சென்னை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “நெடுஞ்சாலைகளையே தான் கண்டுபிடித்தது போல, எப்போதும் தற்பெருமை பேசி வருபவர் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி. 'நெடுஞ்சாலைத் துறை ஹீரோ” என்று, தனக்குத் தானே தம்பட்டம் அடித்து மகிழ்ச்சி அடையும் அமைச்சராகவும் அவர் இருக்கிறார். மோடி ஆட்சியில் நெடுஞ்சாலைகள் என்பது, சுங்கக் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கும் வழியாக மாறிவிட்டன. மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையாலும், மொத்த விற்பனை விலைக் குறியீடு அடிப்படையிலானகணக்கீட்டுச் சொதப்பலாலும், கடந்த நான்கு மாதங்களில் மூன்றாவது முறையாக கட்டணம் சுங்கக் கட்டணம் உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல், எரிவாயு போன்ற எரிபொருள் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால், மக்கள் பெரும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டணத்தை உயர்த்தியிருப்பது, நடுத்தர குடும்பங்களையும், வாடகை வாகன ஓட்டுநர்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது. ஆனால், இது பற்றியெல்லாம் கவலைப்படாமல், ‘நெடுஞ்சாலைகளை அமைத்து விட்டோம் - இந்தியா வளர்ந்து விட்டது" என்று தினமும் பொய் கதைகளைப் பரப்பி வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள 80 சுங்கச் சாவடிகளில் ஆண்டுக்கு ரூ. 4,200 கோடிக்கு அதிகமாக மோடி அரசு வசூல் செய்து வருகிறது. அதன் பிறகும் அடங்காமல், லாரிகளுக்கு ரூ. 30 வரை சுங்கக் கட்டணத்தை உயர்த்தி, மீண்டும் தமிழக மக்களுக்கு 'அல்வா” கொடுத்துள்ளது. லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தையும், சாமானிய மக்களின் பாக்கெட்டையும் பிடுங்கும் திருட்டு பாஜக அரசின் சுங்கக் கொள்ளை கடும் கண்டனத்திற்குரியது. சுங்க கட்டண உயர்வை மோடி அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் சுங்கக் கட்டணம் வசூலிக்கிறது மோடி அரசு. ஆனால், தமிழகத்திற்கு எந்த திட்டங்களை தராமல், கொடுக்க வேண்டிய நிதியையும் கொடுக்காமல் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. ரயில்வே துறைக்கு அதிக வருவாயை ஈட்டித் தரும் தமிழ்நாட்டிற்கு, 'வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்” ஒதுக்காமல் வஞ்சிக்கிறது. தமிழ்நாட்டை வெறும் பணம் காய்க்கும் மரமாக மட்டும் பயன்படுத்திக் கொண்டு, அந்த மரத்தையே வெட்ட நினைக்கும் மோடி அரசுக்கு, மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் வலுவான குரல் எழுப்புவோம்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-central-government-must-withdraw-the-highway-toll-robbery-tamil-nadu-congress-leader-manickam-tagore




