சென்னை, நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் தமிழர்கள் உள்பட 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீர்மட்டம் அதிகமாக இருப்பதால் சில பகுதிகளில் ஹெலிகாப்டர்களை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 57 பேர் ராசுவா மாவட்டத்தின் திமுர் பகுதியில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 22 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு நேபாள ராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளர். இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களையும் மீட்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் இன்று காலை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் தமிழ்நாட்டின் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த 57 பேர் உள்பட 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கித் தவிப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கின்றன. வெள்ளத்தில் சிக்கியவர்களில் 57 பேர் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்றவர்கள் ஆவர். அவர்களில் 22 பேர் மீட்கப்பட்டிருப்பதாகவும், மற்றவர்களைப் பற்றிய தகவல் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. நேபாள அரசுடன் தொடர்பு கொண்டு, வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களையும் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அழைத்து வர மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் நேபாள அரசுக்கு தேவையான மீட்பு மற்றும் பிற மனிதநேய உதவிகளையும் மத்திய அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/action-needed-to-rescue-tamils-stranded-in-nepal-floods-anbumani-ramadoss




