புதுடெல்லி, 2029-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, 'ஜென் ஆல்ஃபா' (Gen Alpha) மற்றும் 'ஜென் இசட்' (Gen Z) என்று அழைக்கப்படும் இளம் தலைமுறையினருக்கு தேர்தல் நடைமுறைகள் மற்றும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. தேர்தல் நடைமுறைகளை நன்கு அறிந்தவர்களாகவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் எதிர்கால பிரசாரங்களுக்கு தலைமை தாங்கக் கூடியவர்களாகவும் இளம் தலைமுறையினரை மாற்றுவதே இந்த முயற்சியின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவின் 4,123 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலின்படி, நாட்டில் 18 முதல் 26 வயதுக்குட்பட்ட பிரிவில் மொத்தம் 14.78 கோடி பேர் உள்ளனர். இதில் 7.98 கோடி ஆண்கள், 6.79 கோடி பெண்கள் மற்றும் 9,000 மூன்றாம் பாலினத்தவர் ஆகியோர் அடங்குவர். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 10 அமைப்புகள் வீதம், மொத்தம் 50,000 'தேர்தல் விழிப்புணர்வு மன்றங்களை' (Electoral Literacy Clubs - ELCs) அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக, 15 லட்சம் பள்ளிகளில் உள்ள 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களை ஆணையம் அணுக உள்ளது. மேலும், 70,000 கல்லூரிகள் மற்றும் 1,400 பல்கலைக்கழகங்களுக்கும் சென்று தேர்தல் ஆணையம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. முன்னதாக, மாணவர்களுக்கு ஜனநாயகத்தின் நன்மதிப்புகள், தேர்தல் நடைமுறைகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் பங்கு மற்றும் செயல்பாடுகள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தும் நோக்கில், 'முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பு' (SVEEP) திட்டத்தின் ஒரு பகுதியாக 2018-ல் 'தேர்தல் விழிப்புணர்வு மன்றங்கள்’ (ELCs) தொடங்கப்பட்டது. இருப்பினும், வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப சூழலில், இளம் வாக்காளர்களிடம் நேரடித் தொடர்பை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, 'ELC 2.0' மூலம், 'தேர்தல் விழிப்புணர்வு மன்றங்கள்’ நவீன டிஜிட்டல் மன்றங்களாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/election-commission-takes-steps-to-create-awareness-among-the-younger-generation-about-the-importance-of-voting



