தென்காசி, சுட்டெரிக்கும் வெயிலால் வரத்து குறைவு காரணமாக தென்காசி மாவட்டம், புளியங்குடி சந்தையில் எலுமிச்சை விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.225 வரை விற்பனையானது. எலுமிச்சை சாகுபடி; விற்பனை தென்காசி மாவட்டத்தில் புளியங்குடி, வாசுதேவநல்லூர், கடையநல்லூர், சொக்கம்பட்டி, புன்னையாபுரம், சிங்கிலிபட்டி, குமந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் எலுமிச்சை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளையும் எலுமிச்சை பழங்கள் புளியங்குடி சந்தைக்கு கொண்டு வரப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் என தினமும் சுமார் 15 முதல் 20 டன் வரை விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. விலை கிடுகிடு உயர்வு தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் எலுமிச்சை பழங்களின் தேவை அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் சுட்டெரிக்கும் வெயில், பலத்த காற்று காரணமாக செடிகளில் இருந்து பழங்கள் உதிர்ந்துவிடுவதால் அதன் வரத்து குறைந்துள்ளது. இதனால் எலுமிச்சை பழங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. புளியங்குடி சந்தையில் கிலோ ரூ.170-க்கு விற்பனை செய்யப்பட்ட எலுமிச்சை பழங்கள் நேற்று கிலோ ரூ.225 வரை விற்பனை ஆனது. தரத்தை பொறுத்து ஒரு எலுமிச்சை பழம் ரூ.10 முதல் ரூ.15 வரை விற்கப்பட்டது. விலை உயர்வால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காரணம் என்ன? எலுமிச்சை பழத்தின் விலை உயர்வு குறித்து வியாபாரிகள் கூறியதாவது: சுபமுகூர்த்தங்கள், அம்மன் கோவில் திருவிழாக்கள் மற்றும் கேரளாவில் ஓணம் பண்டிகை உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் அடுத்தடுத்து வந்ததால் எலுமிச்சைக்கான தேவை அதிகரித்ததாலும் விலை உயர்ந்துள்ளது. கடும் வெயில், பலத்த காற்று வீசுவதும் மற்றொரு காரணமாகும். இனிவரும் நாட்களில் மேலும் விலை உயர வாய்ப்புள்ளது. மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை விலை வீழ்ச்சி மற்றும் விலை ஏற்றம் போன்ற பிரச்சினைகளில் இருந்து விவசாயிகளை பாதுகாக்கும் வகையில், எலுமிச்சை பழங்களை மூலதனமாக கொண்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை இப்பகுதியில் அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/low-supply-in-puliyangudi-lemon-prices-skyrocket-selling-for-rs225-per-kg




