்றுமையை விவரிக்கும் தமிழ்நாட்டின் நல்லிணக்க நிகழ்வுகள் அதில் விவரிக்கப்பட்டிருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் அப்போதைய அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் முன்னிலையில் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து யூடியூப் சேனலிலும் அந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டு இதுவரை 1,64,000-க்கும் மேற்பட்டோர் பார்த்திருக்கின்றனர். திருப்பரங்குன்றம் இதற்கிடையில், கடந்த மே மாத இறுதியில் புதுக்கோட்டையில் 'வீதி' கலை இலக்கியக் களம், இந்த ஆவணப்படத்தை திரையிட திட்டமிட்டது. அப்போதே காவல்துறையினர் நிகழ்வு நடைபெறும் இடத்துக்கு வந்து, `மேலிட உத்தரவு... ஆவணப்படத்தை திரையிடக் கூடாது' எனத் தடுத்தனர். ஆனால் இன்றுவரை அந்த மேலிடம் யார் என்றக் கேள்விக்கு விடை இல்லை. அப்போதே, தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகவியலாளர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்தும் ஆளும் அரசு மீதான கண்டனமும், விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. திரையிடலும் - தடையிடலும்! இந்த நிலையில், நேற்று, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள Four Frames Preview Theatre -ல், தமிழ்நாடு டிஜிட்டல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் (TNDJU) ஒருங்கிணைப்பில் திருப்பரங்குன்றம் Files ஆவணப்படத்தின் சிறப்புக் திரையிடல் மற்றும் கருத்துப் பகிர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி, சிபிஎம் கனகராஜ், நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவருமான கருணாஸ், நடிகர் சத்யராஜ், வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் ஆகியோர் பங்கேற்கவிருந்தனர். ஆனால் நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் இடத்தை முற்றுகையிட்டு காவல்துறைப்படை வந்து இறங்கியிருக்கிறது. அதைத் தொடர்ந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. காவல்துறையினரின் ஒரு பகுதி எனவே, இதற்கிடையில் என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள ஆவணப்படத்தின் இயக்குநர் தவத்தை தொடர்புகொண்டு விசாரித்தோம். ``மதியம் வரை எந்தப் பிரச்னையும் இல்லாத சூழலில், ஒருங்கிணைப்பாளரிடம் படத்தின் பென்டிரைவை வழங்குவதற்காகத் திரையரங்கிற்குச் சென்றேன். அப்போது, இந்து முன்னணி அமைப்பிலிருந்து திரையரங்க மேலாளருக்குத் தொடர்ச்சியாக மிரட்டல் போன் கால்கள் வந்துகொண்டே இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த திரையரங்கு நிர்வாகம், காவல்துறையைத் தொடர்பு கொண்டது, காவல்துறை தரப்பிலிருந்து, `அனுமதி தரவும் முடியாது, அனுமதி இல்லை என்றும் சொல்ல முடியாது, நீங்களே சமாளித்துக் கொள்ளுங்கள்' என மழுப்பலாகப் பதிலளித்தனர். மேலிட உத்தரவு இல்லாம... இந்த சூழலில், ஒருங்கிணைப்பாளர்கள் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்குச் சென்று பேசியபோது, அங்குள்ள காவல் ஆய்வாளர், `மேலிடத்து உத்தரவு இல்லாமல் அனுமதி தர முடியாது சார்... அங்க பிரச்னை நடந்தால் சிக்கலாகிடும்' என்று கூறியுள்ளார். அதே நேரம், சுமார் 12 பேர் கொண்ட இந்து முன்னணி அமைப்பினர் திரையரங்கிற்கே நேரடியாக வந்து, `இந்த ஆவணப்படத்தை தமிழகத்தில் எங்குமே திரையிட விடமாட்டோம். மீறித் திரையிட்டால் மாலையில் தியேட்டரை முற்றுகையிடுவோம்' என்று தியேட்டர் உரிமையாளர்களை மிரட்டி, ஒரு கடிதத்தையும் கொடுத்தனர்" எனக் கூறி, அந்தக் கடிதத்தை நமக்கும் அனுப்பிவைத்தார். இந்து முன்னணியின் மத்திய சென்னை மாவட்ட துணை தலைவர் ர.முனுசாமி (எ) மாலி என்பவரின் கையெழுத்திட்ட அந்தக் கடிதம் இது... இந்து முன்னணி கடிதம் `சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தங்களது நிறுவனத்தில் இருந்து இன்று மாலை 6:00 மணி அளவில் திருப்பரங்குன்றம் பைல்ஸ் என்ற பெயரில் ஆவணத் திரைப்படம் வெளியிடப்படுவதாகவும், அதில் தமிமுன் அன்சாரி, கருணாஸ், கம்யூனிஸ்ட் கனகராஜ், சத்யராஜ் போன்ற பலர் கலந்து கொள்வதாகவும் தெரிய வருகிறது இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டால் சமூகத்தில் மதரீதியான பதட்டத்தை ஏற்படுத்திவிடும் என அச்சப்படுகிறோம். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்பவர்கள் பலர் ஹிந்து மத விரோதிகளாக அறியப்படுபவர்களாக இருக்கிற காரணத்தினால், இந்த திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்படம் வெளியிட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் இந்த ஆவணப் படத்தை வெளியிட தடை விதித்து மத நல்லிணக்கத்தையும் சமூக பதட்டத்தையும் சட்டம் ஒழுங்கையும் பேணிக் காத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறது. திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட இயக்குநர் தவம்காவல்துறை குவிப்பு! தொடர்ந்து பேசிய இயக்குநர் தவம், ``மிரட்டல் மற்றும் போலீசாரின் ஒத்துழைப்பின்மை காரணமாக, மாலை 4 மணியளவில் நிகழ்ச்சியை ரத்து செய்வதாக ஒருங்கிணைப்பாளர்கள் முடிவு செய்தனர். ஏறத்தாழ 160 பேர் முன்பதிவு செய்திருந்த நிலையில், அவர்கள் தற்காலிகமாகத் திருப்பி அனுப்பப்பட்டனர். ஆனால், நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகும், மாலை 4 மணிக்கு மேல் திரையரங்கைச் சுற்றி 150 முதல் 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் 'வஜ்ரா' (Vajra) கலவர தடுப்பு வாகனங்கள் குவிக்கப்பட்டன. நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதை உறுதி செய்த பிறகும், இவ்வளவு பெரிய போலீஸ் படை அங்கு குவிக்கப்பட்டது ஒருங்கிணைப்பாளர்களுக்கே பெரும் வியப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. மத நல்லிணக்கப் படத்திற்குச் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக் கூறி படத்தை நிறுத்தக் காரணமானவர்கள் மீது எப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்து, சி.எஸ்.ஆர் (CSR) ரசீது வழங்குமாறு ஒருங்கிணைப்பாளர்கள் நுங்கம்பாக்கம் போலீசாரிடம் புகார் அளித்தனர். ஆனால், போலீசார் அதை வாங்க மறுத்து, ``மேலிடத்தில் கேட்டுவிட்டு நாளை சொல்கிறோம்" எனக் கூறிவிட்டனர். ஏற்கெனவே புதுக்கோட்டையிலும் இதேபோல 'மேலிடத்து உத்தரவு' எனக் கூறி படம் தடுக்கப்பட்டதை ஒருங்கிணைப்பாளர் சுட்டிக்காட்டினார். ஒரு கும்பலின் மிரட்டலுக்கு அரசோ, காவல்துறையோ இப்படிப் பயந்து நடுங்குவது சரியல்ல. அடுத்த வாரத்தில் திரையரங்கமோ அல்லது ஒரு பொது மண்டபமோ பிடித்து, உரிய பாதுகாப்புடன் கண்டிப்பாக இந்த ஆவணப்படம் திரையிடப்படும்." என உறுதியான குரலில் தெரிவித்தார். கனகராஜ் சிபிஎம்காவல்துறை நினைத்தால்... இந்த விவகாரம் குறித்து, சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜிடம் பேசியபோது, ``திருப்பரங்குன்றம் Files ஆவணப்படம் சட்டம்-ஒழுங்கு அல்லது மத நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் எடுக்கப்படவில்லை என்பதைப் படம் பார்த்தவர்கள் உறுதிப்படுத்துகின்றனர். ஒருவேளை ஆவணப்படத்தில் தவறான தகவல்கள் ஏதேனும் இருந்தால், அரசு முறையான காரணங்களைக் கூறி அதைத் தடை செய்யலாம். ஆனால், எந்த ஒரு நியாயமான காரணமும் இன்றி, ஒரு சில அமைப்புகள் மிரட்டல் விடுக்கின்றன என்பதற்காகவே திரையிடலைத் தடுப்பது என்பது ரவுடித்தனமான போக்கு. ஒரு படம் சமூகப் பதற்றத்தை உருவாக்கும் என்று காவல்துறை நினைத்தால், அவர்கள் சுயசார்பாக நடவடிக்கை எடுக்கலாமே தவிர, தியேட்டர்களை மிரட்ட அனுமதிப்பதும், பெரும் போலீஸ் படையைக் குவித்து மக்களை உள்ளே விடாமல் தடுப்பதும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. முதல்வர் விஜய் ஒரு படம், ஒரு கூட்டம் அல்லது ஒரு எழுத்தை முறைப்படி தடை செய்வது என்பது அரசின் கொள்கை சார்ந்த விஷயமாகும். காவல்துறை இதுபோன்ற பெரிய முடிவுகளை எடுக்கும்போது, நிச்சயமாக உளவுத்துறை, உள்துறைச் செயலாளர், டி.ஜி.பி அல்லது சென்னை காவல் ஆணையர் போன்ற உயர் அதிகாரிகளின் ஆலோசனையோ அல்லது அனுமதியோ இல்லாமல் இந்தத் தடையை ஏற்படுத்தியிருக்க வாய்ப்பில்லை. மிரட்டல்களுக்குப் பயந்து படத்தைத் தடுக்கும் இந்த விஷயத்தில், தற்போதைய ஆளும் அரசு உறுதியான ஒரு முடிவை எடுக்காமல் மௌனம் காப்பது சரியல்ல. தமிழக அரசின் செயல்பாடு சரியில்லை இதேபோன்று தொப்பளாக்கரை கிராமத்தில், ஒரு பொதுச் சுவரில் சாதி வாரியாகத்தான் சாமி கும்பிட வேண்டும் என எழுதப்பட்டிருந்தது. இதை எதிர்த்து தாசில்தார் உத்தரவிட்டும், மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டும் எந்த மாற்றமும் வரவில்லை. இதுகுறித்து கள ஆய்வு செய்யச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் குருசாமி, மாதர் சங்க மாநிலச் செயலாளர் ராதிகா மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி ஆகியோரைச் சுமார் 150-க்கும் மேற்பட்ட போலீசார் திரண்டு வந்து கிராமத்திற்குள் நுழைய விடாமல் தடுத்துள்ளனர். ஒரு போராட்டத்திற்கு அனுமதி மறுப்பது வேறு, ஆனால் மக்கள் பிரதிநிதிகளையும் அமைப்புகளையும் ஒரு ஊருக்குள்ளேயே போகவிடாமல் தடுப்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். திருப்பரங்குன்றம் Files புதுக்கோட்டையில் நடந்தது போலவே தற்போதும் தியேட்டர்களை மிரட்டிப் படங்களை முடக்கும் போக்குத் தொடர்கிறது. தனியார் திரையரங்குகள் என்பதால் மிரட்டல்களுக்கு அஞ்சி அவர்கள் பின்வாங்குகிறார்கள். ஆனால், அரசு நினைத்தால் உரிய பாதுகாப்பு வழங்கி நிகழ்ச்சியை நடத்த வைத்திருக்க முடியும். இத்தகைய கருத்துரிமைப் பறிப்புச் சம்பவங்களில் தமிழக அரசின் தற்போதைய அணுகுமுறையும், காவல்துறையின் செயல்பாடும் சரியானதாக இல்லை. இதில் அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும்." என வலியுறுத்தினார். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஜனநாயகம் துடிப்போடு இருக்க வேண்டுமானால் மாற்றுக்கருத்துக்களும், நல்லிணக்கப் படைப்புகளும் தடையின்றி மக்களைச் சென்றடைய வேண்டும். ஒரு படைப்பில் சட்டவிரோதமான அல்லது வெறுப்பைத் தூண்டும் கருத்துக்கள் இருந்தால், அதை சட்டப்பூர்வமாக நீதிமன்றம் மூலமாகவோ அல்லது தணிக்கை வாரியம் மூலமாகவோதான் எதிர்கொள்ள வேண்டும். அதை விடுத்து, 'மிரட்டல்களுக்குப் பணிந்து' தடையை ஏற்படுத்துவது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமைக்குச் செய்யும் பின்னடைவாகவே அணுக வேண்டியிருக்கிறது. எல்லாம் சரி... அன்று புதுக்கோட்டையில் தொடங்கிய 'யார் அந்த மேலிடம்?' என்ற கேள்வி சென்னை வள்ளுவர் கோட்டத்திலும் தொடர்ந்து ஒலிக்கிறதே.... யார்தான் அந்த மேலிடம்? திருப்பரங்குன்றம் Files: ``அந்த 'மேலிட உத்தரவு' யாருடையது?"- எழும் கேள்வியும் காவல்துறையின் பதிலும்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/police-denying-the-screening-of-the-documentary-thiruparankundram-files




