ஒரு சாமானியனை, சாதனையாளனாகவும் சிந்தனையாளனாகவும் மாற்றுவது கல்வி. அதனால் தான் நம்முடைய வாழ்வில் சுமார் கால் நூற்றாண்டுக் காலத்தைக் கல்வி நிலையங்களில் அர்ப்பணிக்கிறோம். கல்லாக இருக்கும் மாணவனைக் கூட ஆசிரியரால் சிற்பமாக மாற்றிவிட முடியும். ஒரு மருத்துவரால் மற்றொரு மருத்துவரையோ, ஒரு பொறியாளரால் மற்றொரு பொறியாளரையோ, ஒரு வழக்கறிஞரால் மற்றொரு வழக்கறிஞரையோ உருவாக்க முடியாது. ஆனால் இவர்கள் அனைவரையும் ஆசிரியர் என்ற ஒருவரால் உருவாக்கி விட முடியும். தன் வாழ்நாளில் சொல்லொணா வறுமையை கடந்து குடியரசுத் தலைவரின் பாராட்டைப் பெற்றதுடன், தன் மாணவர்களைப் படிப்பாளிகளாக மட்டுமல்லாமல் படைப்பாளிகளாகவும் மாற்றி வருகிறார் பேராசிரியர் மு. முனீஸ் மூர்த்தி. திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழாய்வுத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் முனைவர். மு. முனீஸ்மூர்த்தி அவர்கள் ஆய்வுக் கட்டுரை எழுதுவதில் கைதேர்ந்தவர். இதுவரை 100 -க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும், 15 நூல்களையும் எழுதியுள்ளார். தமிழ்நாடு அரசின் ' இளம் தமிழ் ஆய்வாளர் விருது', குடியரசு தலைவரின் 'இளம் அறிஞர்' விருது உட்பட 15 விருதுகளையும் பெற்றுள்ளார். தன் மாணவர்களின் படைப்புத் திறமைகளை ஊக்குவித்து படைப்பாளிகளாக மாற்றும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறார். 'பங்கேற்பு தான் முதல் வெற்றி' எனும் மந்திரத்தைத் தன் மாணவர்களின் மனதில் விதைத்து, மற்ற கல்லூரிகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க வைக்கிறார். அவர்கள் எழுதும் படைப்புகளைச் சேகரித்து ஆண்டின் இறுதியில் புத்தகமாக வெளியிடுகிறார். இதனால் பலரும் உற்சாகமடைந்து, படிக்கும் இடத்திலிருந்து படைக்கும் இடத்திற்குத் தங்களை நகர்த்துகிறார்கள். வாரத்தில் ஒரு நாள் வகுப்பு நேரத்தைத் தவிர்த்து இணைய வழியில் மாணவர்களை ஒன்று கூட்டுகிறார். அதில், புத்தகங்களை மதிப்புரை செய்யும் விதமாக 'ஒரு மாணவருக்கு ஒரு நூல்' எனும் அடிப்படையில் அவர்களைப் பேசவைத்துத் தயக்கங்களைத் தகர்த்தெறிகிறார். இதன் வெளிப்பாடாக பேச்சு, கவிதை, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் இந்த மாணவர்கள் பரிசு பெறத் தொடங்கினர். மேலும், இளங்கலைப் படிக்கும்போதே இவரின் மாணவர்களான ரா. ரவி பிரசாந்த் 'வையத் தலைமை கொள்' எனும் கவிதை நூலையும், சக.மானேசா ' அறை எண்:305 ' எனும் சிறுகதை நூலையும், து.பாலசுப்பிரமணி ' ஆய்வு நூலையும் ' இர.எழில் நிலவன் 'மாளிகைமேடு அகழாய்வு' எனும் நூலையும் வெளியிட்டுள்ளனர். இரா. பிரீத்தி எனும் மாணவி, தத்ரூபமாக ஓவியம் வரைவதில் கைதேர்ந்து பரிசுகளைக் குவித்துள்ளார். இதுகுறித்து பேராசிரியர். மு. முனீஸ் மூர்த்தி கூறும் போது, " மாணவர்கள் பட்டப்படிப்பை எளிதில் நிறைவு செய்து விடுவார்கள். ஆனால் போட்டி நிறைந்த உலகில் அவர்கள் வெல்வதற்கு தனித்திறமைகளில் கைதேர்ந்தவர்களாக இருப்பது அவசியமானது. அவர்களிடம் இருக்கும் திறமைகளைக் கண்டறிந்து பாதை காட்டினால் வெற்றிநடைப் போடுவார்கள். மனப்பாடம் செய்து அப்படியே கொட்டுபவர்களாக மாணவர்களை உருவாக்குவது வீணானது. கணினி அறிவும், அடிப்படை ஆங்கில அறிவும், தனித்திறமையும் உள்ளவர்களாக என் மாணவர்களை உருவாக்க வேண்டும் என்பதே என் நோக்கம். ஆசிரியர் வகுப்பில் கண்டிப்பாகவும், வெளியே அவர்களுக்கு உற்ற தோழனாகவும் இருக்க வேண்டும். பாடப் புத்தகங்கள், வகுப்பறைகளைக் கடந்து பலவற்றைக் கற்று, கலைவானில் மாணவர்கள் சிறகடிக்க வேண்டும்" என்கிறார். இவரின் மாணவர்களாக நூல் வெளியிட்ட ரா.ரவி பிரசாந்த் மற்றும் சக. மானேசா கூறுகையில், " பள்ளியிலிருந்து கல்லூரிக்கு வரும்போது ஒருவித தயக்கமும் அச்சமும் இருந்தது. ஆனால் எங்களை ஊக்கப்படுத்தி 'எங்களுக்குள்ளும் ஒரு திறமை இருக்கிறது' என்பதை வெளிக்கொண்டு வந்தவர் எங்கள் பேராசிரியர். அவரின் வழிகாட்டுதலால் பல்வேறு இடங்களுக்கு போட்டிகளில் பங்கேற்கச் சென்றோம். பிற திறமையான மாணவர்களோடு பழகும் போது பலவித அனுபவங்கள் கிடைத்தது. எத்தனை முறை சந்தேகம் கேட்டாலும் நேரம் காலம் கருதாது விளக்கம் கூறுவார். கல்லூரிக்குள் மாணவர்களாக வந்தோம், வெளியே செல்லும்போது நூலாசிரியராக சென்றோம். ஒரு ஆசிரியரின் அர்ப்பணிப்பு என்பது மாணவரின் வெற்றிக்குப் படிக்கட்டாக அமைகிறது. அவரைப் போலவே பேராசிரியராகி, சாதனையாளர்களைச் சமூகத்திற்கு வழங்க வேண்டும் என்பதே எங்கள் இலட்சியம் " என்கின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/literature/trichy-professor-making-young-students-into-creator




