தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்றதாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட டாஸ்மாக் பார் ஊழியர் தலையில் காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி அமுதா நகர் 1வது தெருவைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (24). இவர், தூத்துக்குடி பைபாஸ் சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் சப்ளையராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், இரவு 10 மணிக்கு மேல் அப்பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்றுக் கொண்டிருந்தாராம். இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தரண்யா தலைமையிலான போலீஸார் அவரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் ஸ்டேஷன் பெயிலில் அவரை போலீஸார் விடுவித்துள்ளனர். காவல் நிலையத்தில் போலீஸார் அருணாச்சலத்தை கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. வீட்டிற்கு அவரை அழைத்துச் செல்லும்போது உடலில் காயங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்தக் காயம் ஏற்பட்ட நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். அருணாச்சலம் உயிரிழந்த செய்தி பரவியதும், அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மருத்துவமனை மற்றும் காவல் நிலையப் பகுதியில் திரண்டனர். விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் நடத்திய கடுமையான தாக்குதலாலேயே அருணாச்சலம் உயிரிழந்துள்ளார். இதற்குக் காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும், பர பரப்பான சூழலும் நிலவியது. சம்பவ இடத்திற்கு வந்த உயர் காவல் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாகத் தென்பாகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/crime/youth-died-after-police-investigation-relatives-alleging-custodial-attack-death




