Article complet
தமிழ்நாட்டில் துணை ஆட்சியர் , துணைக் காவல் கண்காணிப்பாளர், கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர் போன்ற உயரிய அரசுப் பதவிகள் குரூப் 1 தேர்வு மூலமாகவே நிரப்பப்படுகின்றன. இந்த உயர் பதவிகளில் பெரும்பாலான இடங்கள் (சுமார் 90%) பதவி உயர்வு மூலமாகவே நிரப்பப்படுவதால், மீதமுள்ள 10 சதவீத இடங்கள் மட்டுமே டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனமாக மேற்கொள்ளப்படுகின்றன. டிஎன்பிஎஸ்சி தேர்வு (கோப்புப்படம்) குறைந்த பணியிடங்கள் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளின்படி 33 சதவீத இடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்ற விதி இருந்தாலும், தற்போது நடைமுறையில் உள்ள 10 சதவீத இடங்கள்கூட முழுமையாக நிரப்பப்படுவதில்லை என்று தேர்வர்கள் நீண்ட நாட்களாகக் குமுறி வருகின்றனர். இந்தச் சூழலில், 2026-ஆம் ஆண்டிற்கு வெறும் 26 காலிப் பணியிடங்களை மட்டுமே டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்திருப்பது தேர்வர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வெறும் 26 காலிப்பணியிடங்கள்..! இதில் குறிப்பாக 2 துணை ஆட்சியர்கள், 8 மாவட்டப் பதிவாளர்கள், 3 கூட்டுறவுத் துணைப் பதிவாளர்கள் என மிகக் குறைந்த எண்ணிக்கையிலான இடங்களே ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுகளின் தரவுகளைப் பார்க்கும்போது, 2019-ல் 181 இடங்களும், 2024-ல் 90 இடங்களும், கடந்த 2025-ஆம் ஆண்டில் 78 இடங்களும் நிரப்பப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள 26 என்ற எண்ணிக்கையானது கடந்த பத்தாண்டுகளின் ஆண்டு சராசரியில் பாதியை விடக் மிகக் குறைவாகும். ஆதில் பெய்க் வேதனையில் தேர்வர்கள் ஆண்டுதோறும் சுமார் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் தேர்வர்கள் இந்த உயரிய பதவிகளுக்காகத் தங்களைத் தயார் செய்து தேர்வு எழுதும் நிலையில், வெறும் 26 பேருக்கு மட்டுமே வேலை என்பது தங்களின் உழைப்பிற்கு இழைக்கப்படும் அநீதி என்று தேர்வர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் குறைந்த காலிப்பணியிடங்களை அறிவிப்பதால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்று கல்வியாளரும், சிவில் சர்வீஸஸ் தேர்வு பயிற்சியாளருமான ஆதில் பெய்க்கிடம் விசாரித்தோம். லட்சக்கணக்கான தேர்வர்களின் அர்ப்பணிப்பு இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அவர், "ஆண்டுதோறும் தங்களின் அரசுப் பணி கனவுக்காக வேலையை விட்டுவிட்டு லட்சக்கணக்கான தேர்வர்கள் முழுநேரமாகத் தங்களை அர்ப்பணித்துப் படித்து வருகிறார்கள். கடந்த காலங்களில் 90, 70 என இருந்த குரூப் 1 பணியிடங்களின் எண்ணிக்கை, தற்போது வெறும் 26 ஆகக் குறைந்திருப்பது தேர்வர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வு (கோப்புப்படம்) இடஒதுக்கீடு தமிழகத்தில் அமலில் இருக்கும் 69% இடஒதுக்கீட்டு முறையின் கீழ் பிசி, எம்பிசி, பிசிஎம், எஸ்சி, எஸ்டி, அருந்ததியர் எனப் பெரும்பாலான சாதியினருக்குள் உள் ஒதுக்கீடுகள் நடைமுறையில் உள்ளன. இது தவிர, பெண்களுக்கு 33% இடஒதுக்கீடும், தமிழ் வழியில் படித்தவர்களுக்கான பிஎஸ்டிஎம் சிறப்பு இடஒதுக்கீடும் வழங்கப்பட்டு வருகின்றன. இத்தகைய இடஒதுக்கீட்டு கட்டமைப்பில், ஒட்டுமொத்தமாகவே வெறும் 26 சீட்டுகள் மட்டுமே அறிவிக்கப்படும்போது, பல பிரிவினருக்கு ஒரு காலிப்பணியிடங்கள் கூட கிடைக்காத சூழல் உருவாகிறது. உதாரணத்திற்கு, பிசிஎம் (முஸ்லிம்) பிரிவை எடுத்துக் கொண்டால் ஒரு சீட் மட்டுமே வரும். தேர்வர்களுக்கு ஏமாற்றம் அந்த ஒரு சீட்டும் கூட பெண்கள் அல்லது பிஎஸ்டிஎம் பிரிவினருக்குச் சென்றுவிடும் என்பதால், தனிநபர்களுக்கான வாய்ப்பு என்பது பல பிரிவுகளில் முற்றிலுமாக இல்லாமல் போய்விடுகிறது. இது தேர்வுக்காகப் பல வருடங்களாக உழைக்கும் தேர்வர்களைக் கடும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. பொதுவாக, டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாக அனைத்து அரசுத் துறைகளிடமிருந்தும் ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு, காலிப்பணியிடங்களின் விவரங்களை அரசு பெற்று அதை டிஎன்பிஎஸ்சிக்கு அனுப்ப வேண்டும். டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் எழும் கேள்வி! இந்த ஆண்டு பல துறைகளில் அதிக அளவில் ஊழியர்கள் ஓய்வு பெறுவதாகக் கூறப்படும் சூழலில், அனைத்து துறைகளுடனும் முழுமையாகக் கலந்தாலோசிக்காமல், ஒரு சில துறைகளின் காலிப்பணியிடங்களை மட்டுமே வைத்து இந்த 26 பணியிடங்கள் அவசரமாக அறிவிக்கப்பட்டு விட்டதா என்ற பலத்த கேள்வியும் எழுகிறது. மேலும், இந்த ஆண்டு யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு கடினமாக இருந்ததால், மத்திய அரசுப் பணிக்கு முயன்ற பல தமிழக மாணவர்களும் தற்போது குரூப் 1, குரூப் 2 தேர்வுகளை நோக்கித் தங்களின் கவனத்தைத் திருப்பியுள்ளனர். இப்படிப் போட்டி பல மடங்கு அதிகரிக்கும் வேளையில், காலிபணியிடங்கள் சுருங்கியிருப்பது ஒட்டுமொத்த தமிழ்நாடு தேர்வர்களுக்கும் பெரிய பின்னடைவாகும்" என்று பிரச்னைகளை விளக்கினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Article complet — lien ci-dessous


