சென்னை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களில் உழவர்கள் வாங்கிய பயிர்க்கடன்கள் சில நிபந்தனைகளுடன் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாக தமிழக அரசு அறிவித்திருக்கும் நிலையில், கடன் பெற்ற விவசாயிகள் அதற்கான தவணைத் தொகையை வட்டியுடன் செலுத்த வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்கள் அறிவிக்கை அனுப்பியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. வறட்சி பாதிப்பால் ஏற்கனவே வாடிக் கொண்டிருக்கும் விவசாயிகளை இத்தகைய அறிவிக்கைகள் மூலம் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்குவது கண்டிக்கத்தக்கது. பயிர்க்கடன் மதுரை மாவட்டம் கள்ளந்திரி பகுதியில் உள்ள பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள் அனைவருக்கும் இந்த அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிவிக்கையில்.’’ அரசால் அறிவிக்கப்பட்ட கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடியை பெறுவதற்கு தகுதி பெற்ற உழவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு, அவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தொகை அரசால் விடுவிக்கப்படும் வரை, கடன் பெற்ற உழவர்கள் தவறாமல் தவணை செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தா விட்டால் அவர்களின் கடன்கள் தவணை தவறிய கடன்களாக கருதப்படும். கடன் தொகை இறுதி செய்யப்பட்டு கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு விடுவிக்கும் போது அந்தத் தொகை சம்பந்தப்பட்ட விவசாயிகளிம் சேமிப்புக் கணக்கில் செலுத்தப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களும் பயிர்க்கடன் பெற்ற உழவர்களுக்கு இதே போன்ற அறிவிக்கையை அனுப்பியுள்ளன. இதனால் உழவர்கள் பெரும் கவலைக்குள்ளாகியுள்ளனர். தமிழ்நாடு அரசின் இந்த நிர்வாக அணுகுமுறை மிகவும் தவறானது. கடன் தொகை தவணை கடந்த காலங்களில் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து சில நாள்களில் அரசாணை பிறப்பிக்கப்படும். அந்த நாளில் உழவர்களின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு விடும். அதற்கான சான்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும். அதனால், உழவர்கள் நிம்மதி அடைவதுடன் அடுத்த பருவத்திற்கு பயிர்க்கடன் பெறுவதற்கும் தகுதி பெறுவார்கள். ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக, அரசு கடன் தொகையை செலுத்தும் வரை விவசாயிகள் கடன் தவணையை வட்டியுடன் செலுத்த வேண்டும் என்பதும், தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகை உழவர்களின் சேமிப்புக் கணக்கில் தான் செலுத்தப்படும் என்பதும் நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்றாகும். பயிர்க்கடன் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தொடக்கம் முதலாகவே நேர்மையுடன் செயல்படவில்லை. சிறு. குறு விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த தவெக, ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.50 ஆயிரம் வரையிலான கடன்கள் மட்டுமே முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது. அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் கடன் தொகையின் அளவை ரூ.75 ஆயிரமாக உயர்த்தியது. இப்போது கடன் தவணையை உடனடியாக செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. நிவாரணம் தமிழக உழவர்கள் ஏற்கனவே வாழ முடியாத அளவுக்கு துயரத்தில் வாடிக் கொண்டிருக்கின்றனர். நடப்பாண்டில் தென் மேற்கு பருவமழை பொய்த்ததால் தமிழ்நாடு முழுவதும் கடுமையான வறட்சி நிலவுகிறது. வறட்சியால் பாதிக்கப்பட்டு, குறுவை சாகுபடி செய்ய முடியாத விவசாயிகளுக்கு அரசுத் தரப்பில் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், அவர்களை பயிர்க்கடன்களை செலுத்தும்படி கட்டாயப்படுத்துவது மனிதநேயமற்ற செயலாகும். தமிழக அரசு மற்றும் கூட்டுறவுத் துறையின் தவறான அணுகுமுறையும், நிர்வாகக் குளறுபடிகளும் தான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம் ஆகும். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டு, உழவர்களிடம் பயிர்க்கடன் தவணைகளைக் கேட்டு தொல்லை கொடுக்கக் கூடாது என கூட்டுறவு சங்கங்களுக்கு ஆணையிட வேண்டும்; கடன் தள்ளுபடி தொகையை உடனடியாக கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி, பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை உழவர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/declare-crop-loan-waivers-and-force-them-to-pay-with-interest-question-by-anbumani-ramadoss




