சட்டசபையில் சைகை தமிழக சட்டசபையில் போலீஸ், தீயணைப்புத்துறைகள் மீதான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு முதல்-அமைச்சர் விஜய் பதிலளித்து பேசினார். அப்போது அவர் ஆவேசமாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக உரையாற்றினார். அவர் பேசுகையில், 'எது பேசினாலும் நாங்கள் (தி.மு.க.) 'மிசா'வை பார்த்தவர்கள் என்று சொல்கிறார்கள். எல்லோருக்கும் 'மிசா' வரலாறு நன்றாக தெரியும்' என்று செய்கை ஒன்றை காண்பித்தார். அவருடைய இந்த செய்கை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டா லினை கேலி செய்வது போன்று அமைந்ததால் தி.மு.க.வின் முன்னணி நிர்வாகிகள் சமூக வலைத்தளங்களின் கண்டன பதிவு வெளியிட்டனர். மு.க.ஸ்டாலினின் 'மிசா' தியாகத்தை முதல்-அமைச்சர் விஜய் தனது செய்கை மற்றும் உடல் மொழி மூலம் கொச்சைப்படுத்திவிட்டார் என்று ஆவேசமாக கூறினர். விஜய் விளக்கம் இதற்கு முதல்-அமைச்சர் விஜய் விளக்கம் அளித்தார். சட்டமன்றத்தில் கடந்த 7-ந்தேதி அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எந்த வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்ப தைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றார். மு.க.ஸ்டாலின் பதிலடி இந்த நிலையில், மிசா காலத்தில் நடந்ததை குறிப்பிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:- என் அன்பான தமிழ் மக்களுக்கு வணக்கம். அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் நடந்த சில சர்ச்சைகள், தமிழ் மக்களுக்கும் நம் உடன்பிறந்தவர்களுக்கும் கோபத்தையும் அதிருப்தியையும் உண்டாக்கியிருப்பதை நான் உணர்கிறேன். அதுவும் இந்த சர்ச்சையில் என்னுடைய சிறை வரலாறும் இருக்கிறதால், அதை பற்றி கொஞ்சம் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தம்பி விஜய் நீங்க சொல்றது உண்மை தான். பொய் எல்லாம் அல்ல. எமெர்ஜென்சில் காலத்தில் அதை எதிர்த்து கலைஞர் மெரினா கடற்கரையில் மிகப்பெரிய கூட்டத்தை கூட்டி மிசா சட்டத்தை கடுமையாக விமர்சித்ததை தொடர்ந்து அப்போது இருந்த ஒன்றிய அரசு 30.01.1976 ஆம் ஆண்டு திமுக ஆட்சியை கலைத்தார்கள். ஆட்சியை கலைத்த அடுத்த நொடி மிசா சட்டத்தில் என்னை கைது செய்வதற்காக கோபாலபுரம் வீட்டிற்கு போலீசார் வந்தார்கள். அன்னைக்கு நான் வீட்டில் இல்லை. பையன் பிரசாரத்திற்கு போய் இருக்கான். நாளை வந்துவிடுவான். வந்ததும் நானே போன் பண்ட்ரேன். வந்து அரெஸ்ட் பண்ணிக்கோங்க என சொன்னார். அடுத்த நாள் போலீசிடம் என்ன கைது செய்ய சொல்லிட்டார். சிறையில் எனக்கு பல கொடுமைகள் நடந்துச்சு. என்னை கொண்டு போய் அடைத்ததே தொழு நோயாளிகள் இருக்கும் இடத்தில் தான். 10 பேரை ஒரு சின்ன அறைக்குள் அடைத்து வைத்தார். அந்த அறைக்குள் ஒரு பானை தான் இருக்கும். அதில் தான் அனைவரும் சிறுநீர் கழிக்க வேண்டும். ரொம்ப துர்நாற்றமாக இருக்கும். இந்த அறையில் தான் நாங்கள் தூங்க வேண்டும். நைட்டில் தூங்க விடாமல் போலீஸ் லத்தியால் அடிப்பாங்க. பூட்ஸ் காலால் மிதிப்பாங்க. இன்னொரு பக்கம் ஆயுள் தண்டனை கைதியை வைத்து கொடூரமாக அடிப்பாங்க. அவங்க அடித்ததில் என் அண்ணன் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்டி பாபு ஜெயிலிலேயே இறந்து போனார். அவங்க அடிச்சதில் என்னுடைய தாடை எலும்பு உடைந்தது. நீங்க கூட இப்படி கை வைத்து தாடையை காண்பீத்தீர்கள் அல்லவா? அது சரிதான். நான் அடி வாங்கிய தழும்புகள் இன்றைக்கும் எனக்கு இருக்கிறது. நான் இல்லை என்று சொல்லவில்லை. யார் என்னை கொச்சைப்படுத்தினாலும், வரலாற்றை மாற்ற முடியாது; அது காலத்துக்கும் அப்படியேதான் இருக்கும். பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு, முக்கியமாக தமிழர்களுக்காக போராடும் நிறைய பேருக்கு இந்த மாதிரி அடக்குமுறை நடந்துள்ளது. போராளிகள் எல்லாம் இதை தாண்டிதான் வந்துள்ளோம். மறந்துட்டீங்களா தம்பி விஜய்? என்னை வீட்டில் வந்து சந்தித்தபோது சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்? தேர்தல் பரப்புரையில் உங்களை மிகவும் விமர்சித்து பேசிட்டேன்; அதற்கு I am sorry சார்ன்னு சொன்னீங்க. அதை நான் மனதில் வைக்கவில்லை; யாரை பற்றி பேசும்போதும் கண்ணியத்துடன் பேசுங்கள் எனக் கூறினேன். அதை மறந்துவிட்டீர்கள்போல: முதல்-அமைச்சருக்கான கண்ணியத்துடன் உங்கள் வார்த்தை. உடல்மொழி இருக்க வேண்டும். நாம்தான் மக்களுக்கு முன்னுதாரணம்: அதை மறந்து விடாதீர்கள்: பொறுப்பை உணர்ந்து செயல்படுங்கள். உண்மை ஊரை தாண்டுவதற்குள் பொய் உலகையே சுற்றிவிடும் என்ற பழமொழிதான் நடக்கிறது. அரசியலுக்காக கலைஞர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் கூறிய பொய் குற்றச்சாட்டையும் தம்பி விஜய்யும் கூறியுள்ளார். முதல்-அமைச்சருக்கு சந்தேகம் இருந்தால் சட்டமன்றத்தில் உள்ள நூலகத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம். அமலாக்கத்துறை எழுதிய கடிதத்தை எடுத்துக்கொண்டு எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு இருப்பதாக சொல்கிறீர்கள். அமலாக்கத்துறை குற்றம்சாட்டிய 95% வழக்குகளில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். பெரும்பாலும் அரசியல் பழிவாங்கலுக்காக அமலாக்கத்துறை வப்படுவது இங்கிருக்கும் எல்லோருக்கும் தெரியும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால். உங்கள் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மீதுகூட அமலாக்கத்துறை பல வழக்குகளை போட்டிருக்கிறது. இதெல்லாம் ஒன்றிய அரசை கொள்கை எதிரியாக சித்தரிக்கும் உங்களுக்கு எப்படி தெரியாமல் போச்சு? தவெக ஆட்சியில் கொலை, பாலியல் குற்றங்கள் என சட்டம் ஒழுங்கு படுகுழியில் உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு என்று ஒரு மாண்பு உள்ளது. சட்டப்பேரவையை ரீல்ஸ் மன்றமாக மாற்றிவிட்டார் முதல்-அமைச்சர் விஜய். தமிழ்நாட்டை முன்னேற்ற விவாதம் செய்யுங்கள் விஜய். சட்டமன்றத்தில் தேவையற்ற சர்ச்சைகளை பேச வேண்டாம் என்பதே என் கோரிக்கை. பரந்தூர் திட்டம் ரத்தால் தமிழக வளர்ச்சியை 15 ஆண்டு பின்னோக்கி கொண்டு போய்விட்டார் விஜய். மாற்றம் வேண்டும் என வாக்களித்தவர்கள் இது சரியான மாற்றமா என சிந்தியுங்கள். விவசாயிகளுக்கு பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை. ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர் என்று வாக்குறுதி அளித்திருந்தார். தற்போது தகுதி உள்ளவர்களுக்கு 3 சிலிண்டர் என அந்தர்பல்டி அடித்துள்ளார். உரிமைத் தொகை ரூ.2,500 என்று விஜய் கூறினார், ஆனால் இன்னும் நாங்கள் கொடுத்த அதே ரூ.1000தான் தருகிறார். இன்னும் பல வாக்குறுதிகள் பற்றி விஜய் வாயையே திறக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார். வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்? — M.K.Stalin (@mkstalin) September 10, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/you-were-right-to-point-to-your-chin-mk-stalins-retort-to-vijay




