ஒவ்வொரு கடவுள்களுக்கும் ஒவ்வொரு மலர் விசேஷமாக கருதி சமர்ப்பிக்கப்படுகிறது. சிவபெருமானுக்கு வில்வம், பெருமாளுக்கு துளசி, அனுமனுக்கு வெற்றிலை, அம்மனுக்கு வேப்பிலை போன்று விநாயகப் பெருமானுக்கு மிகவும் உகந்ததாக அருகம்புல் உள்ளது. புராணக் கதை முன்னொரு காலத்தில் அனலாசுரன் என்ற அசுரன் இருந்தான். அவன், தன் உடலில் இருந்து நெருப்பை கக்கி, தேவர்களையும், முனிவர்களையும், மக்களையும் துன்புறுத்தினான். இதனால் கவலை அடைந்த தேவர்கள், விநாயகப் பெருமானிடம் சென்று முறையிட்டனர். தேவர்களின் வேண்டுகோளை ஏற்று விநாயகர், அனலாசுரனுடன் போரிட்டார். விநாயகர் ஏவிய அனைத்து ஆயுதங்களையும் அனலாசுரன் நெருப்பை பயன்படுத்தி சாம்பலாக்கினான். இதனால் விநாயகப் பெருமான், அனலாசுரனை சிறிய உருவாக மாற்றி அப்படியே விழுங்கிவிட்டார். ஆனால் அனலாசுரனின் வெப்பத்தால் விநாயகரின் வயிறு எரிச்சலடைந்தது. இதனால் விநாயகர் வேதனை அடைந்தார். இதையடுத்து தேவர்கள் அனைவரும் விநாயகரை குளிர்விக்க முயன்றனர். வருண பகவான், மழை பொழிந்தார். இந்திரன், சந்தனம் பூசினார். அன்னை பார்வதி, பாற்கடலை விநாயகர் பக்கம் திருப்பிவிட்டார். சிவபெருமான் குளிர்ச்சியாக இருக்கும் பாம்பை விநாயகரின் இடுப்பை சுற்றிக் கட்டினார். ஆனால் அவர்கள் அனைவரது முயற்சியும் எந்த பலனும் தரவில்லை. இதையடுத்து தேவர்கள், காஷ்யப முனிவரின் உதவியை நாடினர். காஷ்யப முனிவர், 21 அருகம்புல்லை விநாயகரின் தலையில் வைத்தார். உடனேயே விநாயகரின் உடல் வெப்பம் தணிந்தது. விநாயகப் பெருமான் பெரும் மகிழ்ச்சி அடைந்தார். அன்றுமுதல் விநாயகர் வழிபாட்டில் அருகம்புல் முக்கிய இடம் பிடித்தது. நந்தி பகவான் சாப விமோசனம் யாஷினி தேவி என்ற தேவலோக மங்கை, விநாயகரை திருமணம் செய்ய விரும்பி, தவம் இருந்தார். ஆனால் இதற்கு விநாயகர் சம்மதம் தெரிவிக்கவில்லை. இருப்பினும், யாஷினி தேவியின் அன்பையும், பக்தியையும் மெச்சிய விநாயகர், தனக்கு விருப்பமான பொருளான அருகம்புல்லாக மாறி தன்னுடனே இருக்கும்படி வரம் அளித்ததாக கூறப்படுகிறது. ஒரு சமயம் சிவபெருமானும், பார்வதி தேவியும் தாயம் விளையாடியபோது, நடுவராக நந்தி பகவான் இருந்தார். அப்போது நந்தி பகவான், சிவனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பார்வதி தேவி, நந்திக்கு சாபமிட்டார். பின்னர் விநாயகர் சதுர்த்தியின்போது, விநாயகருக்கு உகந்த பொருளை சமர்ப்பித்து வழிபட்டால் சாப விமோசனம் கிடைக்கும் என்று அருளினார். அதன்படி நந்தி பகவான், விநாயகருக்கு அருகம்புல் சமர்ப்பித்து சாப விமோசனம் பெற்றதாக கூறப்படுகிறது. அருகம்புல் மாலை விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டால் அருளையும், பொருளையும் அள்ளித் தருவார், மனக் கவலையை நீக்கி மன மகிழ்ச்சி அருள்வார் என்பது நம்பிக்கை. வரும் 14-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து, அவருக்குப் பிடித்தமான கொழுக்கட்டை, மோதகம், சுண்டல், அவல், பொரி, கடலை, எள்ளுருண்டை போன்ற நிவேதனப் பொருள்களை சமர்ப்பித்து வழிபடுவது நற்பலன்களை தரும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/devotional/why-arugampul-garland-offered-to-vnayagar




